மதுரை தமுக்கம் மைதானம் மாநாட்டு மையத்தில் புத்தகத் திருவிழா – 2023 நேற்று மாலை தொடங்கியது. மதுரை மேயர், கலெக்டர் ஆகியோர் முன்னிலை வகித்த நிகழ்ச்சியில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளருமான சு. வெங்கடேசன் பேசும்போது,

“பபாசி சென்னையில் மட்டுமே நடத்திக் கொண்டிருந்த புத்தகத் திருவிழாவை மதுரையில் நடத்த வேண்டும் என்று கூறி 2007-ம் ஆண்டு உதயச்சந்திரன் மதுரை ஆட்சியராக இருந்தபோது இணைந்து நடத்தினோம். இன்றைக்கு அதை 16-வது புத்தகத் திருவிழாவாக வெற்றியுடன் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

சு.வெங்கடேசன்

ஒரு பெரும் வாசகர் திருவிழாவாக, வாசகர்களின் கொண்டாட்டமாக இன்றைக்கு இதை நடத்திக் கொண்டிருக்கின்றோம். எழுத்தின் தலைநகரம் என்று நாம் தொடர்ச்சியாக மதுரையைச் சொல்லிக் கொண்டு வருகிறோம். ஏனென்றால் 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட எழுத்துகள், 20 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் இருப்பது மதுரையில் மட்டும்தான். இங்கு இருக்கின்ற திருப்பரங்குன்றம், கீழக்குயில்குடி, வேடர் புளியங்குளம், ஒத்தக்கடை, அழகர்கோயில் என இங்கெல்லாம் இருக்கின்ற பிராமி எழுத்துக்கள் அனைத்தும் 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டவை.

எனவேதான் எழுத்தாளனும், வாசகனும் கொண்டாடக் கூடிய இடமாக மதுரை உள்ளது. புத்தகக் கண்காட்சியின் முதல் நிகழ்வாக ‘மதுரை வாசிக்கின்றது’ என்ற நிகழ்ச்சியை மதுரை நகருக்குள் இருக்கின்ற எழுத்தாணிக்கார தெருவில் தொடங்கினோம். அது ஒரு வரலாற்று முக்கியத்துவம் கொண்ட இடம். எழுத்தாணிக்கார தெரு என்பது ஏடுகள் எழுதக்கூடிய எழுத்தாணிகள் தயாரிக்கும் மக்கள் மட்டுமே வசிக்கக்கூடிய இடம். புத்தகங்கள் எல்லாம் அச்சுக்கு வருவதற்கு முன்பு ஏடுகளில்தான் எழுதப்பட்டன. அதை உருவாக்கிக் கொடுத்தவர்கள் வாழ்ந்த தெருதான் எழுத்தாணிக்கார தெரு. அந்தத் தெருவில் ஒரு விநாயகர் கோயில் இருக்கிறது, அதற்கு அக்கசாலை விநாயகர் கோயில் என்று பெயர். நாணயங்கள் தயாரித்து கொடுப்பதற்கு அக்கசாலை என்று பெயர். அப்படி எழுத்தும் செல்வமும் சேர்ந்திருந்த ஒரு இடத்தில்தான் நாங்கள் ‘மதுரை வாசிக்கின்றது’ என்ற நிகழ்ச்சியைத் தொடங்கினோம்.

அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

அப்படி ஒரு மிகப்பெரும் வாசிப்பை நேசிக்கக் கூடிய ஒரு நகரமான மதுரையில் இந்தப் புத்தகக் கண்காட்சி நடக்கின்றது. மதுரையிலுள்ள ஒவ்வொரு குடும்பமும் புத்தகக் கண்காட்சிக்கு வர வேண்டும், ஒவ்வொரு குடும்பமும் ஏதாவது ஒரு புத்தகம் வாங்கி வாசிக்க வேண்டும். புத்தகம்தான் எல்லா எல்லைகளையும் கடந்து நமக்கு ஒரு கனவினை உருவாக்கும். சோர்வில் இருந்து நம்மை விடுவிக்கும் ஒரு மகத்தான ஆயுதம்தான் புத்தகங்கள். அந்தப் புத்தகங்களைக் கொண்டாடும் திருவிழா இனிதே தொடங்குகிறது” என்றார்.

அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசும்போது, “இந்த விழா குறித்து எனக்கு முன் உரையற்றியவர்கள் கூறியது போல் புத்தகங்களால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். ஒரு வாரத்திற்கு இரண்டு புத்தகங்கள் படிக்கும் பழக்கம் எனக்கு உண்டு. பல்கலைக்கழக மாணவனாகச் சேர்ந்தபோதும் வெளிநாடு சென்றபோதும் அனைவரோடும் பழகவேண்டும் என்பதை உணர்த்தியது புத்தகங்கள்தான். 

எழுத்தாளர்களுக்கு இருக்கும் மரியாதை யாருக்கும் கிடைப்பதில்லை. பெரிய செல்வந்தராக இருந்து மறைந்தால்கூட நினைவுகூர ஆள் இல்லாத சூழ்நிலையில், திருவள்ளுவர் போன்றவர்கள் நீடித்து வரலாற்றில் யாரும் அழிக்க முடியாத பதிவை உருவாக்குவார்கள். யாருடைய எழுத்துகள் அப்படி நினைவிலிருக்கும் என்பதை காலம்தான் சொல்லும்.

அமைச்சர் பி.டி.ஆர்

பபாசி போன்ற நிறுவனங்கள் லாப நோக்கற்ற முறையில் இதனை நடத்துவது வரவேற்கத்தக்கது. இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்தி புதிய கருத்துகள் மற்றும் புதிய நோக்கங்களை உருவாக்க வேண்டும். எழுத்தும் கருத்தும்தான் சமூகத்தில் புதியவற்றை உருவாக்கும் கருவிகளாகும்.

ஜெய்ப்பூரில் கலாசார இலக்கியத் திருவிழாவை ஆண்டுதோறும் நடத்தி வருகிறார்கள். அவர்களைத் தொடர்பு கொண்டு பேசி 2024-ம் ஆண்டு மதுரையில் அதுபோன்ற இலக்கியத் திருவிழாவை நடத்தக் கேட்டோம். வருகிற ஜனவரி மாதத்தில் அதை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.

இதனை மாவட்ட நிர்வாகத்துடன் கலந்து ஆலோசித்து சிறப்பான முறையில் நடத்திட ஏற்பாடு செய்வோம். ஒரே மொழி, ஒரே இனம் என 2000 ஆண்டுகளைக் கடந்து தொன்மை மாறாமல் வாழ்ந்து வரக்கூடியவர்கள் மதுரை மக்கள். இதுபோன்ற வாய்ப்பைப் பயன்படுத்தி இளைஞர்களும், பெற்றோர்களும் திரளாக வருகை தந்து புத்தகத்தைத் தேடி படியுங்கள். சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வரலாற்றுப் புகைப்படக் கண்காட்சியையும் பாராட்டுகிறேன். உங்கள் வாழ்வை ஒளிமயமாக்க, கல்வி அறிவை மேம்படுத்திடும் வகையில் இந்தப் புத்தகத் திருவிழா சமூகத்திற்கு உதவும்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.