சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 4,450. இதே ஒரு கிராம் தங்கத்தை நீங்கள் ரூ.2,463.63-க்கு வாங்க முடியும் என்றால் நம்புவீர்களா? நம்பித்தான் ஆகவேண்டும். இந்த விலையில் ஒரு கிராம் தங்கத்தை எந்தவொரு வரியும் இல்லாமல் பூட்டானில் வாங்க முடியும்.

பூட்டானில் வரி இல்லாமல் 20 கிராம் தங்கம் வாங்கலாம்!

கடந்த பிப்ரவரி மாதம் பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கியல் வாங்சுக்கின் பிறந்த நாள் மற்றும் பூட்டான் நாட்டின் புத்தாண்டை முன்னிட்டு, பூட்டான் சுற்றுலாத் துறை பூட்டான் டியூட்டி-ஃப்ரீ-யுடன் இணைந்து சுற்றுலாப் பயணிகள் எந்த வரியும் இல்லாமல் 20 கிராம் தங்கத்தைப் பூட்டானில் வாங்க முடியும் என்று அறிவித்தது. இந்த நடைமுறை கடந்த மார்ச் மாதம் முதல் அமலுக்கு வந்தது.

இந்த 20 கிராம் தங்கத்தை பூட்டான் தலைநகரான திம்பு (Thimphu) மற்றும் ஃபூன்ஷோலிங்கில் வாங்க முடியும்.

உடனே பெட்டி, படுக்கையுடன் பூட்டானுக்குக் கிளம்பிவிடாதீர்கள். இப்படி வரியில்லாமல் 20 கிராம் தங்கம் வாங்க பூட்டான் அரசாங்கம் மூன்று நிபந்தனைகளை விதித்துள்ளது…

  • இந்தியர்கள் ஒரு நாளுக்கு பூட்டானின் நிலையான வளர்ச்சி கட்டணமான (Sustainable Development Fees) ரூ.1,200-1,800 கட்ட வேண்டும்.

  • பூட்டான் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டலில் குறைந்தபட்சம் ஒரு இரவு தங்கியிருக்க வேண்டும்.

  • பூட்டானில் தங்கம் வாங்க பயன்படுத்தும் பணம் அமெரிக்க டாலரில் இருக்க வேண்டும்.

என்ன கிளம்பிட்டீங்களா?

என்னதான் இந்த அறிவிப்பு பூட்டான் மன்னர் பிறந்த நாள் மற்றும் புத்தாண்டுக்காக வெளியிடப்பட்டது என்று சொன்னாலும், இது பூட்டானின் சுற்றுலாத் துறை வளர்ச்சிக்காக வெளியிடப்பட்டு உள்ளது என்று கூறப்படுகிறது. மேலும், நாம் தங்கம் வாங்கும் அமெரிக்க டாலரைப் பயன்படுத்தி பூட்டான் அரசு சர்வதேச சந்தையில் தங்கம் வாங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சரி..சரி…20 கிராம் தங்கத்திற்காக நாம் பூட்டான் செல்லலாமா என்கிற கணக்கைப் பார்ப்போம்…

இன்றைய நிலவரப்படி, ரூ.2,463.63-ன் டாலர் விலை 29.63 ஆகும். இந்திய ரூபாயை டாலராக மற்றும்போது 30 டாலருக்கு கமிஷனுடன் சேர்த்து சுமார் ரூ.2,625 தர வேண்டும். 20 கிராம் தங்கத்தின் விலை சுமார் 600 டாலர் ஆகும். இந்திய ரூபாயை 600 டாலராக மாற்ற கமிஷனுடன் சேர்த்து ரூ.52,500 ஆகிறது.

மொத்தம் ஒரு லட்சம் அப்பே!

சென்னையில் இருந்து பூட்டான் செல்லும் விமான டிக்கெட்டின் விலை குறைந்தபட்சமாக ரூ.25,000. ஆக, பூட்டான் போய் வர ரூ.50,000. ஒரு நாளைக்கு நிலையான வளர்ச்சிக் கட்டணம் ரூ.1500, பூட்டானில் ஒரு நாளைக்கு ஹோட்டல் கட்டணம் குறைந்தபட்சம் ரூ.2000 ஆகும். இதையெல்லாம் கூட்டிப் பார்த்தால் பூட்டான் பயணம் + தங்கத்திற்கு மொத்தமாக ரூ.1,06,000. இதுபோக, நாம் சுற்றிப் பார்க்கும் செலவுகளும் இருக்கிறது!

பூட்டானில் ரூ.1,06,000 செலவு செய்து வாங்கும் தங்கத்தை, சென்னையிலேயே ஒரு நகைக் கடையில் 20 கிராம் தங்கத்தை ரூ.1,09,000-க்கு வாங்கிவிடலாம். வெறும் 3000 ரூபாயை மிச்சப்படுத்த பூட்டான் வரை போய் வரணுமா?

ஆணியே புடுங்க வேணாம் என்பதுதானே உங்கள் மைண்ட் வாய்ஸ்…

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.