வேட்டை திட்டமிட்டப்படி அமையாமல் கொடும்பசியோடு காத்திருக்கும் மிருகம் ஒன்று தீரா வெறியோடு இரையை நோக்கி பாயும் அந்தத் தருணம் எப்படியிருக்கும்? சின்னச்சாமி ஸ்டேடியத்தில் சதமடித்துவிட்டு இரண்டு கால்களும் காற்றில் பறக்க, ஆராவார கூச்சலிட்ட டேவிட் வார்னருக்கு ஒத்ததுதான் அந்தத் தருணம்.

கொடும்பசியோடு காத்திருந்த வார்னரிடம் சிக்கிய இரையாகத்தான் நேற்று பாகிஸ்தான் இருந்தது.

Aus Vs Pak

தொடரைச் சலனமே இன்றி மெதுவாகத் தோல்வியோடு ஆரம்பித்த ஆஸ்திரேலிய அணி, இப்போதுதான் தங்களின் வழக்கமான ஃபார்மிற்குத் திரும்பியிருக்கிறது. பாகிஸ்தானை முழுமையாக முடக்கி தங்களின் வழக்கமான ஆதிக்கத்தை வெளிக்காட்டி ஆஸ்திரேலியா வென்றிருக்கிறது.

நடப்பு உலகக்கோப்பையில் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் வைத்து நடக்கும் முதல் போட்டி இதுதான். இதற்கு முன்பு நடந்த போட்டிகளெல்லாம் வேறொரு பாணியில் இருந்ததைப் போலவும் இந்தப் போட்டி மட்டும் ஒரு ஐ.பி.எல் போட்டியின் பாணியில் இருப்பதைப் போலவும் தோன்றியது. காரணம், சின்னச்சாமி மைதானத்தின் பிட்ச்! முழுக்க முழுக்க பேட்டர்களுக்கு சாதகமான பிட்ச் இது. டாஸைத் தோற்றாலும் பேட்டிங் கிடைத்த மகிழ்ச்சியில் ஆஸ்திரேலியா ரொம்பவே சிறப்பாக ஆடியது.

வார்னரும் மிட்செல் மார்ஷூம் இணைந்து மட்டுமே 259 ரன்களை எடுத்திருந்தனர். ஆரம்பத்திலிருந்தே பந்து விண்ணில்தான் பறந்து கொண்டிருந்தது. ஹரீஸ் ராஃபின் ஓவரையெல்லாம் மனசாட்சியே இல்லாமல் இருவரும் சிதறடித்தனர்.

ஒரே ஓவரில் 24 ரன்கள் ஒரே ஓவரில் 16 ரன்கள் என ஹரீஸ் ராஃபும் ஆஸ்திரேலிய ஓப்பனர்களின் அதிரடிக்கு ரசிகராக மாறி இதயங்களை ரன்களாக மாற்றி வாரி வழங்கிக் கொண்டிருந்தார்.

Warner

ஹரீஸ் ராஃப் மட்டுமில்லை பந்துவீசிய அத்தனை பேருக்கு எதிராகவும் இந்த இணை அதே அட்டாக் மோடில்தான் ஆடியது. இடையில் வார்னருக்கு ஒரு கேட்ச் ட்ராப்பை வேறு செய்திருந்தனர். வார்னர் அப்போது வெறும் 10 ரன்களில்தான் இருந்தார். இந்த கேட்ச் ட்ராப்புக்குப் பிறகுதான் முழு வேகமெடுத்து பாகிஸ்தானைக் காலி செய்தார். வார்னர் 163 ரன்களையும் மிட்செல் மார்ஷ் 121 ரன்களையும் எடுத்தே ஆட்டமிழந்திருந்தனர். ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு முதல் முக்கிய காரணமே இந்தக் கூட்டணிதான்.

கடந்த போட்டிகளில் ஆஸ்திரேலியா சறுக்கியதற்கும் இந்தக் கூட்டணி பெர்ஃபார்ம் செய்யாமல் இருந்ததே மிக முக்கிய காரணமாக இருந்தது. இதற்கு முன்பு இந்தத் தொடரில் ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகளில் ஆடியிருந்தது. இந்த 3 போட்டிகளில் ஒரு போட்டியில் கூட இந்தக் கூட்டணி அரைசதத்தைத் தாண்டவில்லை. இலங்கைக்கு எதிரான கடந்த போட்டியில் மிட்செல் மார்ஷ் மட்டும் அரைசதம் கடந்திருந்தார். இந்தப் போட்டிக்கு முன்பாக இந்த உலகக்கோப்பையில் 17 லீக் போட்டிகள் நடந்திருந்தன. இந்த 17 போட்டிகளில் 13 சதங்கள் பதிவாகியிருந்தன. அதிகபட்சமாக தென்னாப்பிரிக்கா சார்பில் 4 சதங்கள் அடிக்கப்பட்டிருந்தன.

Marsh

ஆஸ்திரேலியா சார்பில் ஒரு சதம் கூட அடிக்கப்படாமல் இருந்தது. இதெல்லாமே ஆஸ்திரேலியாவின் சறுக்கலுக்கு ஒரு காரணமாக அமைந்திருந்தது. ஆனால், இந்தப் போட்டியில் அந்தக் குறைகளையெல்லாம் முழுமையாக நிவர்த்தி செய்திருந்தது இந்த ஆஸ்திரேலிய இணை.

வார்னரும் மார்ஷூம் ஆட்டமிழந்த பிறகு மற்ற ஆஸ்திரேலிய பேட்டர்கள் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை என்றாலும் போதுமான ஸ்கோரை எட்டியது ஆஸ்திரேலியா. பாகிஸ்தானுக்கு 368 ரன்கள் டார்கெட்.

பாகிஸ்தான் அணி 305 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருந்தாலும் தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவிற்குக் கொஞ்சம் பயம் காட்டவே செய்தது. வார்னரும் மிட்செல் மார்ஷூம் ஆஸ்திரேலியாவிற்கு செய்ததைப் போன்று ஷஃபீக்கும் இமாம் உல் ஹக்கும் பாகிஸ்தானுக்கு செய்ய முனைந்தனர். ஓரளவுக்கு அதில் வெற்றியும் கண்டிருந்தனர். இருவரும் இணைந்து 134 ரன்களை எடுத்திருந்தனர். நிலைத்து நின்று அதேநேரத்தில் ரன்ரேட்டும் பெரிதாக விழுந்துவிடாமல் பக்குவமாக ஆடியிருந்தனர்.

இந்த இணையை ஆஸ்திரேலிய மெயின் பௌலர்கள் யாராலும் பிரிக்க முடியவில்லை. ஸ்டாய்னிஸ் வந்துதான் இவர்களை வீழ்த்தினார். வீசிய முதல் பந்திலேயே ஷஃபீக்கை வீழ்த்தியவர், அடுத்த ஓவரிலேயே இமாம் உல் ஹக்கையும் வீழ்த்தினார். இங்கிருந்தே பாகிஸ்தான் சரியத் தொடங்கிவிட்டது.

இந்த இமாலய இலக்கை பாகிஸ்தான் எட்ட வேண்டுமெனில் அவர்களின் முதுகெலும்பாக விளங்கும் பாபர் அசாமும் ரிஸ்வானும் பெர்ஃபார்ம் செய்திருக்க வேண்டும். ஆனால், இந்தப் போட்டியில் அவர்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் ஆடவில்லை. பாபர் அசாம் 18 ரன்களையும் ரிஸ்வான் 46 ரன்களையும் மட்டுமே எடுத்திருந்தனர். இருவரின் விக்கெட்டையும் ஆடம் ஜாம்பாவே வீழ்த்தியிருந்தார். சின்னச்சாமி ஸ்டேடியம் மாதிரியான முழுமையாக பேட்டர்களுக்கு ஒத்துழைக்கக்கூடிய மைதானத்தில் ஸ்பின்னர்கள் அட்டாக்கிங்காக வீசி விக்கெட் எடுப்பது ரொம்பவே கடினம். சஹால் அதை பல முறை சாதித்து காண்பித்திருக்கிறார்.

Adam Zampa

இந்தப் போட்டியில் ஆடம் ஜாம்பாவும் அந்த விதத்தில் சிறப்பாக வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அணியின் ஒரே மெயின் ஸ்பின்னர் ஜாம்பா மட்டும்தான். முதல் இரண்டு போட்டிகளில் அவர் சரியாக பெர்ஃபார்ம் செய்யவில்லை. இலங்கைக்கு எதிரான கடந்த போட்டியிலும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இந்தப் போட்டியிலும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். ஆடம் ஜாம்பா நன்றாக பந்துவீசிய இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வென்றிருக்கிறது. ஹேசல்வுட்டும் வழக்கம்போல இந்தப் போட்டியிலும் நன்றாக வீசியிருந்தார். 10 ஓவர்களையும் முழுமையாக வீசிய ஹேசல்வுட்டின் எக்கானமி 4 க்கும் கீழ்தான் இருந்தது. பெங்களூருவின் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் ஒரு பௌலர் 4 க்கு கீழ் எக்கானமி கொண்டிருப்பதெல்லாம் உச்சிமுகர் பாராட்டுக்கு உரித்தது.

Stoinis

62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்த பாகிஸ்தான் அணி தொடர்ச்சியாக அடையும் இரண்டாவது தோல்வி இது. ஆஸ்திரேலியா தொடர்ச்சியாக பெறும் இரண்டாவது வெற்றி இது. புள்ளிப்பட்டியலின் கணக்குகளெல்லாம் அப்படியே மாறிக் கொண்டிருக்கிறது. தொடரும் சுவாரஸ்யமாக மாறிக் கொண்டே இருக்கிறது.

எந்த நான்கு அணிகள் அரை இறுதிக்குச் செல்லும்? உங்கள் கணிப்பை கமென்ட்டில் சொல்லுங்கள்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.