Doctor Vikatan: 50 வயதை கடந்துவிட்டேன். முன்பெல்லாம் வாரம் ஒருமுறை கை, கால் நகங்களை வெட்டிவிட்டேன். இப்போது இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை வெட்ட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. மேலும் கால் விரல் நகங்களை வெட்டும்போது சீராக வெட்ட முடியவில்லை. உடைந்து உடைந்து வருகிறது. வெட்டுவதும் சிரமமாக இருக்கிறது. காரணம் என்ன?  அடிக்கடி நரம்புகள் இழுக்கும் உணர்வும் ஏற்படுகிறது. இதற்கெல்லாம்  தீர்வு உண்டா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்

பொது மருத்துவர் அருணாசலம்

நீங்கள் குறிப்பிட்டுள்ள அறிகுறியை வைத்துப் பார்க்கும்போது உங்களுக்கு கால்சியம் குறைபாடு இருக்கலாம் என்று தோன்றுகிறது. அந்த நிலையில்தான் நகங்கள் பலமிழக்கும். இந்தப் பிரச்னைக்கு ரத்த ஓட்டம் குறைவாக இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். வைட்டமின் குறைபாடும் காரணமாக இருக்கலாம்.

உங்களுக்கு நீரிழிவு பாதிப்பு இருக்கிறதா என்று குறிப்பிடவில்லை. ஒருவேளை நீரிழிவு இருந்தால், ரத்தச் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்பதைச் சரி பார்க்க வேண்டும். கட்டுப்பாட்டில் இல்லாதபட்சத்தில் அதை உடனடியாக சரி செய்ய வேண்டும்.

இந்த வயதில் பலருக்கும் ‘பெரிஃபெரல் நியூரோபதி’ ( Peripheral neuropathy) என்ற பிரச்னை இருக்கலாம். அதில் நரம்புகள் இழுக்கும்படியான உணர்வு இருக்கும். ஒருவேளை உங்களுக்கு அந்தப் பிரச்னை  இருந்தால், சத்துக்குறைபாடு இருக்கக்கூடும். முறையான மருத்துவப் பரிசோதனையில் அதையும் தெரிந்துகொண்டு சிகிச்சை எடுங்கள்.

டாப்ளர் ஸ்டடி (Doppler Study) என்ற பரிசோதனையைச் செய்து பார்த்து கால்களுக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தின் தன்மையைத் தெரிந்துகொள்ளலாம். கூடவே வைட்டமின் டி 3 அளவு எவ்வளவு இருக்கிறது என்றும் பார்த்துவிட்டு, மருத்துவர் பரிந்துரையோடு வைட்டமின் டி 3 மற்றும் கால்சியம் சப்ளிமென்ட்டுகளை எடுத்துக்கொள்ளலாம். நகங்கள் உடைந்துபோக, பெருமபாலும் கால்சியம், தாதுச்சத்துகள், வைட்டமின்கள் போன்றவற்றின் குறைபாடே காரணமாக இருக்கக்கூடும். பயப்பட வேண்டாம். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.