வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

வத்திகான் மற்றும் ரோம்

வத்திகான் ரோமன் கத்தோலிக்கர்கள் என்று அழைக்கப்படும் கிறிஸ்துவர்களின் மத தலைவரான போப்பாண்டவரின் இருப்பிடத்தை உள்ளடக்கிய அரண்மனையை கொண்டதாகும். இப்பொழுது போப்பாண்டவராக இருப்பவர் அர்ஜெண்டினாவைச் சேர்ந்த முதலாம் பிரான்சிஸ் ஆவார். போப் உலகெங்கிலும் இருக்கும் ரோமன் கத்தோலிக்க மத தலைவர்களினால் தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்.

உலகிலேயே மிகச் சிறிய நாடு வத்திகானே ஆகும். வத்திக்கான் பரப்பளவு வேண்டுவோர் கூகுள் செய்து பார்த்துக் கொள்ளலாம்.

வத்திகான் தனக்கென்று ஒரு தனி தபால் அலுவலகமும் வங்கியும் கொண்டது.

இத்தாலிய நாட்டின் தலைநகரான ரோமிற்கு வெகு அருகிலேயே வத்திகான் உள்ளது. பண்டைய காலம் தொடங்கி இன்று வரை வத்திகான் வரலாறும் ரோமையர் வரலாறும் பின்னிப் பிணைந்துள்ளது.

நாங்கள் ஸ்டுட்கார்ட்டில் இருந்து ஐரோப்பிய விமான கம்பெனியான யூரோவிங்ஸ் மூலம் ரோம் செல்ல திட்டமிட்டிருந்தோம்.

Vatican City

திங்கள் கிழமை பரபரப்பு ஸ்டுட்கார்ட் விமான நிலையத்தில் தெரிந்தது. ஐரோப்பாவில் விமான பயணம் ரயில் பிரயாணத்தை விட மலிவானது.

இரண்டு மணி நேர பயணத்தின் பின் ரோம் நகரை அடைந்தோம்.

ஐரோப்பியர்கள் பல மூட நம்பிக்கைகள் இன்றும் கொண்டவர்கள். 13 ஆம் எண் ராசியற்றது என்பதும் அவர்களின் மூடநம்பிக்கைகளில் ஒன்று. நாங்கள் பயணித்த விமானத்தில் 13ஆம் எண் இருக்கைகள் கொண்ட வரிசைகள் இல்லை. 12க்கு பின் 14 தான்.

ரோமிலும் நாங்கள் ஸ்விட்சர்லாண்டில் எடுத்தது போல ஐந்து நாட்களுக்கு ஒரு அப்பார்ட்மெண்டை வாடகைக்கு எடுத்திருந்தோம்.

வத்திகானை சுற்றி பார்க்க எங்களுக்கு அடுத்த நாள் ஏற்பாடாகி இருந்ததால் அன்று மதிய உணவிற்கு பின் ரோம் நகரை கால் நடையாக சுற்றி பார்க்க திட்டமிட்டோம்.

ரோம் நகர நடைபாதைகள் காபில்ட் ஸ்டோன்ஸ் என்று அழைக்கப்படும் பாறைகளில் இருந்து சதுர மயமாக வெட்டி எடுக்கப்பட்டு பதிக்கப்பட்டவை. அவற்றில் நடக்க செருப்பு அணிந்து நடப்பதை விட ஷூஸ் அணிந்து நடப்பதே உசிதமாகும்.

ரோம் நகர் முழுவதும் பழங்கால வடிவமைப்புடன் வடிவமைக்கப்பட்ட பிரமாண்ட கட்டிடங்கள். பிரமாண்ட கட்டிடங்களை தவிர்த்தால் ரோமன் கத்தோலிக்கர்களின் தேவாலயங்கள். தேவாலயங்கள் தவிர்த்தால் உணவகங்கள்.

இத்தாலிய உணவகங்களில் கிடைக்கும் பிஸ்ஸா, பாஸ்டா மற்றும் ஜெலாட்டோ எனப்படும் ஐஸ்கிரீம் வகைகள் மிக பெயர் பெற்றவை.

ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பள்ளி விடுமுறை மாதம் ஆன ஆகஸ்ட்டில் நாங்கள் சென்றதால் ரோம் மாநகர் பன்னாட்டு பயணிகளால் நிறைந்திருந்தது.

நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு வெகு அருகிலேயே ஒரு பேராலயம் இருந்தது. 1595இல் கட்ட ஆரம்பிக்கப்பட்ட இப்பேராலயம் 1608 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இந்த புனித பேராலயம் ஆண்ட்ரூஸ் என அழைக்கப்படும் அப்போஸ்தலருக்கு அர்ப்பணிக்கப் பட்டது. அப்போஸ்தலர்கள் என்பவர் இயேசு கிறிஸ்துவுக்கு உதவியாக இருந்த பன்னிருவர்கள்.

இந்த தேவாலயங்களில் இன்னொரு விஷேஷம் என்னவென்றால் ஒவ்வொன்றிலும் உலக பிரசித்தி பெற்ற மைக்கலாஞ்செலோவால் வரையப்பட்ட ஓவியங்களையோ அல்லது அவரால் பளிங்கினால் செதுக்கப்பட்ட கற்சிலைகளையோ காணலாம்.. இவை இரண்டும் இல்லையென்றால் மைக்கலாஞ்செலோ தாக்கம் கொண்ட வரை படங்களையும் சிலைகளையும் காண முடியும்.

பின்னர் மாலை ரோமில் உள்ள ட்ரெவி ஃபௌண்டென் என்று அழைக்கப்படும் இடத்திற்கு சென்றோம். இங்கு மாலையில் ரோமிற்கு வரும் உல்லாச பயணிகள் குழுமி நேரம் கழிப்பர். மேலும் இங்கு இந்தியா, வங்கதேசம் மற்றும் ஆஃப்ரிக்காவிலிருந்து வந்த சிலர் நடைபாதை ஓரங்களில் வியாபாரம் செய்வதை காண முடிந்தது.

ஆஃப்ரிக்க பெண்கள் அவர்கள் நாட்டு பாணியில் மேலை நாட்டு பெண்களுக்கு கட்டணம் வாங்கிக் கொண்டு சிகை அலங்காரம் செய்து விடுகின்றனர். பின்னர் நடந்து எங்கள் விடுதி திரும்பினோம்.

நாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு அருகில் மூவர் மேலை நாட்டு பாடல்களை கொண்ட இசைக் கச்சேரி செய்து கொண்டிருந்தனர். என்ன கனவுகளுடன் ரோமில் கால் வைத்தனரோ. இது போன்ற இசைக் கச்சேரிகளை ரோம் நகர் முழுவதும் உல்லாச பயணிகள் கூடும் இடங்களில் மாலை நேரங்களில் சர்வ சாதாரணமாக பார்க்கலாம்.

Vatican City

வத்திகான்

வத்திகானில் நாம் பார்க்க வேண்டிய இடங்களில் முக்கியமானவை மூன்று. அவை முறையே

சிஸ்டைன் சிற்றாலயம்

வத்திகான் அருங்காட்சியகம் மற்றும்

புனித ராயப்பர் எனப்படும் பீட்டரின் தேவாலயம்

நாங்கள் வத்திகானை சுற்றிப் பார்க்க முதலிலேயே ஒரு கைடட் டூரில் பதிவு செய்திருந்தோம்.

நீங்கள் வத்திகானை சுற்றி பார்க்க தனியாக சென்றீர்கள் என்றால் நுழைவுச்சீட்டு பெற மிகப் பெரிய வரிசையில் நிற்க நேரிடும். கைடட் டூரில் பதிவு செய்திருந்தீர்கள் என்றால் இந்த வரிசையை தவிர்க்க முடியும். அவர்களே நமக்கு நுழைவுச்சீட்டு பதிவுசெய்து தருவர். யூரோ சிறிது அதிகம் செலவு.

எங்களது டூர் காலை பத்தரை மணிக்கு துவங்கியது.

முதல் பதினைந்து நிமிடங்கள் வத்திகான் பற்றிய ஒரு முன்னுரை.

பத்து பயணிகளை எங்கள் குழு உள்ளடக்கி இருந்தது. எங்களை ஒரு பெண் வழி நடத்தி சென்றார். இத்தாலிய ஆக்சண்ட் கலந்த அவரது ஆங்கிலம் புரிந்து கொள்ள சற்று கடினமாக இருந்தது.

ரோஸ் வண்ண கொடி பொருந்திய ஒரு குச்சியை அவர் கையில் ஏந்திக் கொண்டு எங்களை வழி நடத்திச் சென்றார். குழு நபர்கள் அனைவருக்கும் ரோஸ் வண்ண பாட்ச் சட்டையில் பொருத்தப் பட்டது. இது எங்களை பிற பயணிகளிடம் இருந்தும் குழுக்களிடம் இருந்தும் பிரித்து காண்பிக்க உபயோகப்பட்டது.எங்களை வழி நடத்திச் சென்ற பெண் எங்கள் குழுவினருக்கு ஒரு ஹெட் ஃபோன் கொடுத்துவிட்டார்.

அந்த ஹெட் ஃபோன் மூலம் அவரது வர்ணனை தொடர்ந்தது. முதலில் சிஸ்டைன் சிற்றாலயத்தை அடைந்தோம்.

Vatican City

சிஸ்டைன் சிற்றாலயம் முழுவதும் இயேசு கிறிஸ்துவின் முந்தைய தலைமுறையினர் பற்றிய ஓவியங்கள் கொண்டது. இது மைக்கலாஞ்செலோவால் நான்கு வருடங்களில் வரையப்பட்டவை. நான்கு வருடங்கள் வரைய எடுத்துக் கொண்ட மைக்கலாஞ்செலோ அந்த ஓவியங்கள் வரைய தேவையான தூரிகைகள், வண்ணங்கள் மற்றும் கற்களை சேகரிக்க ஒரு வருடம் எடுத்துக் கொண்டாராம்.

இந்த உலக பிரசித்தி பெற்ற கண்ணை கவரும் ஓவியங்கள் கட்டிட கூறையில் பிரமாண்டமாக வரையப்பட்டுள்ளன. நாம் அந்த ஓவியங்களை பார்ப்பதற்கு கழுத்து வலியெடுக்கும் அளவுக்கு தலையை வளைத்துப் பார்க்க வேண்டும். அவ்வாறு பார்ப்பதற்கே நாம் கஷ்டப்படுவோமாயின் அந்த ஓவியங்களை வரைய ஓவியர் எவ்வளவு பிரயத்தனம் எடுத்திருப்பர் என்பதை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும்.

சிஸ்டைன் சிற்றாலயம் கடந்து சென்றோம் என்றால் வத்திகான் அருங்காட்சியகத்தை அடையலாம்.

இந்த அருங்காட்சியகம் முழுவதும் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை பற்றியும் அவருடன் சம்பந்தப்பட்ட அப்போஸ்தலர்கள் சிலரது ஓவியங்களும் வரையப்பட்டுள்ளன.

இந்த ஓவியங்களில் ஒன்றில் மைக்கலாஞ்செலோ தன்னையே வரைந்துள்ளதாக கருதப்பட்டு வருகிறது. இந்த அருங்காட்சியக ஓவியங்களை வரைய மைக்கலாஞ்செலோ ஐந்து வருடங்கள் எடுத்துக் கொண்டதாகவும் அவற்றை வரைய தேவையான உபகரணப் பொருட்கள் சேகரிக்க ஒரு வருடம் எடுத்துக் கொண்டதாகவும் கருதப்படுகிறது.

மைக்கலாஞ்செலோவை பெருமைப் படுத்தும் வகையில் இந்திய தபால் துறை மைக்கலாஞ்செலோவின் ஓவியங்களில் நான்கை எழுபதுகளில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Vatican City

அக்காலத்தைய ரோமர்கள் சுருட்டை முடியுடன் நீல நிறக் கண்கள் கொண்டு இருந்தவர்களாக கருதப்படுகிறது. இந்த அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பளிங்கு சிலை நீல நிற கண்கள் கொண்டுள்ளது.

இந்த அருங்காட்சியகத்தில் பல பளிங்கு சிலைகளும் அவற்றை செதுக்கும் பொழுது உடைபட்ட சிலைகளின் பகுதிகளும் காட்சி படுத்தப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகத்தை கடந்து ரோமன் கிறிஸ்துவர்களின் முதல் தலைவரான பீட்டர் கல்லறையின் மேல் கட்டப்பட்டுள்ள பேராலயத்தை அடைந்தோம்.

இந்த பஸிலிக்கா எனப்படும் பேராலயம் தான் உலகில் உள்ள ரோமன் கத்தோலிக்க தேவாலயங்களிலேயே மிகப் பெரியது.

இந்த பேராலயத்திலும் கண்ணை கவரும் ஓவியங்களும் சிற்ப வேலைப்பாடுகளும் நிறைந்துள்ளன.

எங்கள் வர்ணனையாளர் தேவாலயத்தின் அடிவாரத்தில் செல்லும் வழி கண்பித்துவிட்டு எங்களை பிரிந்து சென்றுவிட்டார்.

இந்த பேராலயத்தின் கீழே பல போப்பாண்டவர்கள் இறந்த பிறகு அவர்களுடைய உடல்கள் புதைக்கப்பட்டுள்ளன. தற்போதைய போப் ஃபிரான்சிசும் தனக்கென ஒரு கல்லறையை இப்போதே தேர்வு செய்து கொண்டுள்ளார்.

இக்கல்லறைகளில் முன்னாளைய சைப்ரஸ் நாட்டு அரசியான சார்லெட்டின் கல்லறையும் உள்ளது. இந்த சைப்ரஸ் நாட்டு அரசியின் கல்லறை ஒன்றே இங்கே அமைந்துள்ள போப்கள் மற்றும் புனிதர்கள் அல்லாத சாதாரண நபர் ஒருவரின் கல்லறையாக உள்ளது.

சிஸ்டைன் தேவாலயம் மற்றும் பீட்டர் பேராலயத்தில் அமைந்துள்ள மற்றும் இடம் பெற்றுள்ள ஓவியங்கள் சிலைகளின் அழகை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அவை நேரில் பார்த்து ரசிக்கப் பட வேண்டியவைகளே ஆகும்.

அப்படியே வெளியில் வந்தால் பீட்டர் சதுக்கம் வந்துவிடுகிறது. நாங்கள் கலை வல்லுநர்களாய் இல்லாதிருந்த போதும் ஒரு அருமையான அனுபவமாக இந்த வத்திகான் சுற்றுலா அமைந்தது.

வத்திகானை சுற்றி பார்க்க எங்களுக்கு மூன்று மணி நேரம் ஆனது.

வெளியில் வந்து உணவி விடுதி நோக்கி சென்றோம்.

இங்கு இத்தாலியில் கிடைக்கும் உணவு பற்றி சொல்லியே ஆக வேண்டும். நீங்கள் மாமிச உணவு உண்பவராய் இருந்தால் ஓரளவு சமாளித்துக் கொள்ளலாம். மரக்கறி உணவு உண்பவராய் இருந்தால் சிறிது கடினம் தான். சாலட் எனப்படும் பச்சை காய்கறிகளிலும் கூட மாமிசம் கலந்தே அளிக்கப்படுகிறது.

இந்திய வகை உணவுகள் உண்ண நாங்கள் கூகுளில் தேடிய பொழுது இரண்டுஉணவகங்கள் சிக்கின. ஒன்று அன்னபூர்னா மற்றது ஜெய்ப்பூர் ரெஸ்டரெண்ட். அன்னபூர்னாவில் நாங்கள் முன் பதிவு இல்லாமல் சென்றதால் உண்ண முடியவில்லை.

இரவு ஜெய்ப்பூர் ரெஸ்டரெண்ட்டில் உணவு உண்டோம். இந்திய உணவு வாய்க்கு தெய்வாமிர்தமாக இருந்தது.

அலைந்து திரிந்த களைப்பில் படுக்கைக்கு சென்றோம்.

அடுத்த நாள் புதன்கிழமை. போப்பாண்டவர் பொது மக்ககளுக்கு வாரத்தில் இரு நாட்கள் காட்சி தருவார். அது வார ஞாயிற்று கிழமைகளிலும் புதன் கிழமைகளிலும் ஆகும்.ஒவ்வொரு முறையும் பத்தாயிரம் பொது மக்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் அதற்கு முன் பதிவு தேவை. முன் பதிவிற்கு கட்டணம் எதுவுமில்லை. இலவசம் தான். ஆனால் முன் பதிவு செய்யாததால் எங்களால் அக்காலை நிகழ்வில் கலந்து கொள்ள முடியாமல் போனது.

அடுத்த நாள் ரோம் நகரில் உள்ள சில பேராலயங்களையும் மாலை கட்டிட வேலைப்பாட்டிற்கே முன்னோடியாய் இருந்த பாந்தியனையும் சுற்றிப் பார்க்க திட்டமிட்டிருந்தோம். ரோமுலசும் எரேமுசும் ஸ்தாபித்தபொழுது சிறிதும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் ரோமை மாநகர் பிற்காலத்தில் இவ்வளவு பிரசித்தி பெறப்போகுமென்று.

கிறிஸ்துவர்களின் புனித ஸ்தலமாக கருதப்படும் ஜெருசலெம்- பெத்லகெமிற்கும் வத்திகானுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் ஜெருசலெம் – பெத்லகெமில் இயேசு கிறிஸ்து மற்றும் அவரது தாய் மேரி மாதா வாழ்ந்த ஸ்தலங்களை நாம் காணலாம். வத்திகானிலோ மதத்தலைவர்களான போப்பாண்டவர்களுக்கே முக்கியஸ்துவம் அதிகம் தென்படுகிறது

ரோம் மாநகரில் எங்கள் அனுபவம் பற்றி அடுத்த பாகத்தில்.

அன்புடன்

எஃப்.எம்.பொனவெஞ்சர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.