சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப்பைப் போட்டி நடந்து வருகிறது.

இந்தப் போட்டியின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் வாயில் எண் 4 அருகே ரசிகர்களிடமிருந்தும் வியாபாரிகளிடமிருந்தும் பறிமுதல் செய்த இந்தியத் தேசியக்கொடியைக் குப்பையில் வீசியதாக ஒரு வீடியோ இணையத்தில் பயங்கர வைரலானது. தமிழக பா.ஜ.க தலைவரான அண்ணாமலையும் அந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்து தனது கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார். சேப்பாக்கத்தில் என்ன நடந்தது என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

முதலில் அண்ணாமலை கூறியிருப்பதாவது, “தி.மு.க அமைச்சரான பொன்முடியின் மகனும் தமிழ்நாட்டு கிரிக்கெட் சங்கத்தின் தலைவருமான அசோக் சிகாமணி தங்களின் அரசியல் கொள்கைகளை இங்கே திணித்து இந்தியத் தேசியக்கொடியை அவமதித்திருக்கிறார்.

மைதானத்தில் பாதுகாப்புக்காக இருந்த காவல்துறையினர் தேசியக்கொடியை எடுத்துச் செல்ல ரசிகர்களுக்குத் தடை விதித்திருக்கின்றனர். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு இந்த அதிகாரத்தைக் கொடுத்தது யார்? தேசியக்கொடியை அவமதித்த காவலருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தி.மு.க அரசு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல் ஊழலில் திளைத்திருக்கும் திமுக அரசிற்கு எதிராகத் தேசியக்கொடியை அவமதித்தற்காகப் போராட்டத்தில் இறங்குவோம்!” என அண்ணாமலை தனது கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார்.

தேசியக்கொடியைப் பிடுங்கி குப்பையில் வீசியதற்காக உதவி ஆய்வாளர் நாகராஜன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டிருக்கிறார். ஆனால், பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மைதானத்தில் தேசியக்கொடியே அனுமதிக்கப்படவில்லை என ஒரு விஷயத்தைத் தனது ட்வீட்டில் குறிப்பிட்டிருந்தார். அதில் முழுமையாக உண்மையில்லை. போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த போது பல ரசிகர்களும் மைதானத்தில் தேசியக்கொடியுடன் இருந்தனர். கொடியை வீசி ரசிகர்கள் ஆர்ப்பரித்தும் கொண்டிருந்தனர். ரசிகர்கள் தேசியக்கொடியைக் கொண்டு வரும்போது இரண்டு விதமாகக் கொண்டு வருவார்கள்.

சேப்பாக்கத்தில் தேசியக் கொடியுடன் ரசிகர்கள்

ஒன்று துணியாலான கொடியை மட்டும் கொண்டு வருவார்கள். அப்படிக் கொண்டு வரும்பட்சத்தில் அதற்கு பெரும்பாலும் தடை விதிக்கப்படுவதில்லை. மைதானத்திற்குள் அனுமதிக்கப்படும். இரண்டாவது வகை, கம்பு அல்லது பைப்போடு கட்டப்பட்ட தேசியக்கொடியை சில ரசிகர்கள் கொண்டு வருவார்கள்.

பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்த வகை தேசியக்கொடிகள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவதில்லை. ஐ.பி.எல்-இன் போதுமே இதேதான் நிலைமை. சில போட்டிகளின் போது பாதுகாப்பு காரணங்களுக்காக ரசிகர்கள் கொண்டு வரும் கொடிகளை வெளியே வாங்கி வைத்துவிட்டு மைதானத்திற்குள்ளேயே அணி நிர்வாகத்தின் சார்பில் ரொம்பவே மெலிதான பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிக்காத வகையில் கொடிகள் விநியோகிக்கப்படும்.

கொடியுடன் ரசிகர்கள்

மேலும், ரசிகர்கள் இந்த இந்தப் பொருள்களை மைதானத்திற்குள் கொண்டு வரலாம். இவற்றைக் கொண்டு வரக்கூடாது என்ற ஐ.சி.சியின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமும் ஒரு பட்டியலை வெளியிட்டிருக்கிறது. இந்தப் பட்டியலை போஸ்டராக அடித்து மைதானத்தைச் சுற்றியுள்ள சுவர்கள் முழுவதும் ஒட்டியிருக்கிறார்கள். அதிலும் தேசியக்கொடிக்கெல்லாம் அனுமதியில்லை என்று எந்தக் கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. அறிவுறுத்தலையும் மீறித் தடை செய்யப்பட்ட பொருள்களைக் கொண்டு வரும் ரசிகர்களிடம் அந்தப் பொருளை வாங்கி வாயிலிலேயே வைத்துப் பாதுகாக்கவும் செய்கிறார்கள். ரசிகர்கள் போட்டியைக் கண்டுவிட்டுச் செல்லும்போது பொருள்களை மீண்டும் எடுத்துக் கொள்ளலாம். வீரர்களின் பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் கடந்த காலங்களில் நடந்த சம்பவங்கள்தான் இப்படியான பாதுகாப்பு நடைமுறைகளுக்குக் காரணமாக இருக்கிறது.

Guidelines

மைதானத்திற்குள் ஆப்கானிஸ்தான் கொடிகளையும் பார்க்க முடிந்தது, இந்தியக் கொடிகளையும் பார்க்க முடிந்தது. அந்தக் காவலர் தேசியக்கொடியைப் பிடுங்கி குப்பைத் தொட்டியில் வீசியது தவறுதான். ஆனால், மைதானத்திற்குள் தேசியக்கொடியே அனுமதிக்கப்படவில்லை என்பதிலும் காவலர்கள் முழுமையாகத் தேசியக்கொடியைத் தடுத்தார்கள் என்பதிலும் உண்மையில்லை.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.