தேசிய வருவாய் வழி திறனறிவுத் தேர்வில் (NMMS – National Means Cum-Merit Scholarship) ஒரே பள்ளியை சேர்ந்த 43 மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். அம்மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்திக் கொண்டாடியுள்ளது மதுரை அரசு உதவிபெறும் தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளி.

அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மாதம் தோறும் உதவித்தொகை வழங்கும் தேசிய வருவாய் வழி திறனறித் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

ஓய்வு ஐ.ஏ.எஸ் பழனிகுமார், எம்.எல்.ஏ பூமிநாதன்

கணிதம், அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட பாடங்கள் அடிப்படையில் நடத்தப்படும் இத்தேர்வில் 180-க்கு 90 மதிப்பெண்கள் எடுத்தால் வெற்றி பெறமுடியும். வெற்றி பெறும் ஒவ்வொரு மாணவருக்கும் 12-ம் வகுப்பு முடிக்கும் வரை மாதம் தோறும் ஊக்கத்தொகையாக ரூ. 1,000 வழங்கப்படும். இதன் மூலம் ஒரு மாணவர் 4 ஆண்டுகளில் ரூ. 48,000 பெறுவார்.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இடை நிற்கக்கூடாது என்பதற்காக இந்த உதவித்தொகை தேர்வை மத்திய அரசு நடத்தி வருகிறது. எதிர்காலத்தில் மாணவர்கள் பல்வேறு போட்டித் தேர்வுகள், நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ள இத்தேர்வு நல்ல பயிற்சியாகும்.

தங்கள் மாணவர்களை இத்தேர்வில் வெற்றி அடைய வைக்க பல பள்ளிகளும் சிறப்புப் பயிற்சிகள் அளித்து ஊக்கப்படுத்தி வருகின்றன.

வெற்றி பெற்ற 43 மாணவர்கள்

கடந்த ஃபிப்ரவரி மாதம் இத்தேர்வு முடிவு வெளியானது. பல பள்ளிகளிலும் மாணவர்கள் குறிப்பிட்ட அளவில் வெற்றி பெற்றிருந்தார்கள்.

அதில் மதுரை, தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் மட்டும் அதிகப்படியாக 43 மாணவர்கள் வெற்றி பெற்று மதுரை மாவட்டத்தில் முதல் இடமும், மாநில அளவில் மூன்றாவது இடமும் பிடித்தனர்.

எளிய குடும்பத்து மாணவர்கள் அதிகம் பயிலும் இப்பள்ளியில் அதிக எண்ணிக்கையில் மாணவர்களை வெற்றி பெற வைத்த பள்ளி நிர்வாகத்தையும் ஆசிரியர்களையும் மாவட்ட நிர்வாகமும், கல்வித்துறையினரும், பல்வேறு அமைப்பினரும் பாராட்டினார்கள்.

இந்நிலையில் தங்கள் பள்ளிக்குப் பெருமையை தேடித்தந்த மாணவர்களை கௌரவிக்கும் வகையில் பாராட்டு விழாவை பள்ளி நிர்வாகம் நடத்தியது.

ஓய்வு ஐ.ஏ.எஸ் பழனிகுமார், எம்.எல்.ஏ பூமிநாதன் பரிசு வழ்ங்கியபோது

இப்பள்ளியின் முன்னாள் மாணவரான ஓய்வுபெற்ற ஐ.ஏஸ்.எஸ் அதிகாரி முனைவர் வி.பழனிக்குமார், சட்டமன்ற உறுப்பினர் எம்.பூமிநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கிப் பாராட்டினர். இந்த நிகழ்வில் பெற்றோர்களும் கலந்துகொண்டு மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். கடந்த ஆண்டும் இந்தத் தேர்வில் இப்பள்ளி மாவட்டத்தில் முதல் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

வாழ்த்துகள் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பள்ளி நிர்வாகத்துக்கும்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.