திருச்சி தெப்பக்குளம் மெயின் கார்ட் கேட் அருகே செயல்பட்டு வருகிறது மைக்கேல்ஸ் ஐஸ்கிரீம் கடை. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் இந்தக் கடைக்கு, திருச்சியில் பல இடங்களில் கிளைகளும் இருக்கின்றன. இந்நிலையில், மெயின் கார்ட் கேட் அருகிலுள்ள மைக்கேல்ஸ் ஐஸ்கிரீம் கடைக்கு வெள்ளிக்கிழமையன்று, ஒரு இளம் ஜோடி ஐஸ்கிரீம் சாப்பிடச் சென்றுள்ளனர். ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீமை ஆர்டர் செய்தவர்கள், ஐஸ்கிரீம் டேபிளுக்கு வந்ததும் அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். அந்த ஐஸ்கிரீமில் பல்லி ஒன்று துண்டான நிலையில் இறந்துகிடந்திருக்கிறது. உடனே, ஐஸ்கிரீம் கடையில் இருந்தவர்களை கூப்பிட்டு என்னவென்று கேட்டு சத்தம் போட்டதோடு, ஐஸ்கிரீமில் பல்லி கிடப்பதை போட்டோவாகவும், வீடியோவாகவும் எடுத்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளனர்.

ஆய்வில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள்

உடனே பதறிப்போன ஐஸ்கிரீம் கடை ஊழியர்கள், அந்த இளம் ஜோடிகள் வாங்கியிருந்த ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம் மற்றும் பிரிட்ஜில் இருந்த ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீமை எடுத்து சாக்கடையில் கொட்டி, தடயத்தை மறைத்துள்ளனர். இதற்கிடையே, சம்பவ இடத்திற்கு உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ் பாபு தலைமையிலான உணவு பாதுகாப்பு அதிகாரிகள் வந்து சேர்ந்தனர். நடந்த விஷயம் குறித்து அவர்கள் விசாரணை செய்ததோடு, கடையை ஆய்வுசெய்ய ஆரம்பித்துள்ளனர். அப்போது அந்த ஐஸ்கிரீம் கடை பிரிட்ஜ் சுகாதாரமற்ற முறையிலும், சுத்தம் செய்யாததால் துர்நாற்றம் வீசும் வகையிலும் இருந்திருக்கிறது.

இப்படி சுகாதாரச் சீர்கேட்டோடு அந்தக் கடையானது மக்களுக்கு ஐஸ்கிரீம் விற்றுவந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். மேலும், ஐஸ்கிரீமில் பல்லி கிடந்த விவகாரத்தையும் விசாரணை செய்து, அந்தப் புகார் உண்மைதான் என்பதை உறுதிசெய்தனர். அதுமட்டுமல்லாமல், கடையில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளில் ஐஸ்கிரீமை எடுத்து சாக்கடையில் கொட்டியது உள்ளிட்ட அத்தனை சம்பவங்களும் தெளிவாகப் பதிவாகியிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதையடுத்து அந்த ஐஸ்கிரீம் கடை மிகவும் சுகாதாரமற்ற முறையிலும், கிருமி தொற்று ஏற்படும் வண்ணம் இருந்ததையும் கண்டறிந்து, உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-ன் கீழ் தற்காலிகமாக கடையில் விற்பனையை தடைசெய்து நிறுத்திவைத்தனர்.

ஐஸ்கிரீமில் கிடந்த பல்லி

மேலும், கடையைப் பூட்டி சீல் வைத்தனர். அதுமட்டுமல்லாமல், கடையில் இருந்த ஐஸ்கிரீம் எடுக்கப்பட்டு தமிழக அரசின் உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் பிரபலமான ஐஸ்கிரீம் கடையில் விற்பனை செய்யப்பட்ட ஐஸ்கிரீமில் பல்லி கிடந்த இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த மாதம் இதேபோல திருச்சி தலைமை தபால் நிலையம் அருகிலுள்ள மைக்கேல்ஸ் ஐஸ்கிரீம் கடையில், ஐஸ்கிரீம் சாப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு ஃபுட் பாய்சன் ஏற்பட்டது. அதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அங்கு சோதனையிட்டனர். அந்த சோதனையின்போது அந்தக் கடை சுகாதாரமற்ற முறையில் இயங்கி வந்ததைக் கண்டறிந்து,  கடையைப் பூட்டி சீல் வைத்தது குறிப்பிடத்தக்கது. 

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.