நாடாளுமன்றத்தில் நடைபெற்ற மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மீதான விவாதத்தின் போது தி.மு.க எம்பி கனிமொழி பேச முயன்றபோது, பா.ஜ.க எம்பிகள் கூச்சலிட்டனர்.

இதற்கு கனிமொழி, தேசியவாத காங்கிரஸ் எம்.பி சுப்ரியா சுலே, தி.மு.க எம்.பி தயாநிதி மாறன் ஆகியோர் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

புதிய நாடாளுமன்றம்

பின்னர் அவையில் பேசிய எம்.பி கனிமொழி, “மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை துரதிஷ்டவசமாக பா.ஜ.க தன் குறுகிய அரசியலுக்குப் பயன்படுத்திக்கொள்ள முயற்சி செய்கிறது. 1927ம் ஆண்டு தமிழ்நாடுதான் இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு பெண்ணை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்தது. அவர்தான் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. பெண்களுக்கு எதிரான `தேவதாசி’ கொடுமைகளை ஒழித்தவர்.

இப்படியான பின்னணியில் 100 ஆண்டுகளுக்குப் பிறகும் நாம் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை இன்னமும் நிறைவேற்றவில்லை. இந்த மசோதா தொடர்பாக பேச 13 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு வாய்ப்பு கிடைத்தது, தற்போதும் எனக்கு மசோதா பற்றி பேச வாய்ப்புக் கிடைத்துள்ளது. இத்தனை ஆண்டுகளாக நாமும் பேச மட்டும்தான் செய்கிறோம்.

இந்த மசோதா ரகசியமாகக் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த கூட்டத் தொடருக்கு எதற்கு அழைப்பு விடுக்கப்பட்டது என்பதே எங்களுக்குத் தெரியாது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. மசோதாவை கொண்டுவருவது பற்றி விவாதிப்பதற்கு யாராவது அழைக்கப்பட்டார்களா என்பதும் எனக்குத் தெரியாது.

எங்கள் திரைகளில் திடீரென இந்த மசோதா பற்றிய தகவல் வந்ததும் முதலில் நான் அதிர்ந்து போனேன். பின்னர் இந்த மசோதா நிறைவேற்றப்படுவதை நினைந்து மிகவும் சந்தோஷப்பட்டேன். அதற்குள், மசோதா முழுமையாக நிறைவேற்றப்படுவதற்கு காத்திருக்க வேண்டும் என்று நீங்கள் கூறியதும் என் இதயம் நம்பிக்கையை இழந்துவிட்டது. இந்த மசோதா எப்போது நடைமுறைப்படுத்தப்படும் என்பது கூட தெரியவில்லை.

சோனியா காந்தி

இந்த மசோதாவை, பெண்கள் சக்தி வந்தனம் மசோதா என்று அழைக்கின்றனர். முதலில் எங்களுக்கு வந்தனம் தெரிவிப்பதை நிறுத்துங்கள். நாங்கள் அதை ஒருபோதும் விரும்பவில்லை. எங்களை வழிப்பட வேண்டும் என நாங்கள் விரும்பவில்லை. எங்களை தாயாகவோ, சகோதரியாகவோ அழைக்க வேண்டாம். எங்களை சமமாக நடத்துங்கள் போதும். உங்களுக்கு உள்ள அதே உரிமை எங்களுக்கும் உள்ளது. இந்த நாடு எங்களுடையது. இந்த நாடாளுமன்றம் எங்களுடையது. இங்கு இருப்பதற்கு எங்களுக்கு சம உரிமை உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

இதேபோல், நேற்று நடந்த கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, “பெண்கள் சக்தி வந்தனம் மசோதாவுக்கு நான் முழுமையாக ஆதரவு அளிக்கிறேன். இது என் வாழ்வில் மிகவும் உச்சம் தொட்ட தருணம். ஏனெனில் முதன்முறையாக உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களின் பங்களிப்பை நிர்ணயிக்கும் அரசியலமைப்புத் திருத்தம் என்பது, என் கணவர் ராஜீவ் காந்தியால் கொண்டுவரப்பட்டது. இந்த மசோதாவை நிறைவேற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

ஆனால், கடந்த 13 ஆண்டுகளாக இந்தியப் பெண்கள் தங்கள் அரசியல் பொறுப்புகளுக்காகக் காத்திருக்கிறார்கள். இப்போது இன்னும் சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் எனச் சொல்லப்படுகிறார்கள். இன்னும் எத்தனை ஆண்டுகள் இப்படியே காத்திருக்க வேண்டும்? இந்த மசோதாவை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இதனுடன் ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்தி எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓ.பி.சி பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்” என பேசியுள்ளார்.

ராகுல் காந்தி

இவர்களை தொடர்ந்து பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, “மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படுவது நம் நாட்டின் பெண்களுக்கு மிக முக்கியமான நடவடிக்கை என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். எனது பார்வையில் இந்த மசோதா முழுமையடையாத ஒன்று. இதில் ஓ.பி.சி இடஒதுக்கீடு சேர்க்கப்படுவதை நான் பார்க்க விரும்புகிறேன்.

இந்திய அரசாங்கத்தில் 90 செயலாளர்கள் இருக்கிறார்கள் அதில் 3 பேர் மட்டுமே ஓ.பி.சி பிரிவை சேர்ந்தவர்கள். நீங்கள் (அரசு) இந்த மசோதாவை அமல்படுத்துங்கள். எல்லை நிர்ணயம் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு தேவையில்லை, பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு மட்டுமே வேண்டும். அதை தாமதப்படுத்தாமல் வழங்குங்கள்” எனப் பேசினார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.