தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் அடுத்த மாதம் வெவ்வேறு தேதிகளில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில், ஒன்றுபட்ட ஆந்திரப் பிரதேசத்தில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ், 2014-ல் ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா என இரு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்ட பிறகு நடந்த இரு சட்டமன்றத் தேர்தலிலும் தோல்வியைச் சந்தித்தது. இத்தகைய நிலையில், தெலங்கானாவில் மூன்றாவது முறையாகத் தோல்வியடையாமல் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தீவிர பிரசாரம் மேற்கொண்டுவருகிறது.

ராகுல் காந்தி

தெலங்கானா தேர்தல் அறிவிப்புக்கு முன்னர், சோனியா காந்தியை நேரில் சந்தித்த ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளா, தனது கட்சியை காங்கிரஸுடன் இணைக்கப்போவதாகப் பேச்சுகள் எழுந்தன. ஆனால், கடைசி நேரத்தில், `நாங்கள் தனித்துக் களமிறங்குகிறோம்’ என ஷர்மிளா அறிவித்ததும், அத்தகைய பேச்சுகள் அப்படியே காற்றில் கரைந்துவிட்டன. இப்படியிருக்க காங்கிரஸுக்கும், ஆளும் பாரத ராஷ்டிர சமிதிக்கும் (பி.ஆர்.எஸ்) நேரடிப் போட்டி ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில், தெலங்கானாவில் தீவிர பிரசாரம் மேற்கொண்டுவரும் ராகுல் காந்தியை, `ஒரு தலைவராகவே பார்க்கவில்லை’ என்று முதல்வர் கே.சி.ஆரின் மகனும், அமைச்சருமான கே.டி.ராமா ராவ் சாடியிருக்கிறார்.

தெலங்கானா தேர்தல் தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய கே.டி.ராமா ராவ், “அவரை (ராகுல் காந்தி) நான் ஒரு தலைவராகக் கருதவில்லை, வெறும் வாசகராக மட்டுமே பார்க்கிறேன். எழுதிக் கொடுக்கப்பட்ட ஸ்கிரிப்டுகளை அப்படியே படிக்கிறார். அதில், என்ன எழுதியிருக்கிறது என்பதைக்கூட கவனிக்காமல், தெலங்கானாவில் ஊழல் அதிகரித்துவிட்டதாகக் கூறுகிறார். மேலும், தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி, தாவூத் இப்ராஹிமையும், சார்லஸ் சோப்ராஜையும்விட ஆபத்தானவர். ஆனால், ராகுல் காந்தி ஓர் அப்பாவி என்பதால் அதெல்லாம் அவருக்குத் தெரியாது” என்று கூறினார்.

கே.டி.ராமா ​​ராவ்

முன்னதாக, நேற்றைய தினம் ஒரு கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “ஆளும் பி.ஆர்.எஸ்., பா.ஜ.க., ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் ஆகியவை தங்களுக்குள் ஒன்றுக்கொன்று உதவிக்கொள்கின்றன. பா.ஜ.க., ஏ.ஐ.எம்.ஐ.எம் ஆகிய கட்சிகளுக்கு வாக்களிப்பதென்பது பி.ஆர்.எஸ்-ஸுக்கு வாக்களிப்பதாகும். என்மீது 24 வழக்குகள் இருக்கின்றன. பா.ஜ.க-வை எதிர்த்ததால் அன்று எனது மக்களவை உறுப்பினர் பதவி ரத்துசெய்யப்பட்டது. ஆனால், இன்னொரு பக்கம் அமலாக்கத்துறை, சி.பி.ஐ அல்லது வருமான வரித்துறை ஆகியவை சந்திரசேகர ராவை எதுவும் கேட்கவில்லை” என்று விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.