“அ.தி.மு.க மதுரை மாநாடு தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் எழுச்சியை தந்திருப்பதாக நினைக்கிறீர்களா?”

“நிச்சயமாக… ஏனென்றால், கட்சிக்காரர்களுக்கு அடுத்த ஆட்சி நம்முடையது தான் என்ற நம்பிக்கையும் தி.மு.க ஆட்சியை வீட்டுக்கு அனுப்பவேண்டும் என்ற எழுச்சியை உண்டாக்கி இருக்கிறது. பொதுமக்கள் மத்தியிலும் ‘டாக் ஆஃப் தி சப்ஜெக்டாக இருக்கிறது. மாநாடு வெற்றி என்று சொல்வதற்கு பதிலாக பிரமாண்ட வெற்றி என்றே சொல்லவேண்டும்.”

மதுரை அதிமுக மாநாடு

“மாநாட்டுக்கு தென் மாவட்ட நிர்வாகிகளை விட பிற மாவட்டங்களில் இருந்து தான் அதிகப்படியானனோர் வந்ததாக சொல்கிறார்களே?”

” அப்படியெல்லாம் இல்லவே இல்லை… என்னமோ தென் மாவட்டமே… குறிப்பாக தேவர் சமுதாய மக்கள் மத்தியில் ஓ.பி.எஸ்-ஸுக்குதான் செல்வாக்கு இருப்பதுபோல மாய தோற்றத்தை ஊடகங்கள்தான் இட்டுக்கட்டி உருவாக்கியது. ஓ.பி.எஸ் செல்வாக்காக இருந்தால், கட்சி அவர் பின்னாடி நின்று இருக்குமே. பலா பழத்துக்கு ஈயை பிடித்து விடவேண்டுமா என்ன?

உண்மையில் தென்மாவட்டம் மட்டுமல்ல எல்லா மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் எடப்பாடி பின்னால்தான் நிற்கிறார்கள். முக்குலம் மட்டுமல்ல எக்குலமும் எடப்பாடியார் பின்னால்தான் நிற்கிறது. அ.தி.மு.க-வின் கொள்கையான தி.மு.க எதிர்ப்பை கூர் மழுங்காமல் எடப்பாடி பார்த்துக் கொள்வதால்தான், கட்சி அவர் பின்னால் நிற்கிறது.”

நத்தம் விசுவநாதன்

“ஆனால், மதுரை மாநாட்டில் லோக்கல் மா.செ.க்கள் பெயரைக்கூட எடப்பாடி குறிப்பிட்டு பேசவில்லையே?”

“மாநாட்டின் வெற்றியை ஏற்றுக்கொள்ள, ஜீரணிக்க முடியாதவர்கள், தென்மாவட்ட நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் இல்லையென கிளப்பிவிடும் கட்டுக்கதை இவைகள். பல லட்சம் பேருக்கு உணவு தயார் செய்தபோது, ஒருசில இடத்தில் சரியாக அமையவில்லை. ராஜன் செல்லப்பா, செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயக்குமார் உள்ளிட்ட தென்மாவட்ட நிர்வாகிகள்தான் மாநாட்டின் வேலைகளை முழுவதும் பார்த்தார்கள். கட்சியின் ப்ரோடோக்காலின்படி, பெயர் குறிப்பிடப்பட்டது. இதை புறக்கணிப்பாதாக சொல்வது சிறுப்பிள்ளைதனம். “

“மாநாட்டில் எடப்பாடிக்கு புரட்சித் தமிழர் பட்டம் கொடுத்த சாமியாரே பின்வாங்கிவிட்டாரே?”

” அது எனக்கு தெரியாது. ஆனால் பட்டம் என்பது தொண்டர்களை உற்சாகப்படுத்தவும், தலைமையை கௌரவிக்கவும் கொடுக்கப்படுவது. ஸ்டாலினை தளபதி என்கிறார்களே… அவர் எந்த நாட்டின் படைக்கு தலைமை தாங்கி யாருடன் சண்டை போட்டார். ஆனால், எடப்பாடியாருக்கு புரட்சி தமிழர் மட்டும் பொருந்தும். ஏனென்றால் தமிழ்நாட்டில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் நீட் தேர்வுக்கு முன்பாகவும் மருத்துவ படிப்பில் வெறும் ஒற்றை இலக்கத்தில்தான் சேர்ந்து வந்தார்கள். ஆனால், எடப்பாடியார் கொண்டு வந்த மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித இடஒதுக்கிட்டால், நம் பிள்ளைகள் ஆயிரக்கணக்கில் மருத்துவம் பயில்கிறார்கள். இதுபோதாதா புரட்சித் தமிழர் பட்டம் கொடுக்க… இப்படி மக்களுக்கான திட்டத்தை கொடுக்காமல், 7.5 சதவிகித இடஒதுக்கீட்டை நாங்கள்தான் கொண்டுவந்தோம் என்று சொல்ல அவர்களுக்கு நாக்கு கூசவில்லையா?”

மாநாட்டில் எடப்பாடி

” ஆனால், மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருக்கும்வரை நீட் தேர்வு வரவில்லையே. எடப்பாடி பழனிசாமி ஆட்சியில்தானே அமலானது?”

“நீட் தேர்வுக்கான மசோதா நிறைவேற்றப்பட்டது தி.மு.க கூட்டணியில் இருந்த காங்கிரஸ் ஆட்சியில்தான். அதை அப்போதே எதிர்ப்பு தெரிவித்தால், நீட்-டே வந்திருக்கிறாதே. அம்மா இருக்கும்போது அதற்கு இரண்டு ஆண்டுகள் விலக்கு பெற்றார். ஆனால், உச்ச நீதிமன்ற தீர்ப்பு செயல்படுத்த அனுமதி வழங்கியதால், வேறு வழியில்லாமல் அமலானது. நீட் சமமற்ற தேர்வு என்பதால்தான் நம் அரசு பள்ளி பிள்ளைகள் பாதிப்பு அடையக்கூடாதென இலவச பயிற்சி நடத்தினோம். 7.5 சதவிகித இடஒதுக்கீடு கொண்டு வந்தோம். ஆனால், மசோதா வரும்போது விட்டுவிட்டு, நீட் தேர்வை ரத்து செய்ய சூச்சமம் தெரியுமென மக்களை ஏமாற்றி வெற்றிப் பெற்றுவிட்டு, பயிற்சி வகுப்புகளையும் நடத்தாமல் உண்ணாவிரதம் இருக்கிறது தி.மு.க. அப்போது கச்சதீவு, இப்போது நீட் என அவர்கள் கொண்டுவந்ததற்கு எதிராக போராடும் ஏமாற்று வேலைதான் திராவிட மாடல் ஆட்சியென்றால், இது திராவிட மாடல் அரசுதான்.”

நத்தம் விசுவநாதன்

“தி.மு.க எதிர்ப்புதான் அ.தி.மு.க-வின் கொள்கையென்றால், அ.தி.மு.க-வுக்கென்று கொள்கையே கிடையாது என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்தது சரிதானே?”

“அ.தி.மு.க-வுக்கும் தி.மு.க-வுக்கும் கொள்கை மாறுபாடு என்பது எப்போதுமே இல்லை. திராவிட கொள்கைகளை குழிதோண்டி புதைத்துவிட்டு தி.மு.க கருணாநிதியின் குடும்ப கம்பனியாகவும், ஊழலின் ஊற்று கண்ணாகவும் தடம் மாறிவிட்டதால்தான் அ.தி.மு.க-வை தலைவர் உருவாக்கினார். 69 சதவிகித இட ஒதுக்கீடு உள்ளிட்ட திராவிட சமூகநீதி கொள்கைகளின் அடி நாளங்களை அ.தி.மு.க-தான் தமிழகத்தில் உறுதி செய்திருக்கிறது. கருணாநிதி, ஸ்டாலின், இப்போது அவரது மகன் என கம்பனி மாதிரிதானே தி.மு.க இயங்குகிறது. ஆனால், அ.தி.மு.க மூன்றாவது தலைமுறை தலைமைக்கு எங்கோ ஒரு கிராமத்தில் பிறந்த அடிப்படை தொண்டன் தானே வந்திருக்கிறார். இது தி.மு.க-வில் செயல்படுத்த முடியுமா?”

” திராவிட கொள்கைக்கு எதிரான சனாதானம் பேசும் ஆளுநருக்கு எதிராக ஒரு வார்த்தைக்கூட உங்களால் பேச முடியவில்லையே?”

” ஆளுநரின் நடவடிக்கை அனைத்துக்கும் அ.தி.மு.க பொறுப்பல்ல. எதிர்க்கட்சிகள் வெளிப்படையாக எதிர்க்கிறார்கள். நாங்கள் ஆளுநரிடம் நேரடியாகவே பலமுறை இதை பேசியிருக்கிறோம். “

நத்தம் விசுவநாதன்

“வேங்கைவயல், நாங்குநேரி சம்பவங்களில் நியாயம் பக்கம் நிற்காமல் அறிக்கை மட்டுமே வெளியிட்டு இடத்தை காலிசெய்துவிட்டதே அ.தி.மு.க?

” இல்லை… பாதிக்கப்பட்டவர்கள் பக்கம்தான் அ.தி.மு.க களத்தில் இன்றும் நிற்கிறது. எதிர்க்கட்சியின் கடமையை செய்திருக்கிறோம்.. ஆனால், ஆட்சியில் இருக்கும் தி.மு.க.வால் வேங்கை வயல் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லையே? நாங்குநேரி மாணவர் தாக்கப்பட்டதற்கு என்ன நடவடிக்கை எடுத்தது அரசு. எல்லாவற்றிலும் ஓட்டு வங்கி கணக்கை மட்டுமே போடுகிறது தி.மு.க. சமூகநீதி என்று வாய் கிழிய பேசினால் மட்டும் போதாது. நடைமுறையில் செயல்படுத்த வேண்டும்.”

” பா.ஜ.க – அ.தி.மு.க கூட்டணி முரணால் கீழ் மட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் இணைப்பாக இருக்கிறார்கள் என்று நினைக்கிறீர்களா?”

“எல்லா கூட்டணியிலும் முரண்கள் இருக்கதான் செய்யும். திமுக கூட்டணியில் இல்லாத முரண்களா? தேர்தல் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி, தொகுதி பங்கீடு நிறைவு பெற்றபின், களத்தில் இறங்கி பணி செய்யும் போது எங்களின் கூட்டணியில் உள்ள சிறுசிறு முரண்கள் எல்லாம் சரியாகிவிடும்.”

நத்தம் விசுவநாதன்

” ஆனால், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அ.தி.மு.க-வை தொடர்ந்து நேரடியாகவோ மறைமுகமாகவோ விமர்சனம் செய்துக் கொண்டேதான் இருக்கிறார்?”

“அண்ணாமலை அவரது கட்சியை முன்னிலை படுத்துவதற்கு ஏதாவது பேசுகிறார். அதை விமர்சிக்க விரும்பவில்லை. அதற்காக அவர் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் இல்லை. எதிர்ப்பு காட்ட வேண்டிய நேரத்தில் செய்துவிடுவோம். “

அண்ணாமலை, பன்னீர்செல்வம்… எடப்பாடி பழனிசாமி

” நீங்கள் என்னதான் பா.ஜ.க-வுடன் நெருக்கமாக இருந்தாலும், உங்களையும் ஓ.பி.எஸ்-ஸயும் பாஜக ஒன்றாகதானே பார்க்கிறது. அதிமுக எம்.பி என்று ரவீந்தர்நாத்தை தானே மத்திய அரசு அழைக்கிறது?”

” ஓ.பி.எஸ் அரசியல் களத்தில் இல்லாத நபர். கிட்டத்தட்ட அவரது அரசியல் சகாப்தம் முடிந்துவிட்டது. முடிந்துபோனதை மீண்டும் நினைவுப்படுத்த விரும்பவில்லை. அவரது மகனை அ.தி.மு.க எம்.பி என்று அழைக்கக்கூடாது என்று நாடாளுமன்ற தலைவருக்கு கடிதம் கொடுத்து இருக்கிறோம். விரைவில் நல்ல முடிவு எடுப்பார்கள்.”  

நத்தம் விசுவநாதன்

” பா.ஜ.க-வை எதிர்த்தால் ஐ.டி, ஈ.டி வந்துவிடும் என்று பயத்தால் அடிமைபோல அ.தி.மு.க செயல்படுகிறதென்று தி.மு.க விமர்சனம் செய்கிறதே?”

” எங்களுக்கு எதற்கு பயம். எங்கள் ஆட்சியில் என்ன முறைகேடு நடந்தது. இல்லையே? அப்படி இருந்தால் தி.மு.க எங்களை சும்மா விடுமா? தி.மு.க-வுக்குதான் தற்போது பயத்தில் நடுக்கிறார்கள். அமைச்சர் செந்தில் பாலாஜி, பொன்முடி என அவர்கள் வீட்டுக்குதான் ஈ.டி வந்திருக்கிறது. எங்களுக்கு மடியில் கனமில்லை. வழியில் பயமில்லை.”

” அ.தி.மு.க-வில் இருந்தபோது செய்த தவறுக்குதானே இப்போது செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு இருக்கிறார்?”

“போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்ததாக வழக்கு. இது வெளியில் வந்தபோதே, செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவியையும், கட்சி பொறுப்பையும் பறித்தார் அம்மா. ஆனால், இன்று கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட போது, அவரின் பதவியை ஸ்டாலின் பறிக்கவில்லையே?”

நத்தம் விசுவநாதன்

“கொடநாடு வழக்கு….?”

” கொடநாடு சம்பவம் நடந்த சில நாள்களிலேயே குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தார் எடப்பாடி. ஆனால், அந்த தொழிற்முறை குற்றவாளிகளுக்கு ஜாமீன் கொடுத்து வெளியே அனுப்பியது தி.மு.கதான். இதை நூறு முறைக்கு மேல் சட்டமன்றத்தில் எடப்பாடி கேள்வியாக எழுப்பிவிட்டார். அதற்கு இன்று வரை பதில் சொல்லவில்லை. கொடநாடு குற்றவாளிகளுக்கு துணைபோகும் தி.மு.க-வும் குற்றவாளிதான். ஆட்சி மீதான அதிருப்தியை மறைக்க, குற்றவாளிகளை கண்டுபிடித்து சிறையில் அடித்த எடப்பாடி மீது இதுபோன்று அற்பதனமாக எதையாவது கிளப்பிக் கொண்டே இருக்கிறார்கள். உண்மையில் கொலையாளிகள், குற்றவாளிகள், ஊழல்வாதிகள்தான் இந்த ஆட்சியில் சந்தோசமாக இருக்கிறார்கள்… மக்கள் இல்லை. எப்போது இந்த ஆட்சி தொலையுமென்று நினைக்கிறார்கள். நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தல் வைத்தால் 50 சீட் கூட தி.மு.க-வுக்கு கிடைக்காது. இதுபோன்று மோசமான தி.மு.க ஆட்சி… இதுவரை இருந்ததும் இல்லை. இனி இருக்கபோவதும் இல்லை.”

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.