மாணவர்களின் வீட்டுப் பாடங்களை முடிப்பது, புதிய செயலிகளுக்கு codes உருவாக்குவது, கவிதை/கட்டுரை எழுதிக்கொடுப்பது, ஓவியம்/புகைப்படங்கள் உருவாக்கிக் கொடுப்பது எனச் செயற்கை நுண்ணறிவு (AI) நமது வாழ்க்கையை மிகவும் எளிதாக்கி சுவாரஸ்யமாக மாற்றிக் கொண்டிருக்கிறது. இப்போது அதே AI, மருத்துவத்திலும் கோலூன்றி வருகிறது என நிபுணர்கள் ஆச்சரியத்துடன் தெரிவிக்கிறார்கள். ஏற்கெனவே நம் உடலில் என்ன பிரச்னை வந்தாலும், அதை முதலில் கூகுளில்தான் தேடிப் பார்க்கிறோம். கூகுள் சொல்லும் சிகிச்சையை முயற்சி செய்த பின்னரும் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லாத போதுதான் மருத்துவரிடம் போகிறோம். இதுவே ஆபத்தான ஒன்றுதான்.

AI Therapy

அடுத்தபடியாக, இப்போது மனநல பிரச்னைகளுக்கும் கூகுளைத் தாண்டி AI தொழில்நுட்பத்தை மக்கள் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர் என்கின்றனர் நிபுணர்கள். உங்களுக்கு மன அழுத்தம் அல்லது மனச் சோர்வு இருப்பதை AI-யிடம் தெரிவித்ததும், உங்கள் பிரச்னையை AI பொறுமையாகக் கேட்டுக் கொள்கிறது. ஒவ்வொரு கேள்வியாக அன்போடு கேட்டு, உங்கள் நிலைமையைப் புரிந்துகொண்டதும், நீங்கள் சந்திக்கும் சிக்கலை எப்படிக் கையாளலாம் என்று சில வழிமுறைகளைக் கொடுக்கிறது. 

ஆலோசனைகள் வழங்குவதற்கு முன், உங்கள் பிரச்னைக்கு முழுமையான தீர்வு கிடைக்க ஓர் அங்கீகரிக்கப்பட்ட மனநல மருத்துவரை அணுகவும் என்று எச்சரிக்கை செய்யும் AI, தொடர்ந்து மனிதனின் மூளையை, மனதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்து அதற்கான உதவிகளை வழங்குகிறது. 

AI in Mental Health

இந்தியன் சைக்யாட்ரிக் சொசைட்டி மேற்கொண்ட ஆய்வின் படி, இந்தியாவில் வெறும் 9000 மனநல மருத்துவர்கள்தான் இருக்கிறார்கள். அப்படியானால், சுமார் ஒரு லட்சம் மக்களுக்கு 0.75 மருத்துவரே இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல், மனநல மருத்துவர்கள் மற்றும் உளவியல் நிபுணர்களின் சிகிச்சைக்கான செலவும் அதிகமாக இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில்தான், உண்மையிலேயே செயற்கை நுண்ணறிவு மனநல மருத்துவத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரலாம் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.

இந்தியா, உலகளவில் தற்கொலையின் தலைநகரமாகக் கூறப்படுகிறது. உலக சுகாதார மையத்தின் ஆய்வுகளின்படி, ஒவ்வொரு ஆண்டும் இங்கு 2.6 லட்சம் மக்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். தற்கொலைக்கு முயன்று தோல்வியடையும் எண்ணிக்கை இதைவிடப் பல மடங்கு அதிகமாக இருக்கிறது. 60-70 மில்லியன் மக்கள் உளவியல் ரீதியான பாதிப்புகளைச் சந்திக்கிறார்கள். தெருவுக்குத் தெரு மருத்துவமனைகள் இருப்பது போல, எளிதில் அணுகக் கூடிய மனநல நிபுணர்களும் நம் நாட்டில் தேவையாக இருக்கிறது. குறிப்பாக இந்தியாவின் தென் மாநிலங்கள் மற்றும் கிழக்கு மாநிலங்களில் உளவியல் பிரச்னையால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அதிலும், ஆண்களை விடப் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்கிறது அந்த ஆய்வு. 

AI Counselling

ஏற்கெனவே பல செயலிகள், மக்கள் தினம் தினம் சந்திக்கும் மன அழுத்தத்தைப் போக்க சில வழிகளையும், ஒட்டுமொத்த மனநல ஆரோக்கியத்திற்குத் தேவையான ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றன. ஆனால், இப்போதுள்ள இந்த செயற்கை நுண்ணறிவு மருத்துவர்கள், நேராக மனிதர்களோடு உரையாடி அவர்களுக்கு ஆலோசனை வழங்குமளவுக்கு முன்னேறியுள்ளன. 

இது குறித்து மன நல மருத்துவர், Dr. கெளதம் தாஸ் சில முக்கிய தகவல்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார். ”மனநல மருத்துவம், ஒரு மனிதரின் உணர்ச்சிகள், அறிவாற்றல் மற்றும் நடவடிக்கைகளைப் புரிந்துகொண்டு அதற்குச் சிகிச்சை வழங்கும் மருத்துவமாகும். எல்லோரும் நினைப்பது போல, ஒருவரது வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள், பிரச்னைகளால் மட்டும் உளவியல் பாதிப்புகள் ஏற்படுவதில்லை. சில உயிரியல் காரணங்களால் மரபணுவில் ஏற்படும் சில மாற்றங்கள், வாழ்க்கையில் சந்திக்கும் சில அழுத்தங்களால் தூண்டப்பட்டு, உளவியல் பிரச்னையாக வெளிப்படுகின்றன. இந்த வெளிப்பாடு ஒருவரது வாழ்க்கையில் எந்தக் கட்டத்திலும் வரலாம். 

Dr. கெளதம் தாஸ், மன நல மருத்துவர், சென்னை

சிலருக்கு அதிகப்படியான பாதிப்பு ஏற்பட்டு அதனால் தனக்கோ அல்லது சுற்றி இருப்பவருக்கோ ஆபத்து விளைவிக்கக் கூடிய வகையில் செயல்படும் போது, அதை ஒரு உளவியல் பிரச்னையாக மருத்துவர்கள் கருதுவார்கள். இதில் 5% மக்கள் மட்டுமே கடுமையான உளவியல் நோயால் பாதிக்கப்படுகின்றனர். 80% மக்கள் மருந்து மற்றும் உளவியல் ஆலோசனைகள் மூலம் குணப்படுத்தக் கூடிய நிலையில் இருக்கிறார்கள். மீதியிருக்கும் 15% மக்கள், லேசான உளவியல் பிரச்னைகளைக் குறுகிய காலத்திற்குச் சந்திக்கிறவர்கள். அவர்களுக்கு வெறும் உளவியல் ஆலோசனைகள் வழியாகவே அந்தச் சூழ்நிலையை எப்படிக் கையாள வேண்டும் என்ற மனத்திடத்தைக் கொடுத்துவிட முடியும்.

அப்படிப்பட்ட அந்த 15% மக்களுக்கு மட்டும் வேண்டுமானால் AI மூலம் உளவியல் ஆலோசனைகள், வழிமுறைகள் வழங்கலாம். இருந்தாலும் அவர்களது பிரச்னையின் தீவிரம் குறையாமல் அதிகரிக்கும் போது அந்தச் சமயம் நிச்சயம் ஒரு மனநல மருத்துவரின் தலையீடு இருக்க வேண்டும். 

AI எச்சரிக்கை!

இது தவிர, AI தொழில்நுட்பங்களைப் பொருத்தவரை, அது தவறானவர்களின் கைக்குச் செல்லும் போது, மனிதருக்கு உதவி செய்வதற்குப் பதிலாக, ஆபத்து விளைவிக்கக் கூடிய வகையில் கூட அவற்றைச் செயல்படுத்த முடியும் என்பதை மக்கள் உணர வேண்டும். குறிப்பாக சில ஆண்டுகளுக்கு முன் ‘ப்ளூ வேல்’ (Blue Whale) என்ற விளையாட்டு மூலம் தற்கொலைக்குத் தூண்டப்பட்டு உயிரிழந்தவர்களை நாம் ஞாபகப்படுத்திக் கொள்ளவேண்டும்.

உளவியல் சிக்கலில், ஏற்கெனவே தனிமையில் உள்ள மனிதரை AI மூலம் மேலும் தனிமைப்படுத்தி, அவருடைய பிரச்னை கடைசி வரை யாருக்குமே தெரியாமல் போய்விட நிறைய வாய்ப்புகள் உள்ளன. இறுதியாக அவர் தற்கொலைக்கு முயலும்போதோ அல்லது யாருக்காவது பாதிப்பை ஏற்படுத்தும்போதோ மட்டுமே அவரது பிரச்னை வெளியே வரும். அதற்குள் நிலைமை கைமீறிப் போயிருக்கலாம். எனவே AI தெரபியைப் பொருத்தவரை மக்களும் மருத்துவ நிபுணர்களும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்” என்கிறார். 

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.