ஆசியப் போட்டிகள் சீனாவின் ஹாங்ஸு நகரில் நடந்துவருகிறது. பெண்களுக்கான 100 மீட்டர் தடையோட்டத்தில் பங்குகொண்ட இந்திய வீராங்கனை ஜோதி யாராஜி இறுதிப்போட்டியில் மூன்றாவதாக வந்தார்.

இருந்தும் 30 நிமிடங்களுக்கு மேல் அவரது பதக்கம் உறுதிசெய்யப்படாமலேயே இருந்தது. இதற்கு பின்னணியில் நடந்த விஷயங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. நடந்தது என்ன?

100 meter hurdles

பொதுவாகவே ஆசிய அளவில் 100 மீட்டர் தடையோட்டத்தில் போட்டி என்பது சீன வீராங்கனைகளுக்கு இந்தியாவின் ஜோதி யாராஜிக்கும்தான். போட்டியின் தொடக்கத்தில் ஜோதி யாராஜி ஐந்தாவது லேனிலும், சீன வீராங்கனை வூ யென்னி நான்காவது லேனிலும் இருந்தனர். போட்டி தொடங்குவதற்காக துப்பாக்கி சுடப்படுவதற்கு முன்பே வூ யென்னி ஓடத்தொடங்கிவிட்டனர். இதற்காக அவர் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு தகுதிநீக்கம் செய்யப்பட்டார். ஆனால், ஆச்சர்யமளிக்கும் விதமாக நடுவர்கள் இந்திய வீராங்கனை ஜோதி யாராஜிக்கும் ரெட் கார்டு கொடுத்தனர். தான் எந்த தவறும் செய்யவில்லை என்பதைத் தெளிவாக உணர்ந்த ஜோதி கடும் அதிருப்தியுடன் நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ரீப்ளேவை தன்னிடம் காட்டும்படி கேட்டார். இந்திய தடகள கூட்டமைப்பு நிர்வாகிகளும் இது தொடர்பாக நடுவர்களிடம் முறையிட்டனர். இதனால் 10 நிமிடங்களுக்கு மேல் போட்டி தொடங்காமல் இருந்தது. இதற்குப் பிறகு ஜோதி யாராஜி போட்டியில் பங்குகொள்ள அனுமதிக்கப்பட்டார். சீன வீராங்கனை வூ யென்னி மட்டும் ரெட் கார்டு கொடுத்து வெளியில் அனுப்பப்பட்டார்.

இதில் கோபமடைந்த வூ யென்னி நடுவர்களிடம் முறையிட்டார். பின்பு அவரும் போட்டியில் பங்குகொள்ள அனுமதிக்கப்பட்டனர். போட்டிக்குப் பிறகு தகுதிநீக்கம் பற்றி முடிவெடுக்கப்படும் எனக் கூறப்பட்டது. தவறாகத் தொடங்கியது சீன வீராங்கனை வூ யென்னிதான் என்பது தெளிவாக தெரிந்திருந்தபோதும் அவர் மீண்டும் போட்டியில் பங்குபெற அனுமதிக்கப்பட்டது சரியல்ல என இந்திய தடகள கூட்டமைப்பு சார்பாக ஒரு புகார் எழுப்பப்பட்டது. முறைப்படி 100 டாலர் தொகை கட்டணமாகச் செலுத்தப்பட்டு இந்த புகார் (Protest) கொடுக்கப்பட்டது.

Jyothi Yarraji

இரு வீராங்கனைகளுடனும் போட்டி தொடங்கப்பட்டது. தனக்கேயான பாணியுடன் மெதுவாக தொடங்கிய ஜோதி இறுதி நொடிகளில் வேகமெடுத்து 12.91 விநாடிகளில் எல்லைக்கோட்டை கடந்து மூன்றாவதாக வந்தார். சீன வீராங்கனை வூ யென்னி இரண்டாவதாக வந்தார். முதலிடத்தை மற்றொரு சீன வீராங்கனையான லின் யூவே முதலிடம் பிடித்தார். போட்டிக்குப் பிறகு சுமார் அரைமணி நேரம் வரை வெற்றியாளர்கள் அறிவிக்கப்படவில்லை. அதற்குப் பிறகுதான் வூ யென்னி தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதுவரை தானும் பதக்கம் வென்றதாக தேசிய கொடியுடன் வலம்வந்துகொண்டிருந்தார் அவர். இந்த தகுதிநீக்கம் காரணமாக மூன்றாவதாக வந்த ஜோதி யாராஜி வெள்ளிப்பதக்கம் வென்றார்.

வூ யென்னி

இது அனைத்தும் நடந்தது பெரும்பாலும் சீன ரசிகர்களால் நிரம்பிவழிந்த 80,000 பேர் அமரக்கூடிய தடகள மைதானத்தில். போட்டிக்குப் பிறகு, நடுவர்களிடம் முறையிட்டது குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை சீன ஊடகங்கள் ஜோதியிடம் முன்வைத்தனர். “எனக்கான நியாயங்களை நான்தான் கேட்க முடியும்!” என்று அவற்றுக்கு நச்சென பதிலளித்தார் ஜோதி யாராஜி.

இதுகுறித்து பேசிய இந்திய தடகள கூட்டமைப்பின் துணைத் தலைவர் அஞ்சு பாபி ஜார்ஜ், “வழக்கத்துக்கு மாறாக நடந்துகொண்டனர் போட்டி நிர்வாகிகள். விதிகளின்படி முதலில் யார் தவறுதலாக தொடங்கினாரோ அவரைதான் தகுதிநீக்கம் செய்யவேண்டும். சீன வீராங்கனை ஒன்றரை அடி எடுத்துவைக்கும் வரை ஜோதியின் கைகள் தரையில்தான் இருந்தன. அது சாதாரணமாக பார்க்கும்போதே மிகத்தெளிவாக தெரியும். இருந்தும் அந்த மண்ணின் வீராங்கனையான வூ யென்னியை எப்படியாவது ஆடவைத்துவிட முடியுமா எனப் பார்த்தனர். இப்படி எளிதாகக் கொடுக்கப்பட வேண்டிய முடிவு அவ்வளவு நேரம் இழுத்தடிக்கப்படுவதை இதுவரை நான் பார்த்தில்லை. இந்த குழப்பங்கள் பெருமளவில் ஜோதியை பாதித்தன. சரியான மனநிலையில் அவர் போட்டியில் பங்கேற்கவில்லை. இருந்தும் வெற்றிபெற்றது அவரது போராட்டக்குணத்தை எடுத்துரைக்கிறது.” என்றார்.

இப்படி வூ யென்னி தவறான தொடக்கத்திற்காக தகுதிநீக்கம் செய்யப்படுவது இது முதல்முறையும் அல்ல. ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பிலும் அவர் இப்படி தவறாக தொடங்கி தகுதிநீக்கம் செய்யப்பட்டிருந்தார். அதில் ஜோதி யாராஜி தங்கம் வென்றார்.

வெற்றிபெற்றாலும் பதக்கம் நமக்கானதா இல்லையே என்றே தெரியாமல், ஆயிரக்கணக்கான சீன ரசிகர்கள் முன்னிலையில் வெள்ளிப்பதக்கம் வெல்வது என்பது உண்மையில் அவ்வளவு சாதாரணமான விஷயம் இல்லை. உங்கள் மனவலிமைக்கு வாழ்த்துகள் ஜோதி!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.