கேரள மாநிலம், கோட்டயத்தைச் சேர்ந்த இளைஞர் ராகுல் டி.நாயர் (24). கொச்சி காக்கநாட்டிலுள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்துவந்தார். அவர் கடந்த 18-ம் தேதி காக்கநாட்டிலுள்ள ஒரு ஹோட்டலிலிருந்து ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து, ஷவர்மா மற்றும் மயோனைஸ் ஆகியவற்றை பார்சலாக வாங்கிச் சாப்பிட்டுள்ளார். ஷவர்மா சாப்பிட்ட பின்பு ராகுல் டி.நாயருக்கு சற்று உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 19-ம் தேதி மருத்துவமனைக்குச் சென்று மருந்துவாங்கி உள்ளார். அவரது உடல்நிலை மிகவும் மோசமானதைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை அவர் காக்கநாட்டில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு வென்ட்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் ராகுல் டி.நாயர் இன்று மாலை மரணமடைந்தார்.

ஷவர்மா வாங்கிய ஹோட்டலில் ஆய்வு

ஷவர்மா சாப்பிட்டதால் ஃபுட் பாய்சன் காரணமாக அவர் மரணம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. ஆனாலும், பிரேத பரிசோதனை முடிவில்தான் அவரது மரணத்துக்கான முழு காரணம் குறித்த விவரங்கள் தெரியவரும் என மருதுவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. ராகுல் டி.நாயரின் உடல், பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதே சமயம் காக்கநாடு லே ஹையாத் என்ற ஹோட்டலிலிருந்து வாங்கிய ஷவர்மாவைச் சாப்பிட்ட பிறகுதான் உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக ராகுல் டி.நாயரின் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.

ஷவர்மா சாப்பிட்ட பின் உடல்நலக் குறைவால் இறந்த ராகுல் டி.நாயர்

அதைத் தொடர்ந்து, திருக்காக்கரை நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீஸார் அந்த ஹோட்டலுக்குச் சென்று விசாரணை நடத்தினர். மேலும், ஹோட்டலை மூடி சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். கேரளாவின் கண்ணூரில் ஷவர்மா, மயோனைஸ் ஆகியவை சாப்பிட்டு 16 வயதான தேவநந்தா என்ற மாணவி உட்பட சிலரின் மரணங்களைத் தொடர்ந்து, ஷவர்மா தயாரிக்க சில விதிமுறைகளை சுகாதாரத்துறை வெளியிட்டது. மேலும், முட்டையிலிருந்து மயோனைஸ் தயாரிக்கக் கூடாது எனவும், காய்கறிகளில் இருந்து மயோனைஸ் தயாரிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், ஹோட்டல்களில் திடீர் ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில், ஷவர்மா சாப்பிட்ட பின்பு உடல்நலக் குறைவு ஏற்பட்டு, இளைஞர் ஒருவர் மரணமடைந்த சம்பவம், கேரளாவில் மீண்டும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.