என்னதான் வார இறுதியில் விருந்தே சாப்பிட்டாலும் மாலைநேரத்தில் சாப்பிடும் நொறுக்குத்தீனிகளுக்கான தேடல் எப்போதும் இருக்கும். சாட் கடைகளில் விற்கப்படும் உணவுகளின் தரம், சுகாதாரம் போன்றவை மட்டுமன்றி விலையும் நம்மை யோசிக்க வைக்கும் நிலையில், விதம் விதமான சாட் அயிட்டங்களை வீட்டிலேயே செய்து ருசிக்கத்தான் இந்த ரெசிப்பீஸ்…

சேவ் பூரி

தேவையானவை:

பாப்டி எனப்படும் மைதா தட்டைகள் அல்லது சாட் தட்டை – 18 (இவை பெரிய கடைகளில் கிடைக்கும்)

உருளைக்கிழங்கு – ஒன்று (தோல் உரித்து, வேகவைத்து சிறிய சதுரமாக நறுக்கிக்கொள்ளவும்)

வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கியது)

தக்காளி – இரண்டு (பொடியாக நறுக்கியது)

மாங்காய் – பாதி (பொடியாக நறுக்கியது, விருப்பப்பட்டால்)

பூண்டுச் சட்னி – 2 டீஸ்பூன்

இனிப்புச் சட்னி – 2 டீஸ்பூன்

பச்சைச் சட்னி – 4 டீஸ்பூன்

சாட் மசாலாத்தூள் – அரை டேபிள்ஸ்பூன்

வறுத்த சீரகத்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன்

மிளகாய்த்தூள் – அரை டேபிள்ஸ்பூன்

எலுமிச்சைச்சாறு – ஒரு டேபிள்ஸ்பூன்

ஓமப்பொடி (சேவ்) – அரை கப்

கொத்தமல்லி – சிறிதளவு (நறுக்கியது)

வறுத்த கடலைப்பருப்பு – 3 டேபிள்ஸ்பூன்

சேவ் பூரி | வீக் எண்டு ரெசிப்பீஸ்

செய்முறை:

ஒரு தட்டில் ஆறு தட்டைகளை வரிசையாக வைத்து அதன் மேல் சிறிது உருளைக்கிழங்கு துண்டுகளை லேசாக மசித்தவாறு போடவும். பிறகு அதன்மேல் நறுக்கிய வெங்காயத்தைத் தூவவும். பின்னர் இதில் பூண்டுச் சட்னி, இனிப்புச் சட்னி, பச்சைச் சட்னி ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக ஊற்றவும். பிறகு சாட் மசாலா, வறுத்த சீரகத்தூள், மிளகாய்த்தூள், ஓமப்பொடி (சேவ்) மற்றும் கால் டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு ஆகியவற்றை பரவலாகச் சேர்க்கவும். இதன் மீது நறுக்கிய தக்காளி, மாங்காய், கொத்தமல்லி, வறுத்த கடலைப் பருப்பு தூவிப் பரிமாறவும். இதே போன்று மூன்று செட்டுகள் தயாரிக்கலாம்.

ஆலு சாட்

உருளைக்கிழங்கு மசாலாவுக்கு தேவையானவை:

பாதி வேகவைத்த உருளைக்கிழங்கு – 500 கிராம் (தோலை நீக்கி சதுர வடிவில் நறுக்கவும்)

எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப

மிளகாய்த்தூள் – அரை டேபிள்ஸ்பூன்

உலர்ந்த மாங்காய்ப்பொடி – ஒரு டேபிள்ஸ்பூன்

வறுத்த சீரகத்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன்

தனியாத்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன்

கடலை மாவு – 2 டேபிள்ஸ்பூன்

சாட் செய்ய தேவையானவை:

கெட்டி தயிர் – அரை கப் (அடித்து வைக்கவும்)

பூண்டுச் சட்னி – 2 டீஸ்பூன்

இனிப்புச் சட்னி – 2 டீஸ்பூன்

பச்சைச் சட்னி – 4 டீஸ்பூன்

சாட் மசாலா – அரை டேபிள்ஸ்பூன்

வறுத்து அரைத்த சீரகத்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன்

மிளகாய்த்தூள் – அரை டேபிள்ஸ்பூன்

ஓமப்பொடி (சேவ்) – அரை கப்

நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு

ஆலூ சாட் | வீக் எண்டு ரெசிப்பீஸ்

செய்முறை:

உருளைக்கிழங்கைத் தவிர உருளைக்கிழங்கு மசாலா செய்வதற்குக் கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப்பொருள்களுடன் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றிக்கலந்து கொள்ளவும். பிறகு இக்கலவையில் உருளைக்கிழங்கையும் சேர்த்துக் கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். ஒரு வாணலியில் சிறிது எண்ணெயைச் சூடாக்கி அதில் ஊறவைத்து இருக்கும் கலவையைச் சேர்த்து நான்கைந்து நிமிடங்கள் வதக்கி எடுத்துக்கொள்ளவும்.

ஒரு தட்டில் சிறிது உருளைக்கிழங்கு கலவையை வைத்து அதன் மேல் சிறிது தயிர், பூண்டுச் சட்னி, இனிப்புச் சட்னி, பச்சைச் சட்னி ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக ஊற்றவும். பிறகு அதன் மீது சாட் மசாலா, வறுத்த சீரகத்தூள், மிளகாய்த்தூள், ஓமப்பொடி (சேவ்), கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.

ஆலு போஹா

தேவையானவை:

கெட்டி வெள்ளை அவல் – ஒரு கப்

பச்சை மிளகாய் – 3 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

உருளைக்கிழங்கு – ஒன்று (தோல் உரித்து, வேக வைத்து சிறிய சதுரமாக வெட்டிக்கொள்ளவும்)

கடுகு – ஒரு டீஸ்பூன்

சீரகம் – ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை – தேவையான அளவு

மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்

வறுத்த வேர்க்கடலை – இரண்டு டேபிள்ஸ்பூன்

சர்க்கரை – ஒரு டீஸ்பூன்

எண்ணெய் – ஒரு டீஸ்பூன்

எலுமிச்சைச்சாறு – ஒரு டீஸ்பூன்

நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

ஆலூ போஹா | வீக் எண்டு ரெசிப்பீஸ்

செய்முறை:

அவலை ஒரு வடி கூடையில் கொட்டி, கழுவி பத்து நிமிடங்கள் தண்ணீரை வடிய விடவும். கடாயில் எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, சீரகம், மஞ்சள்தூள், பச்சை மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும். பிறகு இதனுடன் உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும். பின்னர் இக்கலவையில் ஊறிய அவல், வறுத்த வேர்க்கடலை, உப்பு, சர்க்கரை, எலுமிச்சைச்சாறு, கொத்தமல்லி ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறினால் ஆலூ போஹா ரெடி.

தவா புலாவ்

தேவையானவை:

பச்சரிசி – ஒரு கப்

குடமிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கியது)

தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)

வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கியது)

பச்சைப்பட்டாணி – கால் கப் (அல்லது கால் கப் காய்ந்த பட்டாணியை ஊறவைத்து, பின்னர் வேக வைத்துக்கொள்ளவும்)

காய்ந்த மிளகாய் – பூண்டு விழுது – ஒரு டேபிள்ஸ்பூன்

மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்

மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்

பாவ் பாஜி மசாலா – 3 டீஸ்பூன்

சீரகம் – அரை டீஸ்பூன்

வெண்ணெய் – 3 டீஸ்பூன்

எலுமிச்சைச்சாறு – அரை டீஸ்பூன்

கொத்தமல்லி – சிறிதளவு

உப்பு – சுவைக்கேற்ப

தவா புலாவ் | வீக் எண்டு ரெசிப்பீஸ்

செய்முறை:

அரிசியை உதிர் உதிராக வேகவைத்து ஆறவிடவும். பட்டாணியை வேகவைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் வெண்ணெய் விட்டு சூடேற்றி சீரகம் சேர்த்துத் தாளிக்கவும். இத்துடன் காய்ந்த மிளகாய் – பூண்டு விழுது சேர்க்கவும். பிறகு, நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அடுத்து நறுக்கிய தக்காளி, குடமிளகாய், மிளகாய்த் தூள், மஞ்சள்தூள், உப்பு, பாவ் பாஜி தூள் ஆகியவற்றை சேர்க்கவும். இக்கலவையில் சிறிது தண்ணீர்விட்டு வதக்கி மிதமான தீயில் வேகவிடவும். மசாலா வெண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். பிறகு வேகவைத்த பட்டாணி மற்றும் வடித்த சாதத்தை இதனுடன் சேர்த்து நன்கு கிளறி, எலுமிச்சைச்சாறு, கொத்தமல்லி தூவி இறக்கவும்.

காய்ந்த மிளகாய் – பூண்டு விழுது செய்ய… ஐந்து காய்ந்த மிளகாய்களை கால் கப் வெந்நீரில் பத்து நிமிடங்கள் ஊறவைக்கவும். ஊறிய மிளகாய், ஏழு பூண்டு பற்கள் சேர்த்து, தண்ணீர்விடாமல் மைய அரைத்துப் பயன்படுத்தவும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.