நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் ஒன்றியத்துக்கு உட்பட்ட விழுந்தமாவடி பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் சுப்பிரமணியன், செல்வம் இருவரும் தங்களுக்குச் சொந்தமான இரண்டு ஃபைபர் விசைப்படகுகளில் சுமார் ஏழு மீனவர்களுடன், நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றிருக்கின்றனர். இந்த நிலையில், அவர்கள் கோடியங்கரைப் பகுதிக்குத் தென்கிழக்குக்கில் சுமார் 10 நாட்டிக்கல் மைல் தூரத்தில் நள்ளிரவில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, அங்கு இரண்டு விசைப்படகுகளில் வந்த கடல் கொள்ளையர்கள், மீனவர்களைத் தாக்கி, அவர்கள் வைத்திருந்த ஜி.பி.எஸ் கருவி, மீன்பிடிக்க வைத்திருந்த வலை உள்ளிட்ட தொழில்நுட்பக் கருவிகளைக் கேட்டு மிரட்டியிருக்கின்றனர். தமிழக மீனவர்கள் கடல் கொள்ளையர்களிடம் தங்களது பொருள்களைக் கொடுக்க மறுக்கவே… கடல் கொள்ளையர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த இரும்புக்கம்பியால், அவர்களைத் தாக்கியிருக்கின்றனர்.

காயமடைந்த மீனவர்கள்

மேலும், மீனவர்களை நிர்வாணப்படுத்தி, படகிலேயே கட்டிவைத்துத் துன்புறுத்தியிருக்கின்றனர். அதைத் தொடர்ந்து, நான்கு மீனவர்களைக் கடலுக்குள் தூக்கி வீசிவிட்டு, மீனவர்கள் வைத்திருந்த சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்களையும், அவர்கள் பிடித்துவைத்திருந்த 600 கிலோ மதிப்பிலான மீன்களையும் கடல் கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றிருக்கின்றனர். பலத்த காயத்துடன் கடலில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த மீனவர்களை, மற்றொரு பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த சக மீனவர்கள் மீட்டு, நாகப்பட்டினம் கடற்கரைப் பகுதிக்குக் கொண்டு வந்திருக்கின்றனர். கடல் கொள்ளையர்களின் தாக்குதலில் காயமடைந்த ஒன்பது மீனவர்களும் தற்போது நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

அவர்களை தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் கெளதமன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மீனவர்களைத் தாக்கி, அவர்களின் பொருள்களைக் கொள்ளையடித்துச் சென்ற கடல் கொள்ளையர்கள்மீது மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் தெரிவித்திருக்கின்றனர். மேலும், இந்திய கடலோரக் காவல் படை ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்தி, கடல் கொள்ளையர்கள் கடலில் கொள்ளையடிப்பதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசுக்குக் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். கடல் கொள்ளையர்களின்
தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் மீனவர்களுடன் நம்மிடம் பேசுகையில், “நாங்கள் ஒன்பது பேரும் இரண்டு விசைப்படகுகளில் கோடியக்கரை பகுதிக்கு பத்து நாட்டிக்கல் மையில் தூரத்தில் மீன்பிடித்துக்கொண்டிருந்தோம்.
அப்போது நள்ளிரவில் கடல் கொள்ளையர்கள் அதிவேக இன்ஜின் பொருத்தப்பட்ட இரண்டு படகுகளில் வேகமாக வந்தனர். மேலும், அவர்கள் அதிக வெளிச்சம்கொண்ட டார்ச் லைட்டால் எங்கள் கண்கள்மீது அடித்தனர்.

காயமடைந்த மீனவர்கள்

இதில் நாங்கள் நிலைதடுமாறியுடன், அவர்கள் எங்கள் படகுமீது ஏறி, இரும்பு ஆயுதங்களைக்கொண்டு மிரட்டி, நாங்கள் வைத்திருந்த பொருள்களைக் கேட்டனர். மேலும், எங்கள் கைகளைப் பின்புறமாகக் கட்டி, எங்கள் கழுத்து, மார்பு உள்ளிட்ட பகுதிகளில் இரும்பு ஆயுதங்களைக்கொண்டு தாக்கினர். நாங்கள் வைத்திருந்த மீன்பிடிப் பொருள்களைக் கேட்டு எங்களை மிரட்டியபோது, எங்களது பொருள்களைத் தர மாட்டோம் என்று சொல்லவே… எங்களது ஆடைகளை முழுமையாக அகற்றிவிட்டு, எங்களை நிர்வாணப்படுத்தி, கடலுக்குள் தள்ளிவிட்டனர். மேலும், எங்களது வலைகளை அறுத்தும் நாங்கள் பிடித்துவைத்திருந்த 600 கிலோ மீன்களையும், ஜி.பி.எஸ் உள்ளிட்ட 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான எங்களது பொருள்களையும் கடல் கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக கடல் கொள்ளையர்கள் எங்களை நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்தனர்.

மீனவர்கள்

கடலுக்குள் தள்ளப்பட்ட நாங்கள், மீண்டும் படகில் ஏற முயன்றபோது, எங்கள் கை, தலை உள்ளிட்ட பகுதிகளில் தாக்கி, நாங்கள் யாரும் படகில் ஏறாத அளவுக்குச் சித்ரவதை செய்தனர். வாழ்வாதாரத்துக்காக நாங்கள் இந்த மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருக்கிறோம். ஆனால், தொடர்ந்து கடல் கொள்ளையர்களால்  நாங்கள் தாக்கப்படுவதும், எங்களுடைய உடைமைகள் கொள்ளையடிக்கப்படுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. உடனடியாக மத்திய, மாநில அரசுகள் கடல் கொள்ளையர்களின் அட்டூழியத்தைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்திய கடலோர காவல் படை ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்தி கடல் கொள்ளையர்களைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்” என்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.