குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சுவைப்பது ஐஸ்க்ரீம். குறிப்பாக கோடைக்காலத்தில் அடிக்கடி ஐஸ்கிரீம் சாப்பிடுவோம். ஆனால் நாம் சாப்பிடுவது உண்மையிலேயே ஐஸ்க்ரீம் தானா… அல்லது ஃப்ரோஸன் டெசர்ட் எனப்படும் உறையவைக்கப்பட்ட இனிப்பு வகையா?

சமீபத்தில் ஐஸ்க்ரீம் மற்றும் ஃப்ரோஸன் டெசர்ட் இரண்டுக்குமான வேறுபாடுகள் என்ன என்பது பற்றிய விவரங்கள் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளான நிலையில், இது குறித்து உணவியல் ஆலோசகர் விஜயஶ்ரீயிடம் பேசினோம்…

“ஐஸ்க்ரீம் என்பது பாலில் செய்யப்படுவது. பாலை நன்கு காய்ச்சிய பின், க்ரீமியான நிலைக்குக் கொண்டுவருவார்கள். சுருக்கமாகச் சொன்னால், திரவ நிலையில் இருக்கும் பால், க்ரீமியான திட நிலைக்குக் கொண்டு வரப்படும். பிறகு அதில் ஃப்ளேவர், இனிப்பு உள்ளிட்டவை சேர்க்கப்படும்.

ஃப்ரோஸன் டெசர்ட் பார்ப்பதற்கு ஐஸ்க்ரீம் போலவே இருக்கும். ஆனால் உண்மையில் அதில் பால் சேர்க்கப்படுவதில்லை. மாறாக, வனஸ்பதி, பாமாயில் போன்ற அதிக கொழுப்புச்சத்துகளும், சர்க்கரையும் சேர்த்து தயாரிக்கப்படுகிறது.

வெஜிடபுள் ஆயிலில், ஹைட்ரஜன் சேர்த்து, ஹைட்ரஜனேட்டடு ஆயிலாக மாற்றுகிறார்கள். இதனால் இயற்கையாக அதிலிருக்கும் கொழுப்புச்சத்தின் தன்மை மாறுபடுகிறது. இது உடல்நலத்திற்கு ஏற்றது அல்ல. இதனால் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும். இதயம் சார்ந்த பிரச்னைகள் வர வாய்ப்புள்ளது. இதனை அதிகளவில் தொடர்ந்து எடுத்துக்கொள்ளும்போது உடல் எடை அதிகரிக்கும். நீரிழிவு நோயும் ஏற்பட வாய்ப்புள்ளது.

டெசர்ட்

இந்திய அரசின் FSSI சட்ட திட்டத்தின் கீழ், சில நிறுவனங்களில் ஃப்ரோஸன் டெசர்ட் என்றே குறிப்பிட்டிருப்பார்கள். இதன்மூலம் அது ஹைட்ரஜனேட்டடு ஆயிலில் செய்தது என்பதை நாம் தெரிந்து கொள்ள முடியும். அவற்றை வாங்காமல் தவிர்ப்பதே நல்லது. இருப்பினும் சில நிறுவனங்கள் ஃப்ரோஸன் டெசர்டையும் ஐஸ்க்ரீம் என்றே அடையாளப்படுத்தி விற்பனை செய்கின்றனர்.

எனவே அதில் எந்தெந்தப் பொருள்கள், எந்த அளவில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என சரிபார்த்த பின் உட்கொள்வது நல்லது. ஃப்ரோஸன் டெசர்ட்டில் பெரும்பாலும் Hydrogenated fats என குறிப்பிடப்பட்டிருக்கும்.

எவ்வளவு சதவிகிதம் கொழுப்பு இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது எனக் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என அரசு தரப்பிலிருந்தும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஐஸ்க்ரீமிலும் சர்க்கரை மற்றும் சிறிதளவு கொழுப்புச்சத்து இருக்கலாம். ஆனால் பால் தான் அதிகமிருக்கும். எனவே ஃப்ரோஸன் டெசர்ட்டோடு ஒப்பிடுகையில் ஐஸ்க்ரீம் தான் நல்லது.

ஐஸ்க்ரீமும் சற்றே கொழுப்புச்சத்து நிறைந்ததுதான். குழந்தைகளுக்கு ஐஸ்க்ரீம் கொடுக்கும்போது, ஒரு ஸ்பூன் ஐஸ்க்ரீம் குறைந்தது 20-30% கொழுப்பு இருக்கும். அந்தக் குழந்தைக்கு ஒரு நாள் முழுவதற்குமான கொழுப்புச்சத்து இதிலிருந்தே கிடைத்துவிடும். இதனால் அடுத்தடுத்து உணவு எடுத்துக் கொள்ளும்போது கொழுப்புச்சத்து அதிகரித்து, உடல் பருமன் அதிகமாகலாம்” என்கிறார் விஜயஶ்ரீ.

இதுகுறித்து, மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியின் ரன்னரான நித்யாவிடம் பேசினோம்… அவர், “ஐஸ்க்ரீம் க்ரீமியாக தயாரிக்க அதனை அதிக முறை பீட் செய்ய வேண்டியிருக்கும். அப்போதுதான் க்ரீமியான பதம் வரும். ஆனால் ஃப்ரோஸன் டெசர்ட் என்பது க்ரீமியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அது உறைய வைக்கப்பட்ட இனிப்பு அவ்வளவு தான்.

ஆனால் பழச்சாறு மற்றும் லிக்விட் குளுக்கோஸ் சேர்த்து உறைய வைக்கப்படுவதும் ஃப்ரோஸன் டெசர்ட் என்று தான் சொல்லப்படுகிறது. இந்த முறையில் சாப்பிடும்போது, ஐஸ்க்ரீமைவிட இதில் கொழுப்பு மற்றும் சர்க்கரையின் அளவு மிகவும் குறைவு. ஃப்ரோஸன் யோகர்ட்டும் ஃப்ரோஸன் டெசர்ட் என்பதில் தான் ‌அடங்கும். பால் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு ஃப்ரோஸன் டெசர்ட் ஏற்றது‌” என்றார்.

வீட்டிலேயே  செய்யலாம் ஐஸ்க்ரீம் மற்றும் ஃப்ரோஸன் டெசர்ட்…

ஐஸ்க்ரீம் (குல்ஃபி):

மாம்பழ‌ குல்ஃபி செய்வதற்கு, மாம்பழத்தை தேவையான அளவு எடுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும். பின்பு பாலோடு சர்க்கரை சேர்த்துக் காய்ச்சி, அது பாதியாகக் குறையும் வரை கொதிக்க வைத்து, அதில் முந்திரி, பாதாம், பிஸ்தா போன்றவற்றை பொடியாக்கி சேர்க்கவும். அதனோடு மாம்பழ விழுதையும் சேர்த்து, அதற்கான மோல்டில் ஊற்றி உறைய வைத்து எடுத்தால் குல்ஃபி தயாராகி விடும்.

ஐஸ்க்ரீம்

ஃப்ரோஸன் டெசர்ட்:

ஏதேனும் ஒரு பழச்சாற்றை (புளிப்புச்சுவையுடைய ஆரஞ்சு, திராட்சை எடுத்து கொண்டால் நன்றாக இருக்கும்) தேவையான அளவு எடுத்து அரைத்து, சர்க்கரை சேர்த்து ஃப்ரீஸ் செய்தால் போதும். ஆரோக்கியமான ஃப்ரோஸன் டெசர்ட் தயாராகிவிடும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.