என் பெற்றோருக்கு நான் ஒரே பெண். எனக்கு முன் இரண்டு குழந்தைகள் பிறந்து இறந்துவிட்டதால், என்னை அவ்வளவு செல்லமாகக் கொண்டாடி வளர்த்தார்கள். கல்லூரியில் படித்தபோது, என் சீனியர் ஒருவர் என்னை விரும்புவதாகக் கூறி, ஒரு கட்டத்தில் என்னையும் அவர் காதலுக்குச் சம்மதிக்க வைத்தார். என் பெற்றோர், ‘இது வேண்டாம், அந்த வீட்டின் பழக்க வழக்கம் உனக்கு ஒத்து வராது’ என்றனர். அவர் வீட்டிலும் சம்மதம் கிடைக்கவில்லை. இருவரும் இருவீட்டின் சம்மதமின்றி காதல் திருமணம் செய்துகொண்டோம்.

மாதங்கள் ஆக ஆக, இருவர் வீட்டிலும் எங்களை ஏற்றுக்கொண்டார்கள். ஆனாலும் கணவர் வீட்டில் மாமியார், மாமனார், நாத்தனார்கள், கொழுந்தனார்கள் யாரும் என்னிடம் அதிகமாகப் பேச மாட்டார்கள். அந்தக் கூட்டுக் குடும்பத்தில் தனித்திருந்த எனக்கு ஒரே ஆறுதல், என் கணவர். ‘எல்லாம் போகப் போக சரியாகிடும்’ என்பார்.

இந்நிலையில் என் கணவரின் முதல் தம்பிக்கு சொந்தத்திலேயே திருமணம் முடிந்தது. அந்தப் புது மருமகளிடம் இந்தக் குடும்பமே பாசத்தை கொட்டுகிறது. இன்னொரு பக்கம், அதை என்னை வெறுப்பேற்றும் நடவடிக்கையாக நினைத்தே அவர்கள் செய்கிறார்கள் என்பதும் உண்மை.

sad

ஏதாவது பண்டிகை, விசேஷம் என்றால், ‘அந்தப் பொண்ணுக்கு (எனக்கு) நம்ம ஜாதி வழக்கம் எதுவும் தெரியாது, நீயே எல்லாத்தையும் பண்ணு’ என்பது, உறவினர்களின் விசேஷங்களுக்கு என் கணவரையும் என்னையும் தவிர்த்து, கொழுந்தனாரையும் புது மருகளையும் அனுப்புவது, அந்தப் பெண்ணின் உறவினர்கள் வீட்டுக்கு வந்தால் விருந்து வைத்து அமர்க்களப்படுத்தி, என் தாய், தந்தை வந்தால் ‘வாங்க’ என்பதற்கு மறு வார்த்தை பேசாமல் அனைவரும் ஒதுங்கிச் செல்வது என்று… காயப்பட்டுக் கிடக்கிறேன்.

கொடுமையாக, இதை எதிர்த்துக் கேட்க வேண்டிய என் கணவர் அமைதியாக இருக்க, ‘கூட இருந்தாதானே அவமானப்படுத்துவாங்க? நாம தனிக்குடித்தனம் போயிடலாம்’ என்றேன். அவர் அதுக்கு மறுத்ததோடு, ‘பேசாம நானும் என் ஜாதியிலேயே ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணியிருந்தா, ஊரு, உறவோட சேர்ந்து இருந்திருப்பேன்’ என்று வெறுப்பும் சலிப்புமாகச் சொன்னபோது, சுக்கு நூறாகிப் போனேன். என் கண்ணீரைப் பார்த்து, ‘இதையெல்லாம் நினைச்சுதான் அப்போவே வேண்டாம்னு சொன்னோம்’ என்று என் பெற்றோரும் கண்ணீர் வடிக்கிறார்கள்.

Sad Couple

இனி இன்னொரு கொழுந்தனாருக்கு மணம் முடித்து மூன்றாவது மருமகள் வரும்போது, இந்த வீட்டில் என் நிலை இன்னும் தாழ்ந்து போகுமா? அவமானங்கள், புறக்கணிப்புகள் என்னோடு நின்று போகுமா, அல்லது எனக்குப் பிறக்கப்போகும் குழந்தைக்கும் தொடருமா? எனில், இந்த வாழ்க்கையில் என்ன சந்தோஷம் கிடைக்கப் போகிறது எனக்கு?

மனக்காயங்களுடன் தவித்துக்கொண்டிருக்கும் என் நிம்மதிக்கு வழி என்ன?

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.