அஜித்தின் ஆஸ்தான கலை இயக்குநரான மிலன், மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 54. சூர்யாவின் ‘கங்குவா’ படப்பிடிப்பை முடித்துக் கொடுத்துவிட்டு அஜித்தின் படத்திற்காக அஜர்பைஜான் சென்றிருந்தார். சமீபத்தில் சிம்புவின் `பத்து தல’ படத்திலும் அவர் வேலை செய்திருந்தார். அவரது நினைவுகள் குறித்து கண்கலங்கியபடி மனம் திறக்கிறார் `பத்து தல’ இயக்குநரான ஓபிலி என்.கிருஷ்ணா.

மிலன்

“சிம்பு நடிச்ச ‘பத்து தல’க்கு முன் தெலுங்கில் ‘ஹிப்பி’னு ஒரு படம் இயக்கினேன். அந்த படத்தின் கலை இயக்குநர் மிலன். ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் சார்தான் அவரை எனக்கு அறிமுகப்படுத்தி வச்சார். அதில் இருந்துதான் அவரோடு நட்பானேன். அருமையான மனிதர். காசை வீணடிக்க விரும்பாத ஒரு கலை இயக்குநர். ரொம்பவும் கிரியேட்டிவ்வான மனிதர். ‘ஹிப்பி’ படத்தில ஒரு சீன்ல கதாநாயகி முகத்துல முட்டை எறியற சீன். அந்த முட்டை சிதறி ஹீரோயின் முகமெல்லாம் ஆகிடும். இந்த சீன் எடுக்கும் போது, ஹீரோயின் ‘சார் நான் சுத்த சைவம். முட்டையெல்லாம் வீச வேணாம்’னு பயந்து போய் சொல்றாங்க. இது பத்தி நான் மிலன்கிட்ட பேசினேன்.

அவர் உடனே, ‘இவ்ளோ தானா சார்’னு சொல்லி உடனே ஒரு முட்டை ஓட்டை மட்டும் வச்சு, அதை நல்லா சுத்தம் பண்ணிட்டு, உள்ளே மேங்கோ ஜெல்லியை நிஜ முட்டைக்கரு மாதிரியே உள்ளே வெச்சுட்டார். எல்லாருக்கும் ஆச்சரியமாகிடுச்சு. மிலன்கிட்ட வேலையை ஒப்படைச்சிட்டா போதும். நாம எந்த பிரஷ்ஷரும் இல்லாமல் இருக்கமுடியும். ஒரு கோடி செலவாகுற ஒரு விஷயத்தை 50 லட்சத்தில் முடிச்சு கொடுத்துடுவார். சிறந்த மனிதர்!

‘பத்து தல’ படப்பிடிப்பு ஆந்திரா பக்கத்துல அரக்குவேலினு ஒரு இடத்துல போச்சு. ஒரு இடத்துல ரெயில்வே கேட் செட் போடணும். எங்களுக்கு முதல்நாள் சாயந்திரம் அந்த இடம் கிடைக்குது. மறுநாள் காலையில ஆறு மணிக்கு அங்கே படப்பிடிப்பு நடத்தணும். ரயில்வே கேட் செட்டை அவ்ளோ குறுகிய நேரத்திற்குள் அதாவது ராத்திரிக்குள் போட்டுட முடியுமானு தெரியல. சீரியஸா யோசனை பண்ணிட்டு இருந்தேன். ஆனா, மிலன் நைட்டோட நைட்டா அவரே உட்கார்ந்து அந்த கேட்டை ரெடி பண்ணினார். காலையில ஐந்தே முக்காலுக்கு நான் ஸ்பாட்டுக்குப் போறேன். செட் ரெடியா இருக்குது. அவரே உட்கார்ந்து பெயர் பலகையும் எழுதிட்டு இருந்தார்.

மிலன்

‘ஆறு மணிக்குதானே சார் ஷாட்… இன்னும் கால் மணி நேரம் இருக்கு. ஒரு டீ சாப்பிட்டுட்டு வாங்க… செட் கம்ளீட்டா ரெடியாகிடும்’ன்னு சொன்னார். அதே மாதிரி முழுமையா செட் போட்டிருந்தார். சிறந்த மனிதர். என்னோட அடுத்த படத்தின் கதையையையும் அவருக்குச் சொல்லியிருந்தேன். அவரோட சஜசன்ஸும் கொடுத்திருந்தார். அவர் இருந்திருந்தால், சிறந்த படங்கள் நிறைய கொடுத்திருப்பார். வாரத்துக்கு ஒருமுறை அவரோடு பேசிடுவேன். அவர் இறக்குறதுக்கு முதல்நாள் கூட அவருக்கு போன் செய்தேன். ஆனால், ரீச் ஆகலை. சரி சென்னை வந்ததும் பேசிக்கலாம்னு நினைச்சேன். இனி அவர்கிட்ட பேசவே முடியாதுன்னு நினைக்கறப்ப, வேதனையா இருக்கு!” எனக் குரல் உடைந்து பேசினார் கிருஷ்ணா.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.