அதிகப்படியான எண்ணெய் சேர்த்த சமையல் ஆரோக்கியமற்றது என்பதை எல்லோரும் அறிவீர்கள். ஆனாலும் சுவை என வரும்போது ஆரோக்கியம் கொஞ்சம் பின்னுக்குப் போய்விடுகிறது. எண்ணெய் தூக்கலாகச் செய்தால்தான் ருசியாக இருப்பதாக நினைப்பவர்களுக்கு, எண்ணெய் இல்லாத வீக் எண்டு விருந்து ரெசிப்பீஸ் இங்கே…

ஓட்ஸ் பிஸ்கட்

தேவையானவை:

ஓட்ஸ், கார்ன்ஃப்ளேக்ஸ் – தலா ஒரு கப்

ஓட்ஸ் – கால் கப்

(மாவு போன்று திரிக்கவும்)

பேக்கிங் பவுடர் – அரை டீஸ்பூன்

பட்டைத்தூள் – ஒரு டீஸ்பூன்

தேன் – அரை கப்

கிஸ்மிஸ் (உலர் திராட்சை) – கால் கப்

ஓட்ஸ் பிஸ்கட்

செய்முறை:

`அவனை’ 180 டிகிரி செல்ஷியஸில் ப்ரீஹீட் செய்யவும். உலர் திராட்சை தவிர மற்ற அனைத்துப் பொருள்களையும் ஒன்றாகச் சேர்த்துக் கலந்து, பின்னர் அதனுடன் உலர் திராட்சை சேர்த்துக் கலக்கவும். இதுதான் பிஸ்கட் கலவை.

பேக்கிங் ட்ரேயில் பட்டர் பேப்பரை சரிசமமாக விரிக்கவும். பிஸ்கட் கலவையை ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்து, அரை இன்ச் இடைவெளிகளில் பட்டர் பேப்பர்மீது பிஸ்கட்டுகளாக ஊற்றவும். பின்னர் 15 நிமிடங்கள் `பேக்’ செய்யவும். அவனில் இருந்து வெளியே எடுத்து 10 நிமிடங்கள் ஆறவைத்துச் சுவைக்கவும்.

ரைஸ் பால்ஸ்

தேவையானவை:

பாஸ்மதி ரவை அரிசி – ஒரு கப்

கோழி இறைச்சி – 2 கப் (எலும்பு நீக்கி, அரைத்தது)

முட்டை வெள்ளைக்கரு – ஒன்று

லைட் சோயா சாஸ் – 3 டேபிள்ஸ்பூன்

சர்க்கரை – ஒரு டீஸ்பூன்

வினிகர் – ஒரு டேபிள்ஸ்பூன்

பச்சை மிளகாய் – 3 (ஒன்றிரண்டாகத் தட்டவும்)

பூண்டு – 2 பல் (தட்டவும்)

நறுக்கிய வெங்காயத்தாள் – 3 டேபிள்ஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

ரைஸ் பால்ஸ்

செய்முறை:

பாஸ்மதி அரிசியை நன்றாகக் கழுவி 3 மணி நேரம் ஊறவைக்கவும். அரைத்த கோழி, முட்டை வெள்ளைக்கரு, லைட் சோயா சாஸ், சர்க்கரை, வினிகர், உப்பு, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயத்தாள் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து பிசைந்து வைக்கவும்.

கோழி இறைச்சிக் கலவையைச் சரிசமமாக எலுமிச்சை வடிவில் உருண்டைகளாக உருட்டவும். இந்த உருண்டைகளை ஊறவைத்த அரிசியின் மேல் முழுவதுமாக உருட்டி வைக்கவும். பின்னர் இட்லிப் பாத்திரத்தின் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிட்டு, இட்லித் தட்டு வைத்து, இட்லித் துணியை நனைத்து தட்டின் மேல் வைத்து, தட்டில் உருண்டைகளைக் குழிகளில் வைத்து 30 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும். தக்காளி சாஸுடன் சூடாகப் பரிமாறவும்.

தஹி பிரெட் டிக்கி

தேவையானவை:

பிரெட் ஸ்லைஸ் – 8

தண்ணீர் – 2 கப்

புளிப்பில்லாத கெட்டித் தயிர் – 5 கப்

சர்க்கரை – 6 டேபிள்ஸ்பூன்

நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு

பூரணம் செய்ய:

வேகவைத்து, தோல் உரித்த உருளைக்கிழங்கு – 2

மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்

முளைகட்டி வேகவைத்த

பச்சைப்பயறு – 2 டேபிள்ஸ்பூன்

உப்பு – கால் டீஸ்பூன்

இனிப்புச் சட்னி செய்ய:

பேரீச்சம் பழம் – 8 (கொட்டை நீக்கி, நறுக்கவும்)

வெல்லம் – ஒரு டேபிள்ஸ்பூன்

கறுப்பு உப்பு – கால் டீஸ்பூன்

கெட்டியான புளிக்கரைசல் – 2 டேபிள்ஸ்பூன்

மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்

சீரகத்தூள் – அரை டீஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

பச்சை சட்னி செய்ய:

பச்சை மிளகாய் – 10

கொத்தமல்லித்தழை – அரை கப்

புதினா இலை – கால் கப்

சீரகத்தூள் – அரை டீஸ்பூன்

சாட் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன்

எலுமிச்சைப் பழம் – அரை மூடி

உப்பு – தேவைக்கேற்ப

தஹி பிரெட் டிக்கி

செய்முறை:

பூரணம் செய்யக் கொடுத்துள்ள பொருள்கள் அனைத்தையும் சேர்த்து, உப்பு, காரம் சரிபார்த்துப் பிசையவும். பிசைந்த மாவை எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டவும். தண்ணீரில் உப்பு சேர்த்துக் கலக்கவும். ஒரு பிரெட் துண்டை 5 விநாடிகள் தண்ணீரில் முக்கி எடுத்து உள்ளங்கையில் வைத்துத் தண்ணீரை வடிக்கவும். நனைந்த பிரெட்டின் மேல் உருளைக்கிழங்கு பூரணத்தை நடுவில் வைத்து உருண்டை பிடித்து கட்லெட் போன்று தட்டி எடுக்கவும். இதேபோல அனைத்து பிரெட் துண்டுகளையும் உருட்டி, தட்டி ஃப்ரிட்ஜில் வைக்கவும். அடுப்பில் வாணலி வைத்து, இனிப்புச் சட்னி செய்யக் கொடுத்துள்ள பொருள்கள் அனைத்தையும் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி 8 நிமிடங்கள் வேகவிடவும். பின்னர் நன்றாக ஆறவைத்து உப்பு, காரம், இனிப்பு, புளிப்பு சரிபார்க்கவும்.

பச்சை சட்னி செய்யக் கொடுத்துள்ள பொருள்களில் எலுமிச்சைச் சாறு தவிர மற்ற அனைத்தையும் மிக்ஸியில் ஒன்றாகச் சேர்த்து அரைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து சட்னியைச் சேர்த்துச் சிறிதளவு தண்ணீர்விட்டு கொதிக்கவைத்து இறக்கவும். பச்சை வாசனை நீங்கியதும், அதனுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கி உப்பு, காரம் சரிபார்க்கவும்.

தயிர் மற்றும் சர்க்கரையை ஒன்றாகச் சேர்த்து நன்றாக அடித்து வாய் அகன்ற பாத்திரத்தில் ஊற்றவும். பரிமாறுவதற்குச் சற்று முன்பு பிரெட் உருண்டைகளைத் தயிரில் போட்டு பின்னர் அதன் மேல் இனிப்புச் சட்னி, பச்சை சட்னி சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

பனானா கேக்

தேவையானவை:

ரோபஸ்டா வாழைப்பழம் – ஒன்று (200 கிராம்)

முட்டை – 2

சர்க்கரை, மைதா மாவு – தலா 150 கிராம்

பால் – 100 மில்லி

பேக்கிங் பவுடர் – ஒரு டீஸ்பூன்

சோடா உப்பு – அரை டீஸ்பூன்

பாதாம் பருப்பு (வெந்நீரில் போட்டு

எடுத்து, தோல் உரித்துப் பொடியாக நறுக்கியது) – 2 டேபிள்ஸ்பூன்

பனானா கேக்

செய்முறை:

முட்டையை பவுலில் உடைத்து ஊற்றி, சர்க்கரையைச் சேர்த்துக் கலந்து எலெக்ட்ரானிக் எக் பீட்டரால் நன்கு அடிக்கவும். மைதா மாவுடன் பேக்கிங் பவுடரையும் சோடா உப்பையும் கலந்துகொள்ளவும். ரோபஸ்டா வாழைப்பழத்தை முள்கரண்டி வைத்து மசித்து, அதனுடன் பால் சேர்த்துக் கலக்கவும். மைதா மாவு கலவையையும், வாழைப்பழம் – பால் கலவையையும் இரண்டு பாகங்களாகப் பிரித்து வைத்துக்கொள்ளவும்.

முதலில் சர்க்கரை – முட்டைக் கரைசலுடன் ஒரு பங்கு மைதா மாவுக் கலவை நன்றாகக் கலந்து, ஒரு பங்கு வாழைப்பழக் கலவையைச் சேர்க்கவும். இரண்டாவது பங்கு மைதா கலவையுடன், மீதமுள்ள வாழைப்பழக் கலவையைக் கலந்து, பாதாம் பருப்பு துண்டுகளைச் சேர்க்கவும்.

கேக் `பேக்’ செய்யும் பாத்திரத்தில் வெண்ணெய் தடவி, கேக் கலவைகளை ஊற்றி, 175 டிகிரி செல்ஷியஸில் ப்ரீ ஹீட் செய்த அவனில் 50-60 நிமிடங்கள் மிடில் `ராக்’கில் வைத்து `பேக்’ செய்து பரிமாறவும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.