புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கருக்காகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கே. ஆர். செல்வம், கே. ஆர். சின்னத்துரை. கே.ஆர் பிரதர்ஸ் என்று அழைக்கப்படும் இவர்களுக்குத் திருமணம் நிச்சயக்கப்பட்டிருந்தது. 

செல்வம் திருமணத்தில்

இதில், கே.ஆர் செல்வம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கப்பூரில் உள்ள (EI Corp) எனும் தனியார் நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.

குடும்பத்தினர் சொந்த ஊரில் வைத்துத் திருமணம் செய்ய முடிவு செய்திருந்தனர். இதனையறிந்த சிங்கப்பூர் நிறுவனத்தினர் செல்வத்திற்கு முன்னதாகவே விடுப்பு கொடுத்துவிட்டனர்.

சிங்கப்பூரிலிருந்து செல்வம் கிளம்பும்போது, முதலாளியில் இருந்து சக பணியாளர்கள் வரையிலும் அனைவரும் தனது திருமணத்தில் கலந்துகொள்ள வேண்டுமாறு கட்டாய அழைப்பு விடுத்துவிட்டு வந்திருக்கிறார்.

அவரின் அழைப்பினை ஏற்ற அந்த நிறுவனத்தின் உரிமையாளர் கால்லின், திட்ட இயக்குனர் ஹம்மிங் மற்றும் திட்ட மேலாளர் டிம் என முக்கியமான மூன்று அதிகாரிகள் திருமணத்தில் கலந்துகொண்டு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.

தொலைதூரம் இருந்தாலும் உரிமையாளர் திருமண நிகழ்வில் கலந்துகொண்டதால் நெகிழ்ந்து போன மணமகன் வீட்டார், சிங்கப்பூரில் இருந்து வருகை தந்த மூவருக்கும் பரிவட்டம் கட்டி, குதிரை சாரட் வண்டியின் மீது ஏற்றி வந்து  உற்சாக வரவேற்பு அளித்தனர். 

சாரட் வண்டியில் ஊர்வலம்

கறம்பக்குடி சீனிக்கடை முக்கம்பகுதியிலிருந்து வெளிநாட்டினர் மூவர் மற்றும் மணமக்களை குதிரை பூட்டிய சாரட் வண்டியில் செண்ட மேளம் முழங்க திருமண மண்டபத்திற்கு அழைத்து வந்தனர். திருமண மண்டபத்திற்கு வருகை தந்த வெளிநாட்டவர்கள் மூவருக்கும் தமிழ் பாரம்பரிய முறைப்படி ஆரத்தி சுற்றி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து திருமணத்திற்கு வருகை தந்த தமிழக சுற்றுச் சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் மணமக்கள் மாலை மாற்ற திருமணம் நடைபெற்றது.

 அப்போது வெளிநாட்டவர்களின் வருகை குறித்து அறிந்த அமைச்சர், அவர்களுக்கு கைகுலுக்கி பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

அப்போது ” ஐ லவ் இந்தியா” எங்களுக்கு இந்தியாவை ரொம்பவே பிடித்துப்போய் விட்டது. அதுவும் தமிழ்நாட்டின் கலாசாரம் ரொம்பவே பிடித்துப் போய்விட்டது” என்றனர்

அமைச்சர் மரியாதை செய்யும் நிகழ்வு

இதைத் தொடர்ந்து, வெளிநாட்டினர் மணமகனின் சொந்த கிராமமான கருக்காக்குறிச்சியில் உள்ள அரசுப் பள்ளிக்கு அடிப்படை வசதிகளை மேற்கொள்ள 1 லட்ச ரூபாய் நன்கொடையும் வழங்கி கிராம மக்களையே நெகிழ வைத்திருக்கின்றனர். இதுபற்றி மணமகன் வீட்டாரிடம் கேட்டபோது, “முதலாளியே நேரில் வருவாருன்னு நெனச்சு கூட பார்க்கல. எல்லாருமா வந்திருந்து, எங்க மகன் கல்யாணத்தை சிறப்பா செஞ்சி வச்சிட்டு போயிட்டாங்க. வெளிநாட்டில் இந்த மாதிரி முதலாளிகள் கிடைக்கிறது ரொம்பவே கஷ்டம். எங்களுக்கு அந்த பாக்கியம் கிடைச்சிருக்கு. கல்யாணத்துக்கு வந்ததோடு ஊருக்கும் உதவிகளைச் செய்திருக்கின்றனர். அவங்களுக்கு ரொம்ப நல்ல மனசு” என்றனர் நெகிழ்ச்சியோடு.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.