காலங்கள் மாறினாலும், கருவிகள் பல தோன்றினாலும் கலைஞனின் கருத்தை கனகச்சிதமாகக் காட்டும் வல்லமை பெற்றது புகைப்படம்.

அப்படிப்பட்ட புகைப்படக் கலையின் பெருமையை அனைவரும் உணர்ந்துகொள்ளும் வகையிலும் அந்தக் கலையை ஊக்குவிக்கும் வகையிலும் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 19-ம் தேதி உலகp புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது. ஆயிரம் வரிகள் உணர்த்த வருவதை ஒரே ஒரு புகைப்படம் ஆழமாய் மனதில் பதித்துவிடும் என்று சொன்னால் அது மிகையாகாது. இன்றைய டிஜிட்டல் உலகத்தில் ஸ்ட்ரீட், டாக்குமென்டரி, போர்ட்ரைட், வைல்டு லஃப் போட்டோகிராபி எனப் பல்வேறு கோணங்களில் பல கலைஞர்களால் புகைப்படங்கள் எடுக்கப்படுகின்றன.

புகைப்படக் கலைஞர்

பல்வேறு காரணங்களுக்காகப் புகைப்படம் எடுத்தாலும் அதன் மையக்கருத்து என்பது மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துவதுதான். பெரும்பாலும் புகைப்படங்கள் வாழ்வின் நிகழ்வுகளை ஆவணப்படுத்தி, “நினைத்து நினைத்து” பார்க்கும் கருவியாகவே கருதப்படுகிறது. வாழ்வின் முக்கியமான தருணங்களை வாழ்நாள் முழுவதும் போற்றும் நினைவாக மாற்றும் சக்தி கொண்டதுதான் புகைப்படம். எனினும் ஒரு புகைப்படத்தின் சமுதாயப் பொறுப்பு பற்றிப் பெரிதும் பேசப்படுவதில்லை. போர்கள், புரட்சிகள் தொடங்கிப் பல சமூக மாற்றங்கள் நேர்ந்ததற்குப் புகைப்படம் தெரிவித்த கருத்துகளும் காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது. 

புகைப்படங்கள் வாயிலாகச் சக்தி வாய்ந்த கதைகளை உலகிற்குச் சொல்லி வரும் ஸ்டீவ் மெக்கரி, ரகு ராய் போன்ற கலைஞர்கள் மக்களின் அனுபவங்கள் மற்றும் உணர்வுகளைப் புகைப்படம் வாயிலாகப் பிரதிபலிக்கின்றனர். இவர்களின் பெரும்பாலான புகைப்படங்கள் மனித உணர்ச்சிகள் சார்ந்தே அமைந்திருக்கின்றன. இதுவரை பல கோடி கண்கள் தாஜ்மஹாலைப் பார்த்து ரசித்திருக்கிறது. ஆனால் இவர் பார்த்த விதத்தில் யாருமே பார்க்கவில்லை என்ற பெருமைக்குரிய புகைப்பட நிருபர் ரகு ராய்தான். புகைப்படத்துறையின் பல்கலைக்கழகம் என்றே இவரைக் கூறலாம்.

தாஜ்மஹால்

அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டீவ் மெக்கரியின் ‘தீ ஆப்கன் கேர்ள்’ புகைப்படம் பற்றி அறியாதவர்கள் குறைவு.நேர்காணல் ஒன்றில் ஸ்டீவ் மெக்கரி, “ஒரு சக்தி வாய்ந்த புகைப்படம் என்பது ஓர் ஆழமான உண்மையை வெளிப்படுத்தும் அழகிய தருணம், உணர்ச்சி போன்ற பல முக்கிய கூறுகளின் சங்கமம்” என்கிறார்.

‘தீ ஆப்கன் கேர்ள்’

ஒரு புகைப்படம், எடுக்கப்பட்ட இடம், மக்கள், போன்ற அனைத்து தரப்பையும் மக்களுக்கு உணர்த்த வேண்டும். அவை கேள்விகள் எழுப்பும், கதை சொல்லும் புகைப்படமாக இருக்க வேண்டும் என்பதை இவர் அபரிமிதமாக நம்புகிறார்.

ஒரு புகைப்பட கலைஞராய், புகைப்படம் ஒரு அசாத்தியமான கலை என்பதில் உங்கள் கருத்து என்னவென்று திருமதி ராதிகா ராமசாமி அவர்களைக் கேட்டபோது, “புகைப்படம் என்பது மனதின் வாயிலாகப் பார்த்து, இது உகந்த தருணம் என்று ஆவணப்படுத்துவதே ஆகும். கடந்த கால நிகழ்வுகள், கலாச்சாரங்கள், போர், புரட்சிகள் போன்ற அனைத்தையும் அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்லும் ஒரு சமூக கருவியே புகைப்படம். ஓவியங்களின் அடுத்த கட்ட மேம்பாடாகவே, ‘பெயிண்டிங் வித் லைட்ஸ்’ எனப் புகைப்படம் திகழ்கிறது.

மனதை உலுக்கிய சிரிய அகதி சிறுவன் புகைப்படம்

2015-ம் ஆண்டில் துருக்கியில் கடற்கரையில் சிரியாவை சேர்ந்த சிறுவன் கரை ஒதுங்கிய புகைப்படம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தியது. இதுபோன்ற பல விழிப்புணர்வுகள் உலகில் அரங்கேறியதற்குப் புகைப்படம் ஒரு காரணமாக இருக்கிறது. ஒரு நல்ல புகைப்படம் என்பது கலைஞன் பார்த்த உணர்வுகளை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.

அதே உணர்வு பார்ப்பவருக்கும் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும், அதை அச்சிட்டு சுவரில் மாட்டினால் ஓவியம் போன்ற கலை நயத்தோடு காட்சியளிக்க வேண்டும். இன்றைய போட்டோகிராபர்களுக்கு தொழில்நுட்ப ரீதியாகப் பல நன்மைகள் இருக்கின்றன. ஒரு புகைப்படத்தைப் பலமுறை எடுத்துச் சரிபார்க்கும் சுதந்திரம் இருக்கிறது. இதனால் ஃபிரேம் செட்டிங் மற்றும் புகைப்படத்தின் தனித்துவம் குறைந்துவிட்டது.

புகைப்படக் கலைஞர்

எத்தனையோ கருவிகளும், கலைஞர்களும் வந்தாலும் மனதோடு ஒன்றி, தனித்தன்மையை இழக்காமல், உணர்வுகளைப் பிரதிபலிக்கும் நோக்கில் ஒரு புகைப்படம் இருக்க வேண்டும் என்பதை இனிவரும் கலைஞர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். ஏனென்றால் போட்டோகிராபி ஒரு விஷுவல் மீடியா!” என்கிறார்.

புகைப்படக் கலைஞர்

ஃபிலிம், கேமரா, மொபைல் போன், செல்ஃபி என்று மோடுகள் (modes) மாறினாலும் மனதில் ஆழமாய் தாக்கம் ஏற்படுத்திய நிகழ்வுகளே நிழற்படம் ஆக்கப்படுகின்றன. இப்படி ஃப்ரேமின் மூலம் பல்லாயிரம் கதை சொல்லும் புகைப்படக்  கலைஞர்களுக்குப் புகைப்பட தின வாழ்த்துக்கள்!

உங்களுக்கு மிகவும் பிடித்த புகைப்படக் கலைஞர்களின் பெயர்களை கமென்ட்டில் சொல்லுங்கள்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.