கேரளா வனப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் நுழைந்து மக்களை அச்சுறுத்திய அரிசிக் கொம்பன் யானை அங்கிருந்து விரட்டப்பட்ட பின்னர் தமிழகத்தின் தேனி மாவட்டத்துக்குள் நுழைந்தது. அதனால் தேனி வனப்பகுதியையொட்டி வசித்த மக்கள் அச்சம் அடைந்ததால் அந்த யானையைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேற்குத் தொடர்ச்சி மலைக்கு கொண்டு செல்லப்பட்ட யானை

அதன்படி மக்களை அச்சுறுத்திய அரிசிக் கொம்பன் யானை பிடிக்கப்பட்டு, மேற்குத் தொடர்ச்சி மலையின் அடர்ந்த வனப்பகுதியான நெல்லை மாவட்டம் மேல் கோதையாறு அணை அருகே உள்ள முத்துக்குழி வயல் பகுதியில் கடந்த ஜூன் 5-ம் தேதி விடப்பட்டது. அதை காட்டுக்குள் விடுவதற்கு முன்பாக அதன் கழுத்தில் ரேடியோ கருவி பொருத்தப்பட்டது.

யானையின் கழுத்தில் கிடந்த ரேடியோ கருவி மூலம் அதன் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். அதன் நடமாட்டம் நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட வனப்பகுதியில் இருப்பதை வனத்துறையினர் கண்டுபிடித்தனர். அதனால் அப்பகுதி மக்கள் எச்சரிக்கப்பட்டதுடன், அரிசிக் கொம்பனை காட்டுக்குள் விரட்டவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், அங்கிருந்து நகராமல் அதே பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் நுழைந்த அரிசிக் கொம்பன், நாலுமுக்கு தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பில் வளர்த்து நின்ற வாழைகளை சேதப்படுத்தியது. அத்துடன், அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் சுற்றி வந்தது. அதனால் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அதிகாரிகள் அப்பகுதிக்குச் சென்று மலைப்பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது அரிசிக் கொம்பன் யானை குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது தெரியவந்ததால் அதை அங்கிருந்து விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை ஊத்து எஸ்டேட் பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் அருகே அரிக்கொம்பன் நிற்பதை வனத்துறையினர் கண்டுபிடித்தனர்.

யானைக்கூட்டம்

அரிசிக் கொம்பன் யானை மூலம் பொதுமக்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள். அதனால் மாஞ்சோலை பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. குதிரை வெட்டி தங்கும் விடுதி, மாஞ்சோலை பகுதிக்கு ஒரு நாள் செல்வதற்கான அனுமதி ஆகியவையும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் மணிமுத்தாறு அருவியில் குளிக்கச் செல்லும் பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், “மாஞ்சோலை வனப்பகுதியில் நடமாடி வருவது அரிக்கொம்பன் யானைதான். வேறு யானை கூட்டம் எதுவும் வரவில்லை. தற்போது அந்த யானையின் கண்ணுக்கு மேலே மஸ்து உள்ளது. அது இருக்கும் வரை யானையின் நடவடிக்கைகள் ஆக்ரோஷமாக இருக்கும்.

அரிசிக் கொம்பன்

யானைகளுக்கு இதுபோன்ற பாதிப்பு ஆண்டுக்கு ஒருமுறை வரும். அதனைச் சரி செய்ய மருத்துவக்குழுவுக்குப் பரிந்துரை செய்துள்ளோம். அதன்பின்னர் முண்டந்துறை அடர் வனப்பகுதிக்கு அரிசிக் கொம்பன் யானை விரட்டப்படும்” எனத் தெரிவித்துள்ளனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.