வீட்டில் உள்ளவர்கள் மறைந்துவிட்டால் அவர்களது போட்டோவை வைத்து வணங்குவது அனைவரது வழக்கம். கும்பகோணத்தில் ஒரு வீட்டில் செல்லப்பிராணியாக அவர்கள் வளர்த்த நாய் திடீரென இறந்துவிட அதன் போட்டோவை வைத்து தினமும் மாலை அணிவித்து அதற்குப் பிடித்த உணவு ஒன்றைப் படைத்து வணங்கி வருவது பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

வளர்ப்பு நாய் உடன் பன்னீர்செல்வம்

கும்பகோணம் காமராஜ் நகரைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். ஓவியக்கலைஞரான இவர், அழிந்து வரக்கூடிய கலையான தஞ்சாவூர் ஓவியம் வரைவதுடன் அதனைப் பலருக்கு கற்றுக் கொடுத்தும் வருகிறார். தஞ்சாவூர் ஓவியத்தின் சிறப்பைப் பல நாடுகளுக்கு எடுத்துச் சென்றும் வருகிறார். இவரது மனைவி கலைச்செல்வி, இவர்களுக்கு ராகமாலிகா என்ற மகளும், மனோ என்ற மகனும் உள்ளனர்.

இரண்டு பிள்ளைகளுடன் சேர்த்து மூன்றாவது பிள்ளையாகச் செல்லப்பிராணியான ‘கோல்டன் ரெட்ரீவர் (Golden Retriever)’ என்ற இனத்தைச் சேர்ந்த நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளனர். ஜிஞ்சு எனப் பெயரிட்டு ஏழு வருடங்களுக்கு மேலாக இவர்கள் வீட்டில் வளர்ந்த அந்த நாய் பன்னீர்செல்வத்தின் குடும்பத்தில் ஒருவராகப் பின்னிப் பிணைந்து எல்லோர் மனதிலும் தனக்கென தனி இடம் பிடித்திருக்கிறது.

நாய் ஜிஞ்சு

இந்நிலையில் கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு திடீரென ஏற்பட்ட உடல் நலக் குறைவால் நாய் ஜிஞ்சு உயிரிழந்திருக்கிறது. வீட்டில் ஒருவரை இழந்து தவித்த உணர்வில் குடும்பமே தத்தளித்திருக்கிறது. அதிலிருந்து மீண்டு வருவதற்கு அவர்களுக்கு ஒரு வாரத்திற்கு மேல் ஆகிவிட்டது. இந்த நிலையில் நாய் ஜிஞ்ஜுவின் நினைவாக அதன் போட்டோவை பிரேம் செய்து வீட்டில் மாட்டி வைத்து தினமும் மாலை அணிவித்து வணங்கி வருகின்றனர்.

இது குறித்து பன்னீர்செல்வத்திடம் பேசினோம். “நாங்கள் மூன்றாவது பிள்ளையாக ஜிஞ்சுவை வளர்த்தோம். நான் வேலை விஷயமாக வெளியூருக்குச் செல்லும் போதெல்லாம் அவன்தான் வீட்டுக்குப் பாதுகாப்பு. மனைவி, பிள்ளைகளையும் கவனமாகப் பார்த்துக் கொள்வான். நாங்கள் கும்பகோணத்திலிருந்தாலும் அடிக்கடி சென்னைக்குச் செல்வோம். அப்போது அவனையும் காரில் அழைத்துக் கொண்டுதான் போவோம்.

போட்டோவில் ஜிஞ்சு

நாங்கள் சென்னை கிளம்புவது தெரிந்துவிட்டால் முதல் ஆளாக காரில் ஏரி உட்கார்ந்து கொள்வான். ஒரு முறை ஜிஞ்சுவை மட்டும் வீட்டில் தனியாக இருக்க வைத்துவிட்டு டெல்லிக்குச் சென்றுவிட்டோம். அங்கே போனதும் அவனைப் பிரிந்து வந்ததைத் தாங்க முடியவில்லை. அவன் தனியாக என்ன செய்வானோ என்ற கவலையும் சேர்ந்து கொண்டது.

உடனே, அடுத்த நாளே விமானத்தில் வீட்டுக்கு வந்துவிட்டோம். எங்களோட நல்லது கெட்டது என எல்லாவற்றிலும் கலந்த அவனுக்கு வேண்டியதைப் பார்த்துப் பார்த்து செய்வோம். ஒரு முறை வீட்டுக்குள் பெரிய பாம்பு வந்துவிட்டது. நானும் வீட்டில் இல்லை. மனைவி பிள்ளைகள் பாம்பைக் கண்டதும் அலறிக் கொண்டிருக்க ஜிஞ்சு மட்டும் தனி ஆளாக நின்று கத்தியே பாம்பை விரட்டிவிட்டான்.

விளக்கேற்றும் பன்னீர்செல்வம்

தீபாவளி, பொங்கல் என அனைத்து விசேஷத்துக்கும் அவனுக்கும் டிரெஸ் எடுப்போம். இப்படி எல்லாவற்றிலும் எங்களுடன் கலந்திருந்த அவன் திடீரென ஒரு நாள் உடல் நலக்குறைவால் எங்களைத் தவிக்க விட்டுவிட்டுப் போய்விட்டான். அவன் இல்லாமல் போனதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அழுது புலம்பிய நாங்கள், ஒரு வழியாகத் தேற்றிக்கொண்டு அவனைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக அவன் போட்டோவைப் பெரிதாக பிரேம் செய்து மாட்டியிருக்கிறோம்.

அத்துடன் தினமும் போட்டோவிற்கு மாலை அணிவிப்பதுடன், விளக்கேற்றி அவனுக்குப் பிடித்தமான உணவு ஒன்றையும் படைத்து அவனைத் தெய்வமாக வணங்கி வருகிறோம். எங்கள் உணர்வில் கலந்த அவன் உயிருடன் இல்லை. எங்களைக் காத்த அவனுக்கு நாங்கள் செய்கின்ற நன்றிக்கடன் இதுதான்” என்று தழுதழுக்க தெரிவித்தார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.