கடந்த 2020-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த தேசிய கல்விக்கொள்கையை மத்திய அரசு சார்ந்த கல்வி நிறுவனங்கள் மற்றும் சில மாநிலங்களில் உள்ள கல்வி நிறுவனங்களிலும் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து தேசியக் கல்விக் கொள்கையின்படி, புதிய பாடத்திட்ட கட்டமைப்பை மத்திய கல்வி அமைச்சகம் உருவாக்கி அதனை செயல்படுத்துவதற்கான முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது.

மத்திய கல்வி அமைச்சகம் தயாரித்து இருக்கும் புதிய பாடத்திட்ட கட்டமைப்பின்படி, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள், 2 மொழி பாடங்களை கண்டிப்பாக படிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருக்கிறது. இந்த 2 மொழி பாடங்களில் ஒரு பாடம் இந்திய மொழியாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதே போல், பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகள் ஆண்டுக்கு ஒரு முறை பொதுத் தேர்வை (வாரியத் தேர்வு) சந்தித்து வந்த நிலையில், புதிய பாடத்திட்ட கட்டமைப்பின் மூலம் இனி ஒவ்வொரு கல்வியாண்டிலும் 2 முறை பொதுத் தேர்வை எழுத வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

பிளஸ் 2 பொதுத் தேர்வு

பொதுத்தேர்வுக்காக பல மாதங்கள் பயிற்சி, மனப்பாடம் ஆகியவற்றை செய்வதைத் தவிர்த்து, மாணவர்களின் புரிதல் மற்றும் திறன்களை மதிப்பீடு செய்யும் வகையில் ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத்தேர்வு என எளிதாக மாற்றப்பட்டு உள்ளதாக அமைச்சகம் சுட்டிக்காட்டுகிறது. இரண்டு முறை பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டாலும், மாணவர்கள் அதில் எந்த தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றார்களோ, அதனை அவர்கள் வைத்துக் கொள்ளலாம் என்றும், தேர்வுக்கு மாணவர்கள் தயாராவதற்கு ஏதுவாக போதுமான நேரமும், வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளதால், தற்போதுள்ள இடைவெளியில் பள்ளிக்கூட வாரியங்கள் தேவைப்படும் தேர்வுகளை நடத்துவதற்கான திறன்களை வளர்த்து கொள்ள வேண்டும் எனவும், வாரியத் தேர்வுகளை மேம்படுத்துவோர், மதிப்பீடு செய்வோர் அது சார்ந்து பல்கலைக்கழகம் நடத்தும் சான்றிதழ் படிப்பை இந்த பணிகளுக்கு முன்பாக முடித்திருக்க வேண்டும் எனவும் கல்வி அமைச்சகம் கூறி இருக்கிறது.

பொதுத்தேர்வு நடைமுறைகள் மாற்றப்படுவது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே கடந்த 2009-ஆம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கு தொடர்ச்சியான மற்றும் விரிவான மதிப்பீடு (சி.சி.இ.) தேர்வு முறை கொண்டு வரப்பட்டது. அது 2017-ஆம் ஆண்டில் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் பழைய முறை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. அதேபோல் கொரோனா தொற்று காலத்தில் கூட எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அதன் பிறகு, மீண்டும் பழைய முறையிலேயே பொதுத்தேர்வு நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்விவகாரம் தொடர்பாக நம்மிடம் பேசிய கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி, “ஒரு சிஸ்டத்தில் மாற்றம் கொண்டு வருகிறோம் என்றால் அதற்கு நிறைய ஆய்வு செய்ய வேண்டும். அப்படி ஆய்வு செய்வதில் கூட ஒருதலைபட்சமாகத்தான் இருக்கிறார்கள். தமிழக அரசாகட்டும், மத்திய அரசாகட்டும் எந்த ஒரு மாற்றம் கொண்டு வரும் போது அவர்களுக்கு வேண்டியவர்களிடம் கருத்து கேட்டு, ‘பெரும்பான்மையானவர்கள் இப்படி சொல்லி இருக்கிறார்கள்’ என்று நடைமுறைக்கு முன் வைக்கிறார்கள். நடுநிலைமையான கல்வியளர்களிடம் கேட்டு செய்வதில்லை. இது தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது.

இப்போது இந்த தேர்வுகள் கொண்டு வருவதன் மூலம் அதீத அழுத்தம்தான் மாணவர்களுக்கு ஏற்படும். மார்ச்சில் வரும் பொது தேர்வுக்கு, டிசம்பர் மாதத்திலிருந்தே எந்த ஒரு பிற திறன்களிலும் அந்த மாணவர்களை ஈடுபாடுத்தாமல், சிறப்பு வகுப்புகளிலேயே மூழ்கடிக்கப்படுகிறார்கள். அதோடு ரிவிஷன் தேர்வு, அது இது என்று ஒரு தேர்வுக்கே இப்போதே இருக்கும் போது, இரண்டு தேர்வு எனும் போது அந்த மாணவர்களுக்கு சிலபஸ் தாண்டி வேறு ஏதும் படிக்க முடியாத சூழ்நிலை உருவாகுகிறது. அடுத்து போட்டி தேர்வுகளுக்கு தயராவதற்கு நேரம் இருக்காது.

பிளஸ் 2 தேர்வு இருமுறைக்கு பிறகும், அடுத்த மேற்படிப்பு தேர்வு எழுதுகிறார்கள். இப்படியே தேர்வு… தேர்வு என்று மாணவர்கள் இருந்தால் பிற திறன்களில் எப்படி கவனம் செழுத்த முடியும். இதனால் மாணவர்களுக்கு மட்டுமின்றி பெற்றோர்களுக்கும் அழுத்தம் அதிகமாக போகிறது. இதன் அடுத்தக்கட்டமாக டியூஷன் சென்டர்கள் முக்கியத்துவம் பெறும். இந்த இரு தேர்வு முறையில் பெஸ்ட் ஆஃப் தி ஸ்கோர் எடுத்து கொள்ளப்படும் என்கிறார்கள். முழு பாடத்தையும் ஆறு மாதத்தில் நடத்தி முடிக்க போகிறார்களா… இல்லை ஆறு மாதத்தில் நடத்தப்பட்டதில் மட்டும் பெஸ்ட்டாக வந்தால், எதற்கு அடுத்த ஆறு மாதம் படிக்க வேண்டும் என்கிற கேள்வி எழுகிறது. இதெல்லாம் கல்வியின் தரத்தைத்தான் பாதிக்கும்” என்றார்.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி, “தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்தப்பட மாட்டேன் என்று சொல்பவர்கள் எதற்காக இதை பற்றி பேச வேண்டும். உங்களுடைய மாநில பாடத்திட்டத்தில், அரசு பள்ளிகளில் இதை அமல்படுத்தப்படப் போவதில்லை என்று சொல்லி இருக்கிறீர்கள். பின் எதற்காக இதை விமர்சிக்கிறீர்கள். மும்மொழி கொள்கை ஆபத்து. நாங்கள் இரு மொழி கொள்கை என்று சொல்லிய பின் எதற்காக பேச வேண்டும். தேசிய கல்வி கொள்கை என்பது எதை சொல்லி கொடுக்க வேண்டும் என்று சொல்லவில்லை. எப்படி சொல்லி கொடுக்க வேண்டும் என்கிற ஒரு வழிமுறையை எடுத்து காண்பிக்கிறது.

நாராயணன் திருப்பதி

பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில், பல கலந்தாலோசிப்பின் அடிப்படையில் இந்த வழிகாட்டு முறைகள் வகுக்கப்படுகிறது. உங்களால் இதை அமல்படுத்த முடியவில்லை என்று சொன்னால், அதை குறித்து விமர்சனம் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால், எப்போது அமல்படுத்த முடியாது என்று சொல்கிறீர்களோ, அப்போது உங்களிடத்தில் தான் அதிகாரம் இருக்கிறது என்பதை மிக தெளிவாக நீங்கள் சொல்வதாத்தானே அர்த்தம். எனவே இதை பற்றி பேசாதீர்கள்” என்றார் காட்டமாக.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.