கலப்பு திருமணங்கள், ஒரு மதத்தைச் சேர்ந்தவர்கள் வேறு மதத்தைச் சேர்ந்தவர்களை திருமணம் செய்வது இன்னும் சமுதாயத்தில் ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்றாகவே இருக்கிறது. மும்பை கோவண்டி பகுதியிலுள்ள கிணறு ஒன்றில் வாலிபர் ஒருவர் கொலைசெய்யப்பட்டுக் கிடந்தார். அவர் கழுத்தை அறுத்தும், கத்தியால் குத்தப்பட்டும் கொலைசெய்யப்பட்டிருந்தார். போலீஸார் அவரின் உடலை மீட்டு அவர் யார் என்பது குறித்து விசாரித்து வந்தனர். கொலைசெய்யப்பட்ட நபர் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்போல் இருந்ததால், அவரது புகைப்படத்தை போலீஸார் அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி விசாரித்தனர்.

இதில் கொலைசெய்யப்பட்ட நபர் பற்றிய தகவல் கிடைத்தது. அவரது பெயர் கரண் சந்திரா என்று தெரியவந்தது. கரண் சந்திராவின் போனுக்கு கோரா கான் என்பவர் போன் செய்து பேசியிருந்தார். இதையடுத்து போலீஸார் அவரை அழைத்து விசாரித்தனர். ஆரம்பத்தில் எதுவும் சொல்ல மறுத்த கோரா கான், பின்னர் கொலைசெய்ததை ஒப்புக்கொண்டார். கோரா கானின் மகள் குல்நாஸ் என்பவரை கரண் சந்திரா காதலித்து, கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார். மதம் மாறி திருமணம் செய்ததால், அவர்கள்மீது கோரா கான் கடும் கோபத்தில் இருந்தார்.

அதோடு உத்தரப்பிரதேசத்தில் வசித்து வந்த கோரா கான், அங்கிருந்து கடந்த ஆண்டே மும்பைக்கு வந்துவிட்டார். மகள், மருமகன் ஆகிய இருவருக்கும் தக்கப்பாடம் கற்றுக்கொடுக்கவேண்டும் என்பதில் கோரா கான் உறுதியாக இருந்தார். இதனால் அவர் தன்னுடைய மகளுக்கு போன் செய்து, `அனைத்தையும் மன்னித்துவிட்டேன். இரண்டு பேரும் மும்பைக்கு வாருங்கள். மும்பையில் பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது’ என்று கூறி வரழைத்தார். உடனே கரண் தன்னுடைய மனைவியை அழைத்துக்கொண்டு, கடந்த சில நாள்களுக்கு முன்புதான் மும்பைக்கு வந்தார்.

அவர் மும்பை தாராவியிலுள்ள லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்து தங்கியிருந்தார். கோரா கான் தன்னுடைய மருமகனுக்கு போன் செய்து, கோவண்டியில் வீடு இருக்கிறது. பார்க்க வாருங்கள் என்று கூறி அழைத்தார். கரணும் அவர்கள் அழைத்தவுடன் தனியாகச் சென்றார். கோரா கானும், அவரின் மகன் மற்றும் சிலர் சேர்ந்து, கரணைக் கத்தியால் குத்தியும், கழுத்தை அறுத்தும் கொலைசெய்து அங்குள்ள கிணற்றில் தூக்கிப்போட்டனர்.

கோரா கானிடம், கரண் மனைவி தனது கணவர் எங்கே என்று கேட்டார். ஆரம்பத்தில் ஏதோ காரணங்களைச் சொல்லி சமாளித்த கோரா கான், ஒருகட்டத்தில் தன்னுடைய மகள் மூலம் ஏதாவது பிரச்னை வந்துவிடும் என்று பயந்தார். உடனே மீண்டும் கொலையாளிகள் அனைவரும் ஒன்றுகூடி, இது குறித்து ஆலோசனை நடத்தினர். இதில் அந்தப் பெண்ணையும் கொலைசெய்துவிடுவது என்று அவர்கள் முடிவுசெய்தனர். இதையடுத்து அவரிடம் ஏதோ காரணத்தைச் சொல்லி, ஆள் நடமாட்டம் இல்லாத கலம்பொலிக்கு அழைத்துச் சென்றனர்.

கைது

அங்கு வைத்து கழுத்தை நெரித்து அவரைக் கொலைசெய்தனர். யாரும் அடையாளம் கண்டுபிடித்துவிடக் கூடாது என்பதற்காக, முகத்தை சேதப்படுத்தி அடையாளம் தெரியாமல் மாற்றினர். அதன் பிறகு உடலை அங்கேயே போட்டுவிட்டு வந்துவிட்டனர். இது குறித்து இன்ஸ்பெக்டர் சுதர்சன் பேசுகையில், “அந்தப் பெண்ணின் உடல், கலம்பொலி பகுதியில் 16-ம் தேதி மீட்கப்பட்டிருக்கிறது. தந்தை, மகன் உட்பட மூன்று கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.