கண்களுக்கும் சருமத்துக்கும் நல்லது என்று என்னதான் எடுத்துச்சொன்னாலும் குழந்தைகளை, ஏன் சில பெரியவர்களைக்கூட கேரட் சாப்பிட வைப்பது சிரமமானது. கேரட் பொரியல், கேரட் ரைஸ் தவிர அதில் அசத்தலாக ஆயிரம் உணவுகள் சமைக்கலாம். அப்படிக் கொடுத்தால் தினமும் கேரட் என்றாலும் ‘நோ’ சொல்ல மாட்டார்கள் யாரும். இந்த வார வீக் எண்டை கேரட் ஸ்பெஷலாக கலக்குங்கள்.

கிளாஸிக் கேரட் கேக்

தேவையானவை:

கேரட் துருவல் – ஒன்றரை கப்

சர்க்கரை – ஒரு கப்

உலர்திராட்சை – கால் கப்

முட்டை – 2 (பெரியது)

ரீஃபைண்டு ஆயில் – அரை கப்

பட்டைத்தூள் – ஒன்றரை டீஸ்பூன்

சமையல் சோடா – ஒரு டீஸ்பூன்

மைதா – ஒரு கப்

வெனிலா எசென்ஸ் – ஒரு டீஸ்பூன்

உப்பு – அரை டீஸ்பூன்

கிளாஸிக் கேரட் கேக்

செய்முறை:

பேக்கிங் அவனை (oven) 180 டிகிரிக்கு சூடேற்றவும். 9 இன்ச் கேக் பேன் (pan) ஒன்றில் வெண்ணெய் தடவி, பட்டர் பேப்பரை விரிக்கவும். ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, எண்ணெய், சர்க்கரை, வெனிலா எசென்ஸ் சேர்த்து, சர்க்கரை கரையும் வரையில் அடிக்கவும். கேரட் துருவலையும், உலர்திராட்சையையும் ஒன்றாகப் பிசிறிவிடவும்.

மற்றொரு பாத்திரத்தில் மைதா, சமையல் சோடா, உப்பு, பட்டைத்தூள் சேர்த்துக் கலந்து வைக்கவும். இதை முட்டைக் கரைசலோடு சிறிது சிறிதாகச் சேர்த்து, மெதுவாகக் கரண்டியைக்கொண்டே கலக்கவும் (அடிக்கக் கூடாது). பின்னர் இதில் கேரட் துருவல், உலர்திராட்சை சேர்த்துக் கலந்துகொள்ளவும். தயாராக வைத்திருக்கும் பானில் ஊற்றி, 30 – 40 நிமிடங்கள் பேக் செய்து, பிளெயினாகவோ அல்லது ஃப்ராஸ்ட்டிங் தடவியோ பரிமாறலாம்.

கேரட் டீ டாக்ஸ் ஜூஸ்

தேவையானவை:

கேரட் (நடுத்தர அளவு) – 2

இஞ்சி – அரை இன்ச் துண்டு

பைனாப்பிள் துண்டுகள் – அரை கப்

ஆரஞ்சு – ஒன்று

மிளகுத்தூள், உப்பு – தேவைக்கேற்ப

கேரட் டீ டாக்ஸ் ஜூஸ்

செய்முறை:

கேரட்டை நன்கு அலசிக்கொள்ளவும். பின்னர் சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். இஞ்சியைத் தோல் சீவவும். ஆரஞ்சைச் சாறு எடுத்து, இதர பொருள்கள் எல்லாவற்றோடும், மிக்ஸியில் போட்டு, அரைத்து வடிகட்டி அருந்தவும்.

கேரட் ஆப்பிள் கோல்ஸ்லா

தேவையானவை:

ஆப்பிள் – ஒன்று

கேரட் (சற்று பெரியது) – ஒன்று

மயோனைஸ் – 1/3 கப்

உலர்திராட்சை – 2 டேபிள்ஸ்பூன்

கொத்தமல்லித்தழை, பாதாம் – சிறிதளவு (பொடியாக நறுக்கியது)

மிளகுத்தூள், உப்பு – தேவைக்கேற்ப

கேரட் ஆப்பிள் கோல்ஸ்லா

செய்முறை:

ஆப்பிளைச் சுத்தம் செய்து, மெலிதான வில்லைகளாகச் சீவவும். கேரட்டைக் கழுவி தோல் சீவாமல் தீக்குச்சிகள்போல் நறுக்கிக்கொள்ளவும். இதர பொருள்களை இவற்றுடன் ஒன்றாகக் கலந்து ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்திருந்து பின்னர் `ஜில்’லென்று பரிமாறவும். இதை தனி சாலட் ஆகவோ அல்லது சாண்ட்விச் ஃபில்லிங் ஆகவோ பயன்படுத்தலாம்.

கேரட் ஃப்ரைஸ்

தேவையானவை:

கேரட் – 300 கிராம் (அல்லது பெரிய கேரட் – 2)

ரீஃபைண்டு ஆயில் – 4 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன்

சீரகத்தூள் – அரை டீஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

வடிகட்டிய கெட்டித்தயிர்/மேயோ – அரை கப்

கேரட் ஃப்ரைஸ்

செய்முறை:

கேரட்டை சுத்தம் செய்து விரல் நீளத் துண்டுகளாக நறுக்கவும். இதர பொருள்களை இதனுடன் கலந்து வைக்கவும். ஒரு பேக்கிங் ட்ரேயில் அருகருகே அடுக்கி, 130 டிகிரியில், 45 நிமிடங்கள் க்ரில் செய்து எடுக்கவும். கெட்டித்தயிர்/ மேயோவுடன் பரிமாறவும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.