ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு 2014-ம் ஆண்டு ஆட்சிக் காலத்தில், திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ. 300 கோடிக்கு மேல் முறைகேடு செய்ததாகப் புகார் எழுந்தது. இந்த புகாரின் பேரில் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார். இதனால் அவரின் ஆதரவாளர்கள் மற்றும் கட்சியைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சந்திரபாபு நாயுடு கைதைத் தொடர்ந்து ஆந்திரா மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

அதே சமயம் கைது விவகாரம் தொடர்பான வழக்கில் விஜயவாடா நீதிமன்றத்தில் 8 மணி நேரமாக இரு தரப்பு வாதங்கள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வழங்கப்பட்ட உத்தரவில், ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு செப்டம்பர் 22 -ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது.

சந்திரபாபு நாயுடு

இந்த உத்தரவைத் தொடர்ந்து சந்திரபாபு நாயுடு ராஜமுந்திரி சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஏற்கனவே விசாரணைக்காக சந்திரபாபு நாயுடு அழைத்துச் செல்லப்பட்டபோது மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றதால் போலீஸார் அதிகப்படியாக குவிக்கப்பட்டனர். பல இடங்களில் பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். குறிப்பாகத் தமிழக எல்லையில் பேருந்துகள் நிறுத்தப்பட்டது. சந்திரபாபு நாயுடு அவருடைய அரசியல் வாழ்க்கையில் முதல்முறையாகச் சிறைக்குச் சென்றதால், அவரின் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் மாநிலம் தழுவிய அளவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ்க்கு போன் செய்து தைரியமாக இருக்குமாறு கூறி, ஆறுதல் தெரிவித்துள்ளார். “தைரியமாக இருங்கள். என்னுடைய நண்பர் (சந்திரபாபு நாயுடு) எந்தத் தவறையும் செய்திருக்கமாட்டார். அவர் செய்த நலத்திட்ட உதவிகளும், வளர்ச்சி திட்டங்களும் சட்டவிரோத கைதிலிருந்து அவரை பாதுகாக்கும். 24 மணிநேரமும் மக்களுக்காக பாடுபட்ட அவரின் உழைப்பும், அர்பணிப்பும் ஒருபோதும் வீண்போகாது. தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள கைது நடவடிக்கையோ, அவர் மீதான குற்றச்சாட்டோ எந்த வகையிலும் சந்திரபாபு நாயுடுவின் புகழுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. மேலும் தன்னலமற்ற பொதுச் சேவையால் அவர் விரைவில் சிறையிலிருந்து வெளியே வருவார்” என ரஜினி நம்பிக்கை தெரிவித்துள்ளளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சந்திரபாபு நாயுடு, ரஜினிகாந்த், நாரா லோகேஷ்

சந்திரபாபு நாயுடு-ரஜினி நட்பின் பின்னணி:

கடந்த ஏப்ரல் மாதம் ஆந்திராவில் நடந்த ‘என்.டி.ஆர் நூற்றாண்டு’ நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, தனக்கும் சந்திரபாபு நாயுடுக்கும் உள்ள நட்பு குறித்து பேசி இருந்தார். அதில், “எனக்கும் சந்திரபாபு நாயுடுவுக்கும் 30 ஆண்டு கால நட்பு உள்ளது. சந்திரபாபு நாயுடுவை எனக்கு என்னுடைய நண்பர்களில் ஒருவரான மோகன் பாபு அறிமுகம் செய்து வைத்தார். அன்று முதல் நான் ஐதராபாத் வரும் ஒவ்வொரு முறையும் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து பேசுவேன். அவருடன் பேசும் போது என்னுடைய அறிவு தானாகவே அதிகரிக்கும். அந்த அளவிற்கு அவருடைய பேச்சில் ஏராளமான விஷயங்கள் அடங்கி இருக்கும். எப்போதும் பொதுமக்களுக்கு சேவை செய்வது பற்றியே அவருடைய பேச்சு இருக்கும். இந்திய அரசியலுக்கு அப்பாற்பட்டு சர்வதேச அரசியலிலும் அவருக்கு நல்ல பிடிப்பு உள்ளது.

முற்போக்கு சிந்தனை கொண்ட சந்திரபாபு நாயுடு அரசியலில் ஒரு தீர்க்கதரிசி. இதன் காரணமாகவே இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறை பற்றிய விழிப்புணர்வு இல்லாத போது அந்த துறை பற்றி புரிந்து கொண்ட சந்திரபாபு நாயுடு தன்னுடைய ஆட்சி காலத்தில் ஐதராபாத் நகரை ஹைடெக் சிட்டி ஆக மாற்றி ஐடி நிறுவனங்கள் ஹைதராபாத்தில் தொழில் துவங்க தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுத்தார். எங்களுக்குள் அறிமுகம் ஏற்பட்டது முதல் இப்போது வரை என்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து கூற அவர் தவறியதே கிடையாது. விஷன் 2047 என்ற பெயரில் 2047 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் எப்படி இருக்க வேண்டும் என்ற தொலைநோக்கு திட்டத்துடன் இப்போது சந்திரபாபு நாயுடு அரசியலில் பணியாற்றி வருகிறார்” என்று நடிகர் ரஜினிகாந்த் பேசி இருந்தார்.

ரஜினிகாந்த்

ஆந்திராவில் இன்னும் ஓராண்டில் தேர்தல் வரவுள்ள நிலையில், ரஜினி இவ்வாறு புகழ்ந்து பேசியதை ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சித்தனர். இந்த விமரசங்களுக்கு பதிலளித்து பேசிய சந்திரபாபு நாயுடு, “என்.டி.ராமாராவ் மீது கொண்ட அன்பால்தான் ரஜினி அந்த விழாவுக்கு வர ஒப்புக்கொண்டார். படப்பிடிப்பு இருந்தும் அதனை தவிர்த்து இவ்விழாவில் கலந்துகொண்டார். இது, என்.டி.ஆர் மீது ரஜினிக்கு உள்ள மரியாதையை காட்டுகிறது. மேலும் அவர் யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை. ஜெகன் கட்சி குறித்து அவர் பேசவில்லை. ஆனால் ஆளும் கட்சியினர் பதவி கர்வத்தால் ரஜினியை விமர்சிக்கின்றனர். ரஜினி ஒரு மாபெரும் நடிகர். அதையும் தாண்டி அவர் நல்ல மனிதர். அவரை தரக்குறைவாக விமர்சிப்பது கண்டனத்துக்குரியது. இதை தெலுங்கு மக்கள் மன்னிக்க மாட்டார்கள். ரஜினி குறித்து பேசியவர்கள் தங்களது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று ரஜினிக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.

இருவர் மீதான விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள் வரும் போது ஒருவருக்கொருவர் ஆதரவாக பேசி இருப்பதே இவர்கள் நட்பின் எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.