மணிப்பூர் மாநிலத்தில், குக்கி பழங்குடியின சமூக மக்களுக்கும் பழங்குடியினரல்லாத மைதேயி சமூக மக்களுக்கும் இடையே கடந்த மே மாதம் முதல் கடுமையான `மோதல்’, `வன்முறைகள்’ நடந்து கொண்டிருக்கின்றன. இடையில் குக்கி சமூகப் பெண்கள், மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர்களால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டு, வீதியில் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம், உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுவரை 175 பேர் இந்த வன்முறை காரணமாக இறந்திருப்பதாக மணிப்பூர் அரசு தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வன்முறை வெறியாட்டங்களால் சீர்குலைந்து கிடக்கும் மணிப்பூரில், பல மாதங்களுக்குப் பிறகு இணைய சேவை அண்மையில் மீண்டும் தொடங்கியிருக்கிறது.

மணிப்பூர் கலவரம் தொடர்பாக மத்திய அரசு விசாரணைக்குழு அமைத்தது. சி.பி.ஐ தற்போது இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திவருகிறது.

மணிப்பூர்

இதற்கிடையே, ஜூலை மாதம் காணாமல்போன 20 வயது மாணவனும், அவரின் தோழியான 17 வயது மாணவியும், ஆயுதமேந்திய குழுவிடம் சிக்கியிருக்கும் புகைப்படமும், அவர்கல் காட்டில் இறந்துகிடக்கும் புகைப்படமும் இணையத்தில் கசிந்து, நாட்டை மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. உயிரிழந்த மாணவர்கள் இருவரும் மைதேயி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.

இது மணிப்பூரில் மீண்டும் வன்முறைக்கு வித்திட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், மணிப்பூரின் மாநில உள்துறை அமைச்சகம் மணிப்பூரை பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவித்திருக்கிறது. இது குறித்து வெளியான தகவலின்படி, அதிகரித்து வரும் வன்முறையைத் தொடர்ந்து, மணிப்பூர் மாநிலத்தின் 19 காவல் நிலையப் பகுதிகளைத் தவிர முழு மாநிலமும் பதற்றம் நிறைந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மணிப்பூர் மாநிலம் முழுவதும் சிவில் நிர்வாகத்தின் உதவிக்காக ஆயுதப் படைகளைப் பயன்படுத்துவதற்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.