உலகக்கோப்பைத் தொடர் அக்டோபர் 5-ம் தேதியே தொடங்கிவிட்டது. ஆனால், ஐ.சி.சி மற்றும் பி.சி.சி.ஐ இரு அமைப்புகளையும் பொறுத்தவரைக்கும் உலகக்கோப்பைத் தொடர் இன்றைக்குதான் தொடங்குவதைப் போல விசித்திர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். காரணம், அஹமதாபாத்தில் நடைபெறும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி.

India vs Pakistan

ஒரு தொடரின் முதல் போட்டிக்குச் செய்ய வேண்டிய விளம்பரங்களையும் பில்ட் அப்களையும் இந்த ஒரே ஒரு போட்டிக்காக செய்து வருகின்றனர். அனைவருக்கும் சமமான களத்தையும் கவனத்தையும் கொடுக்க வேண்டிய ஐ.சி.சி, இப்படி பாரபட்சமாக இந்தியா – பாகிஸ்தான் அணிகளை மட்டுமே வலிந்து கவனிப்பது கடும் விமர்சனங்களையும் கண்டனங்களையும் உருவாக்கியிருக்கிறது.

ஆசியக்கோப்பைத் தொடர் இலங்கையில் நடைபெற்ற போது இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு மட்டும் மழையால் போட்டி பாதிக்கப்பட்டால் ரிசர்வ் டே உண்டு என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, ரிசர்வ் டே வரை சென்றுதான் அந்தப் போட்டி நடந்து முடிந்தது. அந்தச் சமயத்தில் இலங்கை அணியின் முன்னாள் கேப்டனான அர்ஜுனா ரணதுங்கா,

அர்ஜுனா ரணதுங்கா

“இதற்கே ஆச்சர்யமடைந்தால் எப்படி? அடுத்து உலகக்கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு மட்டுமென தனியாக விதிகளை வகுத்தாலும் வகுப்பார்கள்!” எனக் கடுமையாக விமர்சித்திருந்தார். ரணதுங்கா சொன்னதைப் போலத்தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

முதல் போட்டிக்கு முன்பாக நடக்க வேண்டிய தொடக்க நிகழ்வுகளையும் அப்போது செய்ய வேண்டிய விளம்பரங்களையும் ஐ.சி.சி-யும் பி.சி.சி.ஐ-யும் இப்போதுதான் செய்து கொண்டிருக்கின்றன.

இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு முன்பான நிகழ்வுகள்

பாடகர்கள் அர்ஜித் சிங், சங்கர் மகாதேவன், சுக்விந்தர் சிங் ஆகியோரை வைத்து இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு முன்பாக கச்சேரி நடத்தவிருக்கிறார்கள். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா போட்டியைக் காண நேரில் வரவிருப்பதாக சொல்லப்படுகிறது. நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் கோல்டன் டிக்கெட்டோடு விருந்தாளிகளாகப் போட்டியைக் காண நேரில் வரவிருக்கின்றனர்.

ரஜினிகாந்த்

இதுபோக இன்னும் எக்கச்சக்கமான பாலிவுட் பிரபலங்கள் அஹமதாபாத்தில் முகாமிட இருக்கிறார்கள்.

இந்த உலகக்கோப்பையின் அதிக எதிர்பார்ப்புமிக்க போட்டி இதுதான். அதற்காக இந்தப் போட்டிக்கு இத்தனை பில்டப்புகள், இத்தனை ஏற்பாடுகள் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், அதற்காக மற்ற அணிகளுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையை முறையாகக் கொடுக்க வேண்டுமில்லையா? இங்கிலாந்தும் நியூசிலாந்தும்தான் இந்த உலகக்கோப்பையின் முதல் போட்டியில் ஆடியிருந்தனர். இங்கிலாந்து நடப்பு சாம்பியன். நியூசிலாந்து கடந்த உலகக்கோப்பையின் ரன்னர் அப். இப்படிப்பட்ட இரண்டு அணிகள் மோதும் உலகக்கோப்பையின் முதல் போட்டி எப்படி இருந்திருக்க வேண்டும்? ஒரு தொடக்க நிகழ்வு கூட இல்லாமல் சாதாரண ஒரு இருதரப்புத் தொடரின் முதல் போட்டியை போலத்தான் இந்தப் போட்டி தொடங்கியிருந்தது.

எந்த விளம்பரமும் இல்லாமல் மைதானத்தில் கூட்டமே இல்லாமல் உலகக்கோப்பை தொடங்கிவிட்டதே தெரியாமல் அந்தப் போட்டி தொடங்கியிருந்தது. இதை பார்க்கையில்தான் இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு மட்டும் ஏன் இத்தனை ஏற்பாடுகள் என கேட்கத் தோன்றுகிறது.

Jos Buttler – Ben Stokes

இத்தனைக்கும் இன்றைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நிகழ்ச்சிகள் அத்தனையும் முதலில் இங்கிலாந்து – நியூசிலாந்து போட்டிக்கு முன்பாக நடப்பதற்குதான் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால், கடைசி நேரத்தில் அந்த நிகழ்வுகள் எல்லாம் ரத்து செய்யப்பட்டன. உப்பு சப்பில்லாமல் உலகக்கோப்பைத் தொடங்கியது.

கோல்டன் டிக்கெட் என்று ஒன்றை ஜெய் ஷா, விஜபிக்கள் பலருக்கும் கொடுத்திருக்கிறார். அவர்களை இந்த இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் மட்டும்தான் பார்க்க முடியும் போல! சச்சினைத் தவிர வேறு யாரையும் மற்ற போட்டிகளில் பார்க்கவே முடியவில்லை. இப்படியிருக்க எங்கிருந்து மற்ற போட்டிகளுக்கு வெளிச்சம் கிடைக்கும்?

ICC அறிவிப்பு போஸ்டர்

போட்டிகள் நடைபெறும் மைதானத்திற்கு வெளியே ஐ.சி.சி சார்பில் ஒரு அறிவிப்பு போஸ்டர் ஒட்டப்படிருக்கிறது. அதில், “டிக்கெட் வைத்திருக்கும் நபர்கள் மதம், இனம், நிறம், மொழி, பாலினம் என எந்தவிதமான பாகுபாடு காட்டும் செய்கைகளிலும் ஈடுபடக்கூடாது. அதை சகித்துக் கொள்ளமாட்டோம்” என அறிவுறுத்தியிருப்பார்கள். இதே கேள்வியைத்தான் இப்போது ஐ.சி.சி-யைப் பார்த்தே கேட்கத் தோன்கிறது.

அதிகாரத்தின் அடிப்படையிலும் வியாபாரத்தின் அடிப்படையிலும் பாகுபாடு பார்த்து இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து மற்ற அணிகளைப் புறக்கணிப்பது ஏன்?

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.