பொதுவாக, பாலூட்டி உயிரினங்களுக்குக் கிடைக்கும் முதல் ஊட்டச்சத்து தாய்ப்பால் மட்டுமே. மனித இனமும் இதற்கு விதிவிலக்கல்ல. இன்றைய காலகட்டத்தில் தாய்ப்பால் ஊட்டும் முறையில் பல்வேறு நவீன தொழில் நுட்பங்கள் வந்துவிட்டன. இயற்கையான முறையில் தாய்ப்பால் ஊட்டுதலை ஊக்கப்படுத்தும் வகையிலும், அது குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் முதல் வாரம், ‘தாய்ப்பால் வாரமாக’ கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு, சிசேரியன் பிரசவம், தாய்ப்பால் புகட்டலில் உள்ள பல்வேறு சந்தேகங்களுக்கு, சென்னையைச் சேர்ந்த தாய்ப்பால் ஆலோசகர் டீனா அபிஷேக் விளக்கம் அளித்துள்ளார்…

டீனா அபிஷேக்,

முதல்முறை குழந்தை பெற்ற தாய்மார்கள் கவனத்துக்கு…

பிரசவம் முடிந்த பிறகு குழந்தையைப் பார்த்துக் கொள்வதை மிகவும் சிக்கலாக்கிக் கொள்ள வேண்டாம். உங்கள் உடலிலுள்ள ஊட்டச்சத்துகளைக் கொண்டு, உங்கள் குழந்தை பிறந்த பிறகும் அதற்கு ஊட்டமளிக்கலாம். ஆண், பெண் அல்லது இரட்டைக் குழந்தைகளாகவே இருந்தாலும் அதற்கான சத்து நீங்கள் கொடுக்கும் தாய்ப்பாலிலிருந்து கிடைக்கும். குழந்தை அழுவதால் தன்னிடம் போதுமான அளவு தாய்ப்பால் இல்லை என நினைத்து, பாக்கெட் பால், அல்லது பசும்பாலில் தண்ணீர் கலந்து குழந்தைக்குக் கொடுப்பது ஆரோக்கியமானதல்ல. இத்தகைய சூழலில், குழந்தைநல மருத்துவர்கள், மருத்துவ நிபுணர்களின் ஆலோசனை பெற்று நடப்பதே, குழந்தையின் நலனுக்கு உகந்ததாகும்.

சிசேரியனும் பாலூட்டுதலும்

சிசேரியன் செய்து முடித்தபிறகு பொதுவாகவே, முதல்நாள் தாய்மார்களுக்குச் சற்று கடினமாகவே இருக்கும். உட்கார்ந்து பால் கொடுப்பது மிகவும் சிரமமாக இருக்கும். சிசேரியன் செய்தவர்களுக்கு முதல் 2 நாள்களில் பால் சரியாகச் சுரக்காது. பால் சுரக்கும் காலகட்டப்படி (Lactogenesis phase) குறைந்தது 24 அல்லது 48 மணி நேரத்திற்கு பிறகே பால் நன்கு சுரக்க ஆரம்பிக்கும். சிசேரியனாக இருந்தாலும் நார்மல் டெலிவரியாக இருந்தாலும் முதல் 2 அல்லது 3 நாள்களுக்குச் சுரக்கும் பாலின் அளவு குறைவாகத் தான் இருக்கும். இதற்காகத் தாய்மார்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை. முதல் 3 நாள்களில் வரும் சீம்பால் அல்லது Colostrum, 3- 5 மில்லி அளவிற்குத் தான் வரும். தாய்ப்பால் போதவில்லை என்று எண்ணி, செயற்கை பால் கொடுக்க வேண்டாம்.

தாய்ப்பால்

ஏனெனில், தாய்ப்பால் மற்றும் செயற்கை பால் இரண்டும் வெவ்வேறு கலோரி அளவுகளைக் கொண்டவை. ஒருவேளை, பிறக்கும்போதே குழந்தைக்கு உடலில் சர்க்கரை அளவு குறைவாக இருப்பின், டாக்டர்கள் அறிவுரைப்படி செயற்கை பால் கொடுக்கலாம். சிசேரியன் செய்த தாய்மார்கள் தன் குழந்தைக்குப் பால் கொடுக்கும்போது, அருகில் நர்ஸ் அல்லது குடும்பத்தாரின் உதவியை வைத்துக்கொள்வது மிகவும் முக்கியமானதாகும்.

முதல் இரண்டு நாள்களுக்குப் படுத்துக்கொண்டே கூட குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டலாம். ‘Football Hold’ முறையில் குழந்தையை ஒருபுறமாகப் பிடித்துக்கொண்டும் தாய்ப்பால் கொடுக்கலாம். பிரசவமான வலி குறையத் தொடங்கிய பின்னர் ‘Cross Cradle hold’ முறையில் குழந்தையை வலதுகையில் பிடித்துக்கொண்டு எதிர்புறமுள்ள இடது மார்பில் தாய்ப்பால் கொடுக்கலாம்.

தாய்ப்பால் சுரக்கவில்லை என்ற சந்தேகமா?

ஒவ்வொருவரும் உணவு உட்கொள்ளும் அளவு என்பது மாறுபடும். அதேபோன்று, பிறந்த குழந்தையின் வயிற்றின் அளவு 3 மில்லி முதல் 5 மில்லி ஆகத்தான் இருக்கும், அதற்கேற்ப குழந்தை எடுத்துக்கொள்ளும் பாலின் அளவும் மாறுபடும். குழந்தை பிறந்த மூன்று நாள்களுக்குப் பிறகே, அது உட்கொள்ளும் உணவின் அளவு அதிகரிக்கும். ஃபார்முலா பால் அல்லது வெளியேற்றப்பட்டுச் சேமித்து வைத்திருக்கும் தாய்ப்பால் (Pumped milk), எதுவாக இருந்தாலும் சில நேரங்களில் குழந்தையின் உடல் எடைக்கேற்ப அளவாகக் கொடுக்கும்படி டாக்டர்கள் பரிந்துரைப்பார்கள்.

Breast Pump

தனக்குப் பால் சரியாகச் சுரக்கவில்லை, குழந்தைக்குப் போதுமானளவு பால் கிடைப்பதில்லை என நினைத்து, பால் சுரப்பதை அதிகரிக்க ரஸ்க், கருவாடு, பூண்டுப் பால் ஆகியவற்றை சாப்பிடலாமா… அசைவம் சாப்பிடாம இருப்பதால் பால் சரியாகச் சுரக்கவில்லையா என பல்வேறு சந்தேகங்கள் தோன்றலாம்.

ஆனால், இயற்கையாகவே உங்களிடம் இருந்து பிறந்த குழந்தைக்குத் தேவையானதை உங்கள் உடலே சரியாகக் கொடுத்து விடும்.

தொடர்ச்சியாக பால் கொடுக்கக்கூடாது!

குழந்தைக்குப் பால் கொடுக்கும்போது, குழந்தை பால் குடித்துக் கொண்டிருப்பதாக நினைத்து, 30 முதல் 40 நிமிடங்கள் வரை தொடர்ச்சியாகப் பால் கொடுப்பார்கள். இச்செயல் முற்றிலும் தவறு. ஒரு குழந்தை பால் குடிக்கிறதா இல்லையா என்பதை குழந்தையின் கீழ்த்தாடை அசைவின் மூலம் நாம் உறுதி செய்து கொள்ளலாம். குழந்தை பால் குடிப்பதற்கும், சுவாசிப்பதற்கும் இடையில் சீரான இடைவெளி உண்டு. அதை Rhythmic sucking pattern என்பார்கள். அதை கவனத்தில் கொள்வது அவசியமானது.

யாரோ ஒருவர் சொல்வதைக் கேட்டோ அல்லது தவறான அனுமானத்திலோ, குழந்தை பால் குடிக்கும்போது, மார்பின் காம்பைச் சுற்றியுள்ள கருவட்ட பகுதியை குழந்தையின் வாய்க்குள் திணிப்பதென்பது மிகத் தவறு. குழந்தையின் மேல் உதட்டை, தாயின் மார்புக் காம்பின் அருகில் கொண்டு செல்லும்போது, குழந்தையின் உதடுகள் தாயின் மார்புக் காம்பை அனிச்சையாகப் பற்றிக்கொள்ளும் வண்ணம், குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். சில நேரங்களில் குழந்தை தாய்ப்பால் குடிப்பதற்கு பதிலாக தன்னுடைய எச்சிலை விழுங்கிக் கொண்டே இருக்கும். குழந்தை தாய்ப்பால்தான் குடிக்கிறது என்பதை, அதன் தொண்டை அசைவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

Feeding pillow- வாங்க வேண்டுமா?

தாய்ப்பால் புகட்டுவோர், Feeding pillow என்பது கட்டாயமாக வாங்கிக்கொள்ள வேண்டும் என்று நான் அறிவுறுத்த மாட்டேன். நாம் சாதாரணமாகவே உபயோகிக்கும் தலையணை அல்லது U- pillow வையும் பயன்படுத்திக் கொள்ளலாம். அமர்ந்து கொண்டு தாய்ப்பால் ஊட்ட முடியாத நிலையில், இந்த Feeding pillow குழந்தையைத் தாங்கிக் கொள்ள, தாய்க்கு வசதியாக இருக்கும். அதை உபயோகிப்பதால் எந்தப் பிரச்னையும் ஏற்படப் போவதில்லை.

படுத்துக் கொண்டே தாய்ப்பால் ஊட்டுதல்

படுத்துக்கொண்டே தாய்ப்பால் ஊட்டலாமா?

குழந்தை பிறந்து சில வாரங்களுக்கு (3 – 4 வாரங்கள்), தாயின் உடல் சோர்வுடன் காணப்படும். அப்போது வீட்டிலோ அல்லது மருத்துவமனையிலோ படுத்துக்கொண்டே தாய்ப்பால் கொடுப்பது தாய் – சேய் இருவருக்கும் பாதுகாப்பானதாக இருக்கும். தரையில் அமர்ந்து கொண்டோ, அல்லது நாற்காலியில் அமர்ந்து கொண்டோ தாய்ப்பால் கொடுக்கும்போது, குழந்தை தவறி கீழே விழ வாய்ப்புண்டு. படுத்துக் கொண்டே தாய்ப்பால் கொடுப்பதால் மார்புத் தொய்வு, குழந்தைக்கு பல் சொத்தை போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பில்லை.

குழந்தை பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டும், வேறொரு நபரை தன்னுடன் உதவிக்கு வைத்துக்கொண்டும் தாய்ப்பால் கொடுக்கலாம். குழந்தைக்கு இதுவே பழக்கமாகிவிடுமோ என்று நினைக்க வேண்டாம்; ஒரு நாளில் 2- 3 முறை அல்லது நீங்கள் சோர்வாக உள்ளீர்கள் என்று எண்ணும்போது, படுத்துக்கொண்டே தாய்ப்பால் கொடுக்கலாம். மற்ற நேரங்களில் வசதியான இடத்தில் உட்கார்ந்து கொண்டு கொடுக்கலாம்.

தூங்கும் குழந்தையை எழுப்பி தாய்ப்பால் கொடுக்கலாமா?

பிறந்த குழந்தைகள் பொதுவாகவே தூங்கிக் கொண்டே தான் இருப்பார்கள். அவர்களுக்கு அடிக்கடி தாய்ப்பால் ஊட்டுவதால் எடை அதிகரிக்கும் என்பதற்காகவே மருத்துவர்கள் அல்லது மருத்துவ ஆலோசகர்கள், தாய்ப்பால் கொடுப்பதற்கான கால இடைவெளியைக் குறிப்பிடுவதுண்டு. குழந்தை பிறந்த முதல் 15 நாள்களுக்கு, 2 அல்லது 3 மணி நேர இடைவெளியில் தாய்ப்பால் கொடுப்பது நல்லது. அதிகபட்சமாக ஒருநாளில் குழந்தையை 4 அல்லது 5 மணி நேரம் தொடர்ந்து தூங்க விடலாம். அதற்கு மேல் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்காமல் விட்டால், அடுத்து அவர்கள் பால் உட்கொள்ளும் அளவு குறையும், அதனால் உடல் எடையும் குறைந்து விடும். உடல் எடை குறைவதால், உடலிலுள்ள பிலிருபின் என்ற சுரப்பு அதிகமாகி, குழந்தைக்கு மஞ்சள் காமாலை வர வாய்ப்புகள் உண்டு.

பச்சிளம் குழந்தை

குழந்தையை எழுப்பும் முறை

குழந்தையை எழுப்பும்போது மிகவும் கவனத்தோடும், பொறுமையோடும் எழுப்ப வேண்டும். குழந்தையின் உதட்டைச் சுற்றி லேசாகத் தடவினாலோ, அல்லது தொப்புள் மீது லேசாகத் தடவினாலோ, மறுவினைச் செயலாக அது விழித்துக் கொள்ளும். குழந்தைக்கு டயப்பரை மாற்றும்போது உடலில் ஈரம் பட்டு, குழந்தை எழுந்து விடும்.

அதிகம் பால் சுரக்க சில டிப்ஸ்

குழந்தை பிறந்த பிறகு, முதல் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்குத் தினந்தோறும் கூடுதலாக 600 கிலோ கலோரிகள் தேவைப்படும். சத்துள்ள உணவுகளான முட்டை, பால், பருப்பு, பழங்கள், காய்கறிகள், மீன் மற்றும் இறைச்சி போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். ஓட்ஸ், கீரைகள், பூண்டு, மீன், முருங்கைக்கீரை ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். அதிகமாகத் தண்ணீர் குடிப்பதும் உடலுக்கு மிகவும் நல்லது.

சரிவிகித உணவு

மன அழுத்தம், அதிக கவலை இவை அனைத்தும் ஆக்ஸிடோசின் என்ற ஹார்மோன் சுரப்பதற்கு இடையூறாக இருக்கும் என்பதால் அவற்றைத் தவிர்க்க வேண்டும்.’ஆகச் சிறந்த அம்மா’ ஆக இருக்க வேண்டும் என நினைத்து தன்னைத்தானே வருத்திக்கொள்ள வேண்டாம். ஏனென்றால் எல்லா அம்மாக்களுமே ஆகச் சிறந்தவர்கள்தான்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.