வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

ஜெர்மனியின் ஒரு பகுதியை சுற்றி பார்த்துவிட்டு அடுத்து ஜெர்மனியின் தெற்கே அமைந்துள்ள ஸ்விட்செர்லாண்டின் சில நகரங்களை சுற்றி பார்ப்பதே எங்கள் பயணத்தின் இரண்டாவது குறி.

ஸ்விஸ் என செல்லமாக அழைக்கப்படும் ஆல்ப்ஸ் மலையை சுற்றிலும் கொண்டு அமைந்திருக்கும் ஐரோப்பாவின் விளையாட்டு மைதானமான ஸ்விட்செர்லாண்டேஷெங்கேன் நாடுகளில் நாங்கள் தொட்டுச் சென்ற இரண்டாவது நாடாகும்.

ஸ்விஸ் பாங்க் சீக்ரெட் கணக்குகள் பற்றி குழந்தையும் அறிந்திருக்கும் இந்நாளில், நாங்கள் ஆஃப் சீசனான ஜூலை மாதம் ஸ்விட்சர்லாண்ட் சென்றோம். ஸ்விசிலும் ஆஃப் சீசனில் பகல் நேரம் அதிகம்: இரவு நேரம் குறைவு. நாங்கள் குளிரை தாங்க முடியாதென்பதால் மகளும் மருமகனும் வெயில் காலத்தையே எங்களுக்கு பரிந்துரைத்து இருந்தார்கள்.

Germany

சீசன் நேரமான நவம்பர்- ஃபெப்ரவரியில், பனி போர்த்திய மலைகளில், ஸ்கீயிங் மற்றும் நாய்கள் இழுத்து செல்லும் ஸ்லெட்ஜ் ரைடிங் விஷேஷமென்றால் ஆஃப் சீசன் நேரமான ஜூலை முதல் செப்டம்பர் வரை பாரா க்ளைடிங், கேபிள் கார் மற்றும் படகு சவாரி ஸ்விஸில் விஷேஷம்.

ஸ்விட்செர்லாண்ட் நடுநிலை காக்கும் ஒரு நாடு. ஐரோப்பிய யூனியனில் உறுப்பு நாடாக இருந்தாலும் சுற்றுலாவையே அதிகம் நம்பியுள்ள ஸ்விட்சர்லாண்ட் மேற்கத்திய நாடுகள் பக்கமும் சாரவில்லை. கிழக்கத்திய நாடுகள் பக்கமும் சாரவில்லை. அதனால் ஸ்விஸில் செல்லுபடியாகும் நாணயம் ஸ்விஸ் ஃப்ரான்கே ஆகும். ஸ்விஸ் ஃப்ரான்க் யூரோவை விட சற்றே மதிப்பு அதிகம் கொண்டது. ஆனாலும் ஓறிரு கடைகளில் யூரோ செல்லுபடியாகும். அமெரிக்க நாணயமான டாலருக்கு ஒரு துளியும் மதிப்பில்லை.

ஸ்விட்சர்லாண்டில் ஷூரிக், பெர்ன், பாசெல் என எவ்வளவோ பெரிய நகரங்கள் இருப்பினும் இயற்கை காட்சிகளை காண ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தையே எங்கள் மருமகன் ஜோஷுவா மகள் அஷ்மிதாவின் பரிந்துரையின் படி தேர்வு செய்திருந்தார்.

ஸ்டுட்கார்ட்டில் இருந்து ஸ்விட்சர்லாண்டில் உள்ள கிஸ்வில் எனப்படும் ஊருக்கு போகும் வழியில் மோட்டார் லாண்ட் எனப்படும் பொருட்காட்சியகத்தில் உள்ள உணவகத்தில் காலை உணவு உண்டோம்.

Alps mountain

மோட்டார் லாண்டில் வெவ்வேறு காலகட்டத்தில் தயாரிக்கப் பட்ட டூ வீலர்களும் ஃபோர் வீலர்களும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த வண்டிகளின் உரிமையாளர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை வாடகையாக செலுத்தி அவர்களின் வாகனங்களை காட்சிப் படுத்தி கொள்ளலாம். அவ்வாறு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் வாகனங்கள் விற்பனைக்கும் கிடைக்கும்.

ஜெர்மனி எலெக்ட்ரிகல் மற்றும் எலெக்ட்ரானிக் பொருட்களுக்கு பிரசித்தி பெற்றிருப்பது போல் பீர் தயாரிப்பிற்கும் பெயர் போனது. நாங்கள் காலை உணவு உட்கொண்ட ஹோட்டலில் பீர் தயாரிக்கும் ப்ரூவிங் இயந்திரங்கள் நிறுவப்பட்டிருந்தன. இந்த பீர் ஜெர்மனி முழுதும் நம் ஊர் தேநீர் கடைகளில் தேநீர் கிடைப்பது போல் போல் சாதாரணமாக உணவகங்களில் கிடைக்கிறது.

மருமகன் ஜோஷுவா நாங்கள் தங்க ஸ்விட்சர்லாண்டில் உள்ள கிஸ்வில் எனும் ஒரு மலை கிராமத்தில் ஒரு பண்ணை வீட்டில் ஏற்பாடுகள் செய்திருந்தார். கிஸ்விலில் தங்கி சுற்று வட்டார நகரங்கள் பார்த்து வர ஏற்பாடு. ஒரு வீடு முழுவதையும் வாடகைக்கு எடுத்திருந்தோம்.

கிஸ்விலை அடைய சுரங்கங்கள் பல கடந்து செல்ல வேண்டும். இந்த சுரங்கங்கள் ஒவ்வொன்றும் கடந்து செல்வது அலாதியான அனுபவம். ஒவ்வொரு சுரங்கமும் ஒரு கிலோ மீட்டருக்கும் மேல் நீளம் கொண்டிருக்கும். அதிக பட்சமாக மூன்றரை கிலோ மீட்டர் நீளம் கொண்ட சுரங்கத்தை கடந்தது மறக்க முடியாத ஒரு அனுபவம்.

Switzerland

மேலும் ஒவ்வொரு சுரங்கத்திலும் ஐந்நூறு மீட்டர் இடைவெளியில் சேவ் அவர் சோல் எனப்படும் எஸ் ஓ எஸ் வடிவமைப்புகள் உள்ளன. சுரங்கங்களில் செல்லும் பொழுது ஏதாவது ஒரு வண்டிக்கு விபத்து ஏற்படுமாயின் தொடர்ந்து வருபவர் உடனே தன் வாகனத்தை நிறுத்தி முதல் உதவிக்கு ஆம்புலன்சையும் தீ அணைக்கும் வண்டியையும் அழைக்க இந்த ஏற்பாடு. மேலும் இந்த எஸ் ஓ எஸ் பாயிண்டுகள் மூலம் நாம் இந்த சுரங்கங்களில் இருந்து வெளியேரவும் முடியும்.

ஜெர்மனியில் ஹைவேயில் வேக கட்டுப்பாடு அதிக இடங்களில் கிடையாது. ஆனால் ஸ்விட்சர்லாண்டிலோ வேக கட்டுப்பாடு உண்டு.

ஸ்விட்சர்லாண்டின் புறநகர் பகுதிகளை அடைந்தவுடனேயே காரின் கண்ணாடிகளை இறக்கிவிட்டால் கோமியம் மற்றும் மாட்டு சாண வாடையை உணர முடிகிறது. அதே போல் பண்ணைவீடுகள் அமைந்திருக்கும் இடங்களில் ஈயும் அதிகம்.

நாங்கள் தங்கியிருந்த விடுதி மலை மேல் இருந்தது. அவ்விடுதியில் இருந்து அருமையான இயற்கை காட்சிகளை காண முடியும். இந்த விடுதியில் ல்லாமா எனப்படும் ஒட்டக வகையை சேர்ந்த ஒரு வகை வீட்டில் வளர்க்க கூடிய மிருகங்களை பார்க்க முடிந்தது. இவை பார்ப்பதற்கு பெரிய ஆடுகள் போலவே இருந்தன. அதே போல் கிராமப்புற வீடுகளில் குதிரைகளும் வளர்க்கப்படுகின்றன. இவ்விரு வகை மிருகங்களின் மாமிசமும் ஐரோப்பா வாழ் மக்களால் விரும்பி உண்ணப்படுகிறது.

Representational Image

ஜெர்மனியில் இருந்து ஸ்விஸ் எல்லை தாண்டும் பொழுது எந்த வித தணிக்கைகளோ கட்டுப்பாடுகளோ கிடையாது. ஆனால் நாங்கள் சென்ற மோட்டார் வாகனம் ஜெர்மனியில் பதிவு செய்யப் பட்டிருந்ததால் ஸ்விஸில் ஹைவே உபயோகிக்க சாலை வரி கட்ட வேண்டும்.

கிஸ்விலை அடையும் வழியில் ரைன் ஃபால்ஸ் எனும் பரந்த நீர்வீழ்ச்சியை பார்வையிட்டோம். இந்த நீர்வீழ்ச்சியில் படகு சவாரி செய்யலாம். இச்சுற்றுலா மையங்களுக்கு செல்லும் பொழுது நாம் இந்திய ரூபாயின் மதிப்பு மறந்துவிட வேண்டும். யூரோ இந்திய ரூபாயின் மாற்று மதிப்பு நமது யூரோவில் செய்யும் செலவுகளை கட்டுப்படுத்த வைக்கிறது.

கிஸ்விலில் விடுதியில் இளைப்பாறிய பின் இண்டர்லேக்கன் எனும் நகரை சுற்றி பார்க்க கிளம்பினோம்.

நாங்கள் முதலில் அடைந்த ஸ்விஸ் நகரம் இண்டர்லேக்கன். இண்டர்லேக்கனில் ஒரு வீதி முழுவதும் ஸ்விசின் பிரசித்தி பெற்ற கைகடிகாரங்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளன. இண்ட்டர்லேக்கன் சுற்றுலா செல்வோருக்கு மைய நகரங்களில் ஒன்றாய் உள்ளதால் அங்கிருக்கும் தங்கும் விடுதிகள் சுற்றுலா செல்வோரை கவர பல்வேறு முயற்சிகள் மேற்கொள்கின்றன. அவற்றில் ஒன்றாக மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஜன்னல்களை காண முடிகிறது.

switzerland

சுற்றுலா செல்வோருக்கு வசதியாக எல்லா நகரங்களிலும் குடிநீர் கொட்டிக்கொண்டிருக்கும் பொது நீர் குழாய்களை காண முடிகிறது. நீர் சுவையானதாகவும் குளிர்ந்தும் உள்ளது. இக்குடி நீர் நம் ஊர் சிறுவாணி தண்ணீரையும் தாமிரபரணி ஆற்று நீரையும் உங்கள் நினைவிற்கு கட்டாயம் கொணரும். எங்கள் நினைவிற்கும் கொண்டுவந்தது.

இண்டர்லேக்கனில் வட இந்திய உணவு விடுதிகள் தென்படுகின்றன. டெல்லி தர்பார், தாஜ்மகால் மற்றும் ஹோட்டல் ஷாலிமார் அவற்றில் சில.

இண்டர்லேக்கனில் ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தி விட்டு நடந்து சிட்டி செண்டரை அடைந்தோம்.

இண்டர்லேக்கனில் வின்ச்சில் ஆல்ப்ஸ் மலையின் ஒரு உச்சியை அடையலாம். ஹொகெனக்கல்லில் பரிசல் சவாரி செய்யும் பொழுது பரிசல் ஓட்டிகள் ஆயிரத்தில் ஒருவனில் இடம் பெற்ற டைவிங் காட்சியை நினைவு கூர்வது போல் இண்டர்லேக்கனில் 007 படங்களில் இடம் பெற்ற காட்சிகளை நினைவு கூர்கின்றனர். மேலும் ஒரு குறிப்பிட்ட மலை உச்சியில் இருந்து பாரா க்ளைடிங் தொடங்குகிறது. அங்கு தொடங்கும் பாரா க்ளைடிங் விக்டோரியா என்றழைக்கப்படும் க்ராண்ட் ஹோட்டலின் முன் உள்ள புல்வெளியினை வந்தடைகிறது. பாரா க்ளைடிங் செய்ய வசூலிக்கப்படும் தொகையான 190 ஸ்விஸ் ஃப்ரான்க்(சுமார் இருபதாயிரம் இந்திய ரூபாய்கள்) நம்மை கட்டாய பார்வையாளர்களாக ஆக்குவது மட்டுமன்றி இது நமக்கு ஒத்து வராத அட்வெஞ்சர் ஸ்போர்ட்ஸ் என்று நம்மையே ஆறுதல் சொல்லிக் கொள்ள வைக்கிறது.

இண்டர்லேக்கனில் இருந்து லௌட்டர்ப்ரூணன் எனும் ஊரை அடைந்தோம். லௌட்டர்ப்ரூணனிலும் சுற்றிலும் ஆல்ப்ஸ் மலையை பார்க்கலாம்.

Switzerland lauterbrunnen

ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா செல்ல விரும்புவோர் அதிக அளவு நடக்க தயாராய் இருக்க வேண்டும். ஆம் கார் பார்க்கிங் நாம் செல்ல விரும்பும் இடத்திற்கு அருகில் கிடைப்பது மிக அரிது. குறைந்தது ஒரு நாளில் ஐந்து முதல் ஏழு கி.மீ நடக்கும் அளவுக்கு நாம் தகுதியுடையவர்களாய் இருக்க வேண்டும்.

சீசன் நேரங்களில் இந்த நகரங்கள் எல்லாம் ஸ்கீயிங்கிற்கு ரெடியாகி விடும் இயற்கை போர்த்திய பனிப்பொழுவால் மூடப்பட்ட பனி கொண்ட மலைகளால். நாங்கள் சென்றது வெயில் காலமாக கருதப்படும் ஆஃப் சீசனாக இருந்ததால் இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தோம்.

அடுத்து க்ரிண்டல்வால்ட் எனும் நகரை அடைந்தோம்.

ஸ்விசில் எந்த ஒரு நகரமானாலும் அதன் நடுவில் ஒரு கிறிஸ்துவ கோவிலை காணமுடிகிறது. அரை மணிக்கொரு முறை இந்த கோவில் மணி அடித்த வண்ணம் உள்ளது. மேலும் இங்கு கல்லறைகள் கோவிலை சுற்றியுள்ள புல்வெளிகளில் காணப்படுகின்றன. இந்தியாவில் கிறிஸ்துவர்கள் கல்லறை திருநாளில் மட்டும் தனது மூதாதையோர் கல்லறைக்கு சென்று அலங்கரித்து இறந்துபோன முன்னோர்களை நினைவு கூர்கின்றனர். ஆனால் நாங்கள் சென்ற க்ரிண்டல்வால்டிலோ இந்த கல்லறைகளுக்கு முன்னே பூச்செடிகள் நடப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளன. வருடம் முழுவதும் கல்லறைக்கு முன்னே பூக்கள் பூத்தவாறு இருக்கும்.

Grindelwald

க்ரிண்டல்வால்டில் நகரின் நடுவே கால்வாயில் குளிர்ந்த நீர் பாய்ந்த வண்ணம் இருக்கிறது. படகுகளை வாடகைக்கு அமர்த்தி கொண்டு குழுக்கல் குழுக்கலாய் வார விடுமுறையை நண்பர்களுடன் கழிப்போர் உண்டு.

கடைசியாக இட்ஜல் ஓர்ல்ட் எனும் இடத்தை அடைந்தோம். இங்கு வின்ச் சவாரியும் உண்டு. படகு சவாரியும் உண்டு. இட்ஜல் ஓர்ல்டில் எங்களை கவர்ந்த ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் வீட்டின் வெளியே அவ்வீட்டில் பிறந்த குழந்தைகளின் பெயர்களை எழுதி அவர்களின் பிறந்த தேதியுடன் ஒட்டியுள்ளனர்.

ஸ்விட்சர்லாண்ட் கடிகாரம், இயுற்கை காட்சிகள், சீதோஷ்ணம், அட்வெஞ்சர் ஸ்போர்டிங் இவற்றுடன் சாக்லேட்டுக்கும் ஐஸ்க்ரீமுக்கும் பெயர் போன நாடாக உள்ளது.

மகள் அஷ்மிதா ஸ்டுட்கார்ட் திரும்பும் பொழுது ஷூரிக் வழியாக திரும்பலாம் என்று சொன்னாள். ஷூரிக் ஒரு பெரிய, பரபரப்பான நகராக இருந்தாலும் ஷுரிக்கின் முக்கிய ரயில்வே நிலையம் அருகே தெருக்கள் குப்பை கூளங்கள் சிதறி கிடந்தன இது மற்றபடி சுத்தமாக பராமரிக்கப்படும் ஸ்விட்சர்லாண்ட் நகரங்களுக்கு திருஷ்டியாய் இருந்தது.ஷூரிக்கின் ரயில் நிலையம் கீழே எட்டு வழி சுரங்கப் பாதை உள்ளது. அந்த சுரங்கப் பாதை முழுவதும் தரை மட்டத்திற்கு கீழே கடைகள் நிரம்பி உள்ளன.

Switzerland

ஸ்விட்சர்லாண்டில் ஹைவேயில் நீங்கள் சென்றால் தவற விட முடியாத இன்னொரு காட்சி பைக் ரைடர்ஸ். மோட்டார் பைக்கில் படு வேகத்தில் நான்கைந்து பேராக கறுப்பு நிற ஜெர்கின்ஸ், ஹெல்மெட் சகிதம் விரைந்து செல்லும் காட்சி. தொண்ணூருகளில் ஹாலிவுட்டை பிரட்டிப் போட்ட மாட் மாக்ஸ் படம் நீங்கள் பார்த்திருந்தால் இந்த பைக்குகள் ஒவ்வொன்றும் நம்மை கடக்கும் பொழுது நம் வயிற்றை ஒரு வகை பயம் கவ்வி பிடிப்பது உறுதி.

மலைப் பிரதேசங்களில் சைக்கிள் ஓட்டிச் செல்லும் ஆண்களும் பெண்களும் கண்ணில் பட்டவண்ணமே இருக்கின்றனர்.

நான் இன்னொரு முறை ஒரு நாடு செல்ல விரும்பினால் அது சீசன் காலத்தைய ஸ்விட்சர்லாண்டாகவே இருக்கும். ஸ்விட்செர்லாண்டில் எங்கள் இரண்டாம் கட்ட பயணம் முடிய ஸ்டுட்கார்ட் திரும்பினோம். ஸ்டுட்கார்ட்டில் இருந்து இத்தாலி மற்றும் வத்திகான் செல்ல திட்டம்.

அன்புடன்

எஃப்.எம்.பொனவெஞ்சர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.