நெல்லை மாவட்டம், கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருபவர், பரமசிவன். இவரின் மனைவி திவ்யா, வீரவநல்லூர் பகுதியிலுள்ள தன்னுடைய உறவினர் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அங்குள்ள உறவினர்கள் எட்டு பேர் தாமிரபரணி ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளனர்.

திருப்புடைமருதூர் பகுதியில் தாமிரபரணி ஆற்றில் அனைவரும் ஆனந்தமாக குளித்துள்ளனர். அப்போது அங்குள்ள ஆழமான பகுதிக்கு திவ்யா சென்றுள்ளார். அதனால் அவர் நீரின் போக்கில் அடித்துச் செல்லப்பட்டு உயிருக்குப் போராடி தத்தளித்துள்ளார். அதைப் பார்த்து பதறிய உறவினர்களான கணேஷ், ராகுல் ஆகியோர், அவரை மீட்க விரைந்து ஆற்றுக்குள் சென்றுள்ளனர்.

ஆற்றில் இருந்த பள்ளமான பகுதியில் தண்ணீர் வேகமாக சென்றதால் திவ்யாவைக் காப்பாற்ற முடியவில்லை. அவர் நீருக்குள் மூழ்கிய நிலையில், அவரை மீட்கச் சென்ற இருவரும் கரை திரும்ப முடியாமல் தத்தளித்துள்ளனர். அவர்களை, அப்பகுதியில் குளித்து கொண்டிருந்தவர்கள் கவனித்து காப்பாற்ற முயன்றுள்ளனர். அதில் கணேஷ் மட்டும் மீட்கப்பட்டுள்ளார். ராகுல் நீரில் மூழ்கி உயிரிழந்துவிட்டார்.

இது குறித்த தகவலறிந்து வந்த அம்பாசமுத்திரம் மற்றும் சேரன்மகாதேவி தீயணைப்புத்துறையினர் உயிரிழந்தவர்களின் உடல்களைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்பகுதி மக்களின் ஒத்துழைப்புடன் சற்று நேர தேடலுக்குப் பின்னர் தாமிரபரணி ஆற்றிலிருந்து இரு உடல்களையும் மீட்டனர்.

இந்த சோகச் சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள், “தாமிரபரணி ஆற்றில் சில இடங்களில் ஆழமான பள்ளங்கள் இருக்கின்றன. இன்னும் சில இடங்களில் நீரின் வேகம் அதிகமாக இருக்கும்.

வெளியூர்களிலிருந்து வருபவர்களுக்கு அது தெரியாது என்பதால், ஆபத்தை அறியாமல் ஆற்றில் சிக்கிக் கொள்கிறார்கள். அதனால் ஆபத்தான பகுதிகளில் அது குறித்த அறிவிப்பு பலகைகளை அதிகாரிகள் வைக்க வேண்டும்” என்கின்றனர்.

உயிரிழந்த 32 வயது திவ்யாவின் கணவர் காவலராகப் பணியாற்றுகிறார். ஆற்றில் மூழ்கிய அவரை காப்பாற்றச் சென்று உயிரிழந்த உறவினரான ராகுல் கல்லூரி மாணவர். அவர்களின் உடல்களை உடற்கூறு ஆய்வுக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்கு அனுப்பிவைத்த வீரவநல்லூர் போலீஸார், இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாமிரபரணி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த இருவர் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.