தமிழ்க் குடும்பங்களின் தலைமகளுக்கு இது 26-வது ஆண்டு. ஒரு பெண்கள் பத்திரிகை கால் நூற்றாண்டுக்கும் மேலாக வெற்றிமுகத்துடன் பயணிப்பது, பெருமைமிகு தருணம். இதை சாத்தியப்படுத்தியது, எங்களுக்கு எல்லாம் வல்ல வாசகர்களான நீங்கள் தான். நெஞ்சம் நிறை நன்றிகளும் வணக்கங்களும்.

அவள் விகடன் ஆரம்பிக்கப்பட்டபோது, அன்றைய சூழலில் பெரும்பான்மை பெண்கள் சுழன்ற அச்சுக்களான குடும்பம், கிராஃப்ட், சமையல், சீரியல் உள்ளிட்டவற்றுடன், அவர்களை அடுத்தகட்டத்துக்கு கைப்பிடித்துச் அழைத்துச் செல்லும் வகையிலான விழிப்புணர்வு, தன்னம்பிக்கை, சுயமுன்னேற்றக் கட்டுரைகளையும் இதழில் இடம்பெறச் செய்யும் பொறுப்பை ஏற்றுக்கொண்டோம்.

ஒவ்வொரு ஐந்து வருடங்களிலும் கால மாற்றம், சமூக மாற்றம், பெண்களின் முன்னேற்றத்துடன் அவள் விகடன் இணைந்து பயணித்தது. சொல்லப்போனால்… காலத்தேரில் ஒருபடி முன்னே சென்று நின்று தன் வாசகத் தோழிகளை முன்னோக்கி வரச்சொல்லி வரவேற்று நின்றது. அந்தப் புதுமையும், புரட்சியும், கற்றலும்தான் அவளின் பலம். இந்த முயற்சிகளுக்கு எல்லாம் அஸ்திவாரம்… புதியன புகுதலுக்கு எப்போதும் தயாராக இருக்கும், முன்னோடியாக இருக்கும் தமிழ்நாட்டுப் பெண்களின் வாழ்வனுபவமும், வாசிப்பனுபவமும். அந்த வகையில், இந்த வெற்றிக்கும் நீங்களே அச்சாணி.

இதழ் மூலம் வாசகப் பரப்பை வந்தடைந்த அவள் விகடன், தொடர்ந்து ஜாலி டே, தொழிற்பயிற்சிகள், கல்லூரி கல்சுரல்ஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகள், வலைதளம், சோஷியல் மீடியா தளங்கள், வாட்ஸ்அப் குழுக்கள், வெபினார்கள், முகாம்கள், அவள் விருதுகள் என 360 டிகிரியிலும் வாசகிகளுடன் இப்போது கைகோத்துப் பயணிக்கிறது. ஒரு வீட்டில் பாட்டி, அம்மா, மகள் என மூன்று தலைமுறைப் பெண்களுக்கும், அச்சிதழ், யூடியூப், இன்ஸ்டா என அவரவர்களின் களத்தில் அவர்களுக்கான செய்திகளைக் கொண்டு சேர்க்கும் பாய்ச்சலால்தான்… இளமையுடன் மிளிர முடிகிறது.

பல்துறைசார் தனித்துவத் தொடர்கள், மருத்துவ விழிப்புணர்வு, உறவுச் சிக்கல்களுக்குத் தீர்வு, சுயமுன்னேற்றம், கைத்திறன், ஃபேஷன், பொருளாதாரம், அழகு, ஆன்மிகம், தொழில்நுட்பம், சினிமா, சீரியல், வாழ்வியல், பயன்பாடு, கல்வி என… இல்லையென்று சொல்ல எதுவுமில்லை எனுமளவுக்கு இதழில் இடம்பெறும் கட்டுரைகளைப் பார்த்துப் பார்த்துக் கோக்கிறோம்… கைப்பிள்ளைக்கு மை தீட்டும் கவனத்தோடும் மகிழ்வோடும்.

நதியின் அடியில் கிடக்கும் கூழாங்கல் போல வானம் அறியாத வாழ்தல் அமைந்த பெண்கள், கிடைத்த வாய்ப்பை பற்றிக்கொண்டு வைராக்கியத்துடன் வாகை சூடிய கட்டுரைகள், இதழின் மையச்சரடு. அதைப் படித்து, பற்றிக்கொண்டு அவர்களைப் போலவே தாங்களும் வெற்றிபெற வாசகர்கள் பெற்ற உந்துதல்தான்… அவள் எழுத்து களின் முதன்மை நோக்கம். அந்த வகையில், ஆயிரம் ஆயிரம் பெண்களின் வெற்றியில் ஒரு புள்ளியாக அவளின் பங்களிப்பும் இருக்கிறது என்பதைவிட, எதைச் சொல்வது எங்கள் வெற்றியென?!

ஆத்மார்த்தமான நம் பந்தம் இன்னும் பல தசாப்தங்கள் நீள… நாங்கள் பொறுப்பு!

உரிமையுடன்,

ஸ்ரீ

ஆசிரியர்

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.