விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த பெரமண்டூர் கிராமத்தில் அ.தி.மு.க சார்பில் பூத் கமிட்டி முகவர்கள் அமைப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் பேசுகையில், “தேர்தல் வந்தால்தான் மத்திய அரசுக்குப் பெண்களைப் பற்றி தெரிகிறது. ஒன்பது வருடங்களாக ஆட்சியில் இருந்தபோதெல்லாம் அவர்களுக்குத் தெரியவில்லை. இன்னும் மூன்று மாதங்களில் தேர்தல் வரப்போகிறது என்பதால், பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று சட்டம் கொண்டுவருகிறார்கள். நாளைக்கே அது நடைமுறைக்கு வரும் என்கிறீர்களா… வராது. மக்கள்தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுசீரமைப்பு நடக்க வேண்டும். இதெல்லாம் நடக்கவே எட்டு, ஒன்பது வருடங்கள் ஆகும். ஆனால் மகளிருக்கான இட ஒதுக்கீடு காலத்தின் கட்டாயம். கொடுத்தே ஆக வேண்டும்.

சி.வி.சண்முகம்.

அ.தி.மு.க-வில் மட்டும்தான் யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எந்தப் பொறுப்புக்கு வேண்டுமானாலும் வரலாம். எந்தப் பொறுப்புக்கு வேண்டுமானாலும் நீங்கள் ஆசைப்படலாம். அதை நிறைவேற்றித் தருகிற இயக்கமும் அ.தி.மு.க-தான். நமக்கெல்லாம் எம்.எல்.ஏ., எம்.பி சீட் தருவார்களா என்று நீங்கள் நினைக்கவே வேண்டியதில்லை. ஆனால், அது தி.மு.க-வாக இருந்தால் நடக்காது. ஏனெனில், அது குடும்பக் கட்சி. தலைமை எப்படியோ அப்படித்தான் மாவட்டத்திலும். மேலே கருணாநிதி குடும்பம், இங்கு பொன்முடி குடும்பம். அவன், அவனுடைய பிள்ளை, பேரன்… அப்படித்தான் வருவார்கள். ஆனால் அ.தி.மு.க-வில் யார் வேண்டுமானாலும் எம்.எல்.ஏ., எம்.பி ஆகலாம். ஏன் முதலமைச்சராகக்கூட வரலாம்.

எடப்பாடியார் அ.தி.மு.க-வில் 1972-ல் ஒரு சாதாரணத் தொண்டர். பின்னர் படிப்படியாக வளர்ந்து 2011-ல் அமைச்சராகிறார். அம்மாவுடைய மறைவுக்குப் பிறகு தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். இன்று அ.தி.மு.க-வின் இரண்டு கோடித் தொண்டர்களுடைய பொதுச்செயலாளர்.  இது தி.மு.க-வில் நடக்குமா… சாதாரண ஒரு தொண்டன், பொதுச்செயலாளராக வர முடியுமா… கருணாநிதி குடும்பத்தைத் தவிர்த்து வேறு யாராவது அப்படி வர முடியுமா…  அப்படி யாரேனும் கனவுகண்டால், கனவிலேயே கருணாநிதி வந்து கொன்றுவிடுவார். அ.தி.மு.க மட்டும்தான் தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம், மக்களுக்காகப் பாடுபடுகிற இயக்கம். எல்லோருக்கும் வாய்ப்பு கொடுக்கிற இயக்கம் அ.தி.மு.க.

ஸ்டாலின், சி.வி.சண்முகம்

2001-ல் நான் அமைச்சராகும்போது எனக்கு 35 வயது. அப்போது சிறிய வயது மந்திரி நான்தான். அமைச்சர் பதவி கிடைக்கும் என்று நான் கனவில்கூட நினைக்கவில்லை. எம்.எல்.ஏ-வாக வென்று, சென்னையில் தூங்கிக்கொண்டிருந்தபோது, இரவு 9:30 மணிக்கு கவர்னர் மாளிகையிலிருந்து எனக்கு அழைப்பு வருகிறது. `உங்களை அம்மா அவர்கள் அமைச்சராக்கியிருக்கிறார்கள். காலையில் பதவி ஏற்றுக்கொள்ள வந்துவிடுங்கள்’ என்று. இப்படி தூங்கியிருப்பவர்களைத் தட்டி, பதவி கொடுத்து அழகு பார்க்கும் இயக்கம் அ.தி.மு.க. இந்த தி.மு.க ஆட்சியைப் பற்றி நான் தனியாக விளக்க வேண்டியதில்லை, உங்களுக்கே தெரியும்… `இந்த ஆட்சி எப்போடா போகும்’ என்று தி.மு.க-காரனே சொல்கிறான்.

இந்த ஆட்சி இருந்தால் என்ன… இல்லை என்றால் என்ன… என்ன நன்மை… ஒன்றுமே கிடையாது. ‘இந்த ஆட்சி போகட்டும்’ என தி.மு.க-காரர்களே சொல்கிறார்கள். நீங்கள் வேண்டுமானால் அவர்களைத் தனியாக அழைத்துப் போய், ஒரு டீ வாங்கித் தாருங்களேன். அப்படியே கொட்டுவார்கள் எல்லாவற்றையும். இன்றைக்கு விலைவாசி உயர்ந்துவிட்டது. எதையும் விட்டுவைக்கவில்லை இந்த அரசு. ஆனால் சாமானியர்களின் கூலி உயரவில்லை, வேலைவாய்ப்பு இல்லை. என்னதான் நடக்கிறது இந்த ஆட்சியில்… ஒரு குடும்பம் மட்டும் சம்பாதித்து கொழுத்துப்போயிருக்கிறது” என்றார் காட்டமாக.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.