என்.எல்.சி சுரங்கங்கள், அனல் மின் நிலையங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகளால், நெய்வேலி, பரங்கிப்பேட்டை உள்ளிட்டப் பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் சுற்றுச்சூழல் சீர்கேடுகள் தொடர்பாகப் பூவுலகின் நண்பர்கள் அமைப்பினர், சென்னை பத்திரிகையாளர்கள் மன்றத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அதில் அரசியல் கட்சித் தலைவர்கள், சூழலியல் ஆர்வலர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். 

கூட்டத்தில் பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், “மர்மமான முறையில் தொழிலாளர்களுக்கும் பொதுமக்களுக்கும், நெய்வேலியைச் சுற்றிருப்பவர்களுக்கும் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மூக்கு வழியாக ரத்தம் வருகிறது. மேலும் சருமப் பிரச்னை, இதயப் பிரச்னை, சிறுநீரகக் கோளாறு போன்றவற்றால், அந்தப் பகுதி மக்கள் பாதிப்படைந்து வருகிறார்கள். இது குறித்து மருத்துவர்களிடம் அந்தப் பகுதி மக்கள் செல்லும்போது, `உங்களுக்கு தூய காற்று இல்லை, தூய தண்ணீர் இல்லை… அதனால், உங்களுடைய இருப்பிடத்தை மாற்றிக் கொள்ளுங்கள்’ என வலியுறுத்துகிறார்களே தவிர, இதற்கு நிரந்தர தீர்வு எதுவும் கொடுக்கப்படுவதில்லை.

உலகளாவிய அமைப்பினால் அந்த நிலத்தடி நீர், காற்று, கடல் நீர் ஆகியவை சோதிக்கப்பட்டு… தெற்காசியாவிலேயே மக்கள் இனம் வாழ்வதற்கு லாயக்கற்ற பகுதி என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும்கூட இதுவரை அந்தப் பகுதி மக்களுக்கு எந்தவிதத் தீர்வும் கிடைக்கவில்லை. இங்கிருக்கும் அனைவரும் ஆளும் அரசுடன் ஏதோ ஒரு வகையில் கூட்டணியில் இருக்கிறோம். ஆனாலும்கூட மனித உரிமைகள் மீறல், சுற்றுச்சூழல் ஆபத்து, காவல்துறை அராஜகப் போக்கு என எதிலும் நாங்கள் சமரசம் செய்துகொண்டதில்லை. 

எனவே நெய்வேலி நிலக்கரி நிறுவனமும், தமிழ்நாடு அரசும், ஒன்றிய அரசும் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால் பூவுலகின் நண்பர்கள் அமைப்பினைத் திரட்டி, இதனால் பாதிக்கப்படக்கூடிய அனைத்து மாவட்ட மக்களையும் ஒன்றிணைத்து, தொடர் போராட்டங்களை நடத்தத் தயாராக இருக்கிறோம்” என்றவரிடம், `ஆளும் அரசுடன் கூட்டணி வைத்திருக்கும் நீங்கள், இந்தப் பிரச்னைக்குக் குரல் கொடுக்கும்விதமாக, உங்கள் பதவியை ராஜினாமா செய்யலாமே?’ என்ற கேள்வியை நிருபர் ஒருவர் முன்வைத்தார்.

அதற்குப் பதிலளித்தவர், “இப்போது நான் ராஜினாமா செய்துவிட்டால், வேல்முருகனின் குரலாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யார் பேசுவது… நீங்கள் வந்து எம்.எல்.ஏ-வாகிப் பேசுகிறீர்களா… நான் சட்டமன்ற உறுப்பினராக இருப்பதால்தான், இந்தப் பிரச்னையைத் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கும் மேலாகப் பேசி வருகிறேன். தொழில்துறை அமைச்சர், வேளாண்துறை அமைச்சர் என அனைவருக்கும் இந்தப் பிரச்னையைப் பற்றிக் கொண்டு கொண்டுசென்று, விவசாயிகளின் பக்கம் நிற்கிறேன். நாங்கள் வைக்கும் அனைத்து கோரிக்கைகளுக்கும் நீங்கள் உத்தரவாதம் தந்தால், நான் இப்போதே எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு பேசுகையில், “நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தமிழ்நாட்டு மக்களுக்குச் செய்வது துரோகம். அடுத்த பத்து ஆண்டுகளில் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை மூடுவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இனிவரும் காலங்களில் ஒரு சென்ட் நிலத்தைக்கூடத் தமிழக மக்களிடமிருந்து வாங்கி, அந்த நிறுவனத்திற்குக் கொடுக்கக் கூடாது. தமிழக மக்களுக்கு அதிபயங்கரமான நோய்களை விளைவிக்கக்கூடிய அந்த நிறுவனத்திற்கு, விளைச்சல் நிலங்களைப் பாதிக்கக்கூடிய அந்த நிறுவனத்திற்கு, தமிழக அரசு ஏன் நிலங்களைக் கையகப்படுத்திக் கொடுக்க வேண்டும்?” என்று கேள்வி எழுப்பினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, “இது ஒரு பொதுத்துறை நிறுவனமாக இருக்கிறது. வெகு விரைவில் இது தனியாருக்கு ஒன்றிய அரசாங்கத்தின் தொடர் கொள்கையின் காரணமாகத் தாரை வார்க்கக்கூடிய நிலையில் இருக்கிறது. இந்த நிலையில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம், தனியார் நிறுவனங்களிலும் தொழிற்சாலைகளிலும் அவ்வப்போது சென்று பரிசோதனை செய்து அபராதம் விதிப்பதோடு, சில தொழிற்சாலைகளை மூடுகிறது. ஆனால் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு மட்டும் ஏன் விதிவிலக்கு… இவ்வளவு அதிகமான மாசை ஏற்படுத்தி மக்களுடைய வாழ்வாதாரத்திற்குப் பங்கம் விளைவிக்கக்கூடிய நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தைத் தொடர் கண்காணிப்பில் உட்படுத்தி, அபராதம் விதிப்பதோடு மட்டுமல்லாமல்… தேவைப்படும்போது அதனுடைய செயல்பாடுகளை முடங்கவைக்கத் தமிழக அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

மண் உயிரியலாளர் சுல்தான் இஸ்மாயில் பேசுகையில், “மாசுக் கட்டுப்பாடு வாரியம் சரியாகக் கண்காணிப்பதில்லை. நிலக்கரி சாம்பலின் பிரச்னை நெய்வேலியில் மட்டுமல்லாமல் எண்ணூர், தூத்துக்குடி போன்ற பகுதிகளிலும் தீவிரமாக இருக்கிறது. இந்த நிலக்கரி சாம்பலானது மனிதர்கள் சுவாசிக்கும்போது, உடலில் சென்று நுரையீரலைப் பாதிப்பதோடு, குளம், குட்டைகளில் பரவி நீரையும் மாசுபடுத்துகிறது. இந்த நிலக்கரி சாம்பல் வயல்வெளிகளில் விழும்போது அறுவடையின்போது மட்டுமல்லாமல், அதில் இருக்கக்கூடிய நுண்ணுயிர் மண்புழுக்களுக்கு கேடு விளைவித்து, அது சார்ந்திருக்கும் தாவரங்களை நாம் உண்ணும்போது அந்தப் பிரச்னையின் தாக்கம் நமக்கும் அதிக அளவில் ஏற்படுகிறது.

நெய்வேலி மட்டுமல்லாமல் விரைவில் தமிழகம் முழுவதும் இந்தப் பிரச்சனையைச் சந்திக்க நேரிடும். அடுத்த 15 ஆண்டுகளுக்குள் குழந்தைகளும், இளவயதினரும் அதிக பாதிப்புக்குள்ளாவார்கள். எனவே இந்தப் பிரச்னையில் போர்க்கால அடிப்படையில் தமிழக அரசும், தமிழக மாசுக் கட்டுப்பாடு வாரியமும் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

Junior vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.