முதலாம் உலகப்போரின் போக்கை மேம்போக்காகக் கவனிக்கும் பலருக்கும் இத்தாலியின் நிலைப்பாடு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடும். காரணம் இது ஜெர்மனி அணியோடு கூட்டுச்சேர்ந்து இருந்தது. அதே சமயம் போரில் நடுநிலைமை வகிப்பதாகவும் அறிவித்திருந்தது. பிறகு நேச நாடுகளின் சார்பில் போரில் முக்கிய பங்கெடுத்துக் கொண்டது. இந்த மாற்றம் போரில் பல மாறுதல்களைக் கொண்டு வந்தது. இத்தாலியின் வருங்காலத்தையும் அது தீர்மானித்தது எனலாம்.

எதனால் அடுத்தடுத்து இப்படி அந்த நாடு தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது? இதற்குப் பல காரணங்கள் இருந்தன.

இத்தாலியில் 1914-ல் நடந்த போருக்கு ஆதரவான பேரணி

உலகப் போருக்கு முன்பாகவே இத்தாலிக்கு தன் நிலப்பரப்பை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை அதிக அளவிலிருந்தது. சொல்லப்போனால் ஜெர்மனி அணிக்கு ஆதரவாக இருந்தால் இந்த ஆசையைத் தீர்த்துக்கொள்ள முடியும் என்று அது எண்ணியது. ஆனால் ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியா – ஹங்கேரி அணி இது தொடர்பாக இத்தாலிக்கு எந்த வித தெளிவான உறுதிமொழியும் தருவதாக இல்லை. அதுவும் போரில் வெற்றி பெற்றால் பால்கன் பகுதிகளில் சிலவற்றை ஆஸ்திரியா ஹங்கேரிக்குத் தருவதாக வேறு அவை முடிவெடுத்தன. (அல்பேனியா, பல்கேரியா, போஸ்னியா, கிரீஸ், மாண்டேநேக்ரோ, வட மாசிடோனியா, ஐரோப்பா பகுதியில் அமைந்த துருக்கி, குரோவேஷியா மற்றும் செர்பியாவின் பெரும் பகுதிகள் ஆகியவற்றை பால்கன் பகுதிகள் என்று கூறுவார்கள்). இது இத்தாலியை மிகவும் கடுப்பேற்றியது.

மற்றொரு புறம் பிரிட்டனும் பிரான்சும் இத்தாலியிடம் தங்களது தூதரகத் தொடர்பை மேலும் வலிமையாக்க முயற்சிகள் எடுத்துக் கொண்டன. இத்தாலியின் எல்லை விரிவாக்க ஆசையை உணர்ந்துகொண்டு அதையே தூண்டிலாக வைத்து இத்தாலியைத் தன் புறம் இழுக்க முயன்று வெற்றி கண்டன.

1915ல் லண்டனில் இது தொடர்பாக ஒரு ரகசிய ஒப்பந்தம் போடப்பட்டது. போரில் வெற்றி கண்ட பிறகு ஆஸ்திரியா – ஹங்கேரி மற்றும் ஓட்டோமான் சாம்ராஜ்யத்தின் சில பகுதிகள் இத்தாலியை அடையும் என்று அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டது. ஏப்ரல் 26, 1915 அன்று, முதலாம் உலகப் போர் மும்முரமாக நடந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில், இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, இத்தாலி ஆகிய நாடுகள் கையெழுத்திட்ட இந்த ஒப்பந்தம் வெகு ரகசியமாக நடந்து முடிந்தது.

1915-ல் இத்தாலியக் கடற்படை

நேச நாடுகளின் பக்கம் இத்தாலியும் வர வேண்டும் என்பதுதான் இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது. ஜெர்மனி, ஆஸ்திரியா – ஹங்கேரி கூட்டணியில் ஏற்கனவே இடம் வகித்த இத்தாலி போர் தொடக்கத்தில் தான் நடுநிலைமை வகிப்பதாகக் கூறியது. காரணம் அதன் மக்கள் எந்த அணியுடன் இத்தாலி சேர வே​ண்டும் என்பதில் இரு விதமாகப் பிரிந்திருந்தனர். அதன் நடுநிலை அறிவிப்பே கூட ஜெர்மனி அணிக்கு வெறுப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையை நேச நாடுகள் நன்கு பயன்படுத்திக் கொண்டன.

லண்டன் ரகசிய ஒப்பந்தத்தில் ஆஸ்திரியா ஹங்கேரிக்கு எதிராகப் போரில் ஈடுபட இத்தாலி ஒத்துக்கொண்டால் அதற்கு ஈடாகப் பல நன்மைகள் இத்தாலிக்கு வந்து சேரும் என்று உறுதிமொழி தரப்பட்டது. ஆஸ்திரியா – ஹங்கேரியில் உள்ள இஸ்திரியா, தெற்கு டைரோல், டால்மேஷியா, டிரென்டினோ உள்ளிட்ட பகுதிகள் போரில் வென்ற பிறகு இத்தாலியுடன் இணைக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. அது மட்டும் அல்லாமல் ஓட்டோமான் சாம்ராஜ்யத்தின் (அனேடொலியாவின் ஒரு பகுதி மற்றும் அத்ரியாடிக் கடற்கரைப் பகுதி) ஒரு பகுதியும் இத்தாலியை அடையும் என்று எழுத்துப்பூர்வமாகவே சம்மதித்தன.

தவிர, உலகப்போருக்குப்பின் எந்தெந்த நாட்டுக்கு எந்தெந்த பகுதிகள் என்று தேச எல்லைகள் மாற்றியமைக்கப்படும்போது இத்தாலிக்குச் சாதகமாகவும் அவை தீர்மானிக்கப்படும் என்றது அந்த ஒப்பந்தம்.

இத்தாலியப் படைவீரர்கள்

(இத்தாலி அணி மாறுவதற்குக் காரணம் இந்த ஒப்பந்தம்தான் என்றாலும் அது ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. நவம்பர் 1917ல்தான் ரஷ்ய அரசு இதை வெளியிட்டது. இந்த ஒப்பந்தம் தொடர்பாக இத்தாலியப் பொதுமக்களுக்கு எதுவும் தெரியாமல் இருந்தது. ஒப்பந்தம் வெளியானதும் அதிலுள்ள அனைத்து நிபந்தனைகளும் நிறைவேற்றப்பட வேண்டும் என்று மக்கள் வற்புறுத்தத் தொடங்கினார்கள். அரசியல் அமைதியின்மை உருவானது).

இத்தாலி தன் நிலையை மாற்றிக் கொள்வதற்கு வேறு சில காரணங்களும் இருந்தன. போரில் கலந்து கொள்ள வேண்டாம் நடுநிலைமையைத் தொடர்வோம் என்று பாதி மக்கள் கூற, இத்தாலி தன் எல்லைப் பகுதிகளைப் பெருக்கிக்கொள்ள வேண்டும் என்றால் போரில் கலந்துகொள்ளத்தான் வேண்டும் என்று மீதி மக்கள் கருதினர். நேச நாடுகளுடன் அணி சேர்ந்தால்தான் தங்களுக்கு மிக அதிக பகுதிகள் கிடைக்கும் என்று கருதி இந்த ‘தேசபக்திக் கோணம்’ பலரால் முன்னிறுத்தப்பட்டது.

Arrival of Italian troops at the Western front

நேச நாடுகளுடன் இணைந்தால் ஐரோப்பாவின் ஒரு முக்கிய சக்தியாகப் பின்னர் உருவாக முடியும் என்றும் இத்தாலி நினைக்கத் தொடங்கியது. ஆஸ்திரியா – ஹங்கேரி தங்களுக்கு இடையூறாக இருக்கிறது என்றும் இத்தாலி கருதத் தொடங்கி விட்டிருந்தது. அண்டை நாடுகள் என்பதால் எல்லை பிரச்னைகள் அவற்றுக்கிடையே தொடர்ந்து இருந்துகொண்டே இருந்தன. போரை ஒரு நல் வாய்ப்பாகக் கருதி ஆஸ்திரியா ஹங்கேரியைப் பலவீனப்படுத்துவது தனக்கு உதவும் என்று இத்தாலி நினைத்தது.

ஆக, இத்தனை காரணங்களாலும் இத்தாலி தன் நிலையை மாற்றிக்கொண்டு நேச நாடுகளின் அணி சார்பாக முதலாம் உலகப்போரின் களத்தில் இறங்கியது.

– போர் மூளும்…

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.