இந்தியா உட்பட உலகெங்கிலுமுள்ள பல நாடுகளில் ஹிஜாப் என்பது பெரும் சர்ச்சைக்குரிய விஷயமாகவே இருந்து வருகிறது.

கல்வி வளாகங்கள், வேலை செய்யும் நிறுவனங்கள், விளையாட்டு உள்ளிட்ட இடங்களில் இஸ்லாமியப் பெண்கள் ஹிஜாப் அணிவது என்பது பெரும் விவாதங்களையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்திய வண்ணம் இருக்கின்றன.

குறிப்பாக, விளையாடும்போது வீராங்கனைகள் ஹிஜாப் அணியக் கூடாது, அது அசௌகரியமானது என்று உலகெங்கிலும் பல நாடுகளின் விளையாட்டுத்துறை அமைப்புகள் ஹிஜாப் அணிவதற்கு அனுமதி மறுத்துள்ளது.

நௌஹைலா பென்சினா

அந்த வகையில், உலகக் கால்பந்து கூட்டமைப்பான ‘FIFA’வும் 2007ம் ஆண்டு முதல், “விளையாட்டு வீரர்கள் மைதானத்தில் விளையாடும்போது தங்களுக்கோ அல்லது பிறருக்கோ காயம் ஏற்படுத்தும் வகையில் எந்தவொரு உடைகளையும், அணிகலன்களையும் அணியக் கூடாது. அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அல்லது அனுமதியளிக்கப்பட்டுள்ள உடைகளையும், உபகரணங்களை மட்டுமே அணிய வேண்டும்” என்று கூறி ஹிஜாப் அணிவதற்குத் தடை விதித்திருந்தது.

`FIFA’வின் இந்த ஹிஜாப் தடை இஸ்லாமியர்களின் உரிமையைப் பறிப்பதாகவும், இஸ்லாமியப் பெண்கள் கால்பந்து போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை மறுப்பதாகவும் பெரும் எதிர்ப்புகளும், போராட்டங்களும் எழுந்தன. இதையடுத்து 2014-ம் ஆண்டு இந்தத் தடை நீக்கப்பட்டது.

நௌஹைலா பென்சினா

இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் ‘2023 FIFA Women’s World Cup’ தொடரில் கடந்த ஜூலை 24ம் தேதி ஜெர்மனிக்கு எதிரான போட்டியில் மொராக்கோ அணியைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனையான ‘நௌஹைலா பென்சினா’ ஹிஜாப் அணிந்து களத்தில் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்போட்டியில் அவர் களமிறங்கவில்லை. இதையடுத்து கடந்த ஜூலை 30ம் தேதி தென் கொரியாவிற்கு எதிரான போட்டியில் ஹிஜாப் அணிந்து களத்தில் விளையாடினார்.

இதன்மூலம், FIFA கால்பந்து உலகக் கோப்பைத் தொடரில் ஹிஜாப் அணிந்து விளையாடும் முதல் வீராங்கனையானார் 25 வயதாகும் நௌஹைலா பென்சினா.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.