உக்ரைன், ரஷ்யா இடையே கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாகப் போர் நீடித்து வருகிறது. இதில் உக்ரைனுக்கு ஆதரவாக, ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் தொடர்ந்து போர் ஆயுதங்களை வழங்கி வந்த நிலையில், 120-க்கும் மேற்பட்ட நாடுகளில் தடைசெய்யப்பட்ட ‘கிளஸ்டர்’ எனும் வெடிகுண்டை உக்ரைனுக்கு வழங்க அமெரிக்கா சம்மதம் தெரிவித்திருக்கிறது.

ரஷ்யாவுக்கு எதிரான போரில் கிளஸ்டர் ஆயுதங்களைப் பயன்படுத்தவும், வழங்கவும், அமெரிக்காவிடம் உக்ரைன் கோரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசும்போது, உக்ரைனுக்கு இந்த வகை ஆயுதங்களை வழங்க அமெரிக்கா முடிவெடுத்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். இந்த வாரத்துக்குள், ஆயுதங்களை வழங்கவிருப்பதாக அமெரிக்க ராணுவ அதிகாரிகளும் தெரிவித்திருக்கின்றனர்.

கிளஸ்டர் வெடிகுண்டின் முழுமையான பின்னணி;

கிளஸ்டர் வெடிகுண்டு என்பது ஏவுகணை அல்லது விமானத்திலிருந்து பறந்து கொண்டிருக்கும்போதே, குண்டுகளை வீசித் தாக்கும் ஆயுதமாகும். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும்போதே குண்டுகளை வீசுவதால் இதில் பாதிப்புகளும் அதிகம்.

இவை, வீசிய உடனேயே வெடிக்காது. இந்த குண்டுகள் தரையில் விழுந்த பிறகே, செயல்படத் தொடங்கும். இதே வகையான ஆயுதத்தை உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவும் பயன்படுத்தி வருகிறது.

பரந்த நிலப்பரப்பில் வீசும்போது, சில குண்டுகள் வெடிக்காமலும் போகலாம். இல்லையெனில், நீண்டகாலம் கழித்துக்கூட வெடிக்கலாம். ஆனால், இவை செயல்படாமல் போவதற்கான வாய்ப்புகளும் அதிகம். கிட்டத்தட்ட, கண்ணி வெடிகளைப்போலவும் இவை செயல்படுகின்றன. இந்த சப்மனிஷன் தோல்வி விகிதம் – “டுட் ரேட்” (Dud Rate) என்று குறிப்பிடப்படுகிறது. இந்த வெடிகுண்டுகள் செயல்படாமல் போவதற்கான வாய்ப்பு, 10 முதல் 40 சதவிகிதம் வரை உள்ளது. இது போன்று, செயல்படாமல்போன குண்டுகள் நிலத்திலேயே கிடக்கும். குழந்தைகளும், பெரியவர்களும் எதிர்பாராதவிதமாக குண்டுகளின் அருகில் செல்லும்போது அவை வெடித்துச் சிதறுகின்றன. 2021-ம் ஆண்டில், இந்த வெடிகுண்டுகளின் எச்சங்களின் மூலம் மட்டும் 141 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இதில் 97 சதவிகிதம் பொதுமக்களும் குழந்தைகளும் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

இதில் பாதிப்புகளும் உயிரிழப்புகளும் அதிகம் இருப்பதால், 120-க்கும் மேற்பட்ட நாடுகளில் இது தடைசெய்யப்பட்டிருக்கிறது. 2008-ம் ஆண்டில் கிளஸ்டர் வெடிமருந்துகள் தொடர்பான மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கிளஸ்டர் ஆயுதத்தைப் பயன்படுத்தவோ, உற்பத்தி செய்யவோ, பரிமாற்றம் அல்லது சேமிக்கவோ கூடாது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கின்றன.

ஆனால் அமெரிக்கா, உக்ரைன், ரஷ்யா ஆகிய நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. 2010-ம் ஆண்டில், இந்த சர்வதேச ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது. தடைசெய்யப்பட்டாலும், பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு போர்களில் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த வெடிகுண்டுகளைப் பயன்படுத்துவதை மனித உரிமைகள் அமைப்பு தொடர்ந்து, எதிர்த்து வருகிறது.

கிளஸ்டர் வெடிகுண்டு பயன்படுத்தப்பட்ட போர்கள்:

இந்த வகையான கிளஸ்டர் வெடிகுண்டுகள், முதன் முறையாக இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்டன. பின்னர், 1955 முதல் 1975 வரை நடைபெற்ற வியட்நாம் போரின்போது, அமெரிக்க ராணுவம் இந்த குண்டுகளைப் பயன்படுத்தித் தாக்கியது. அந்தப் போரில் வீசப்பட்ட 260 மில்லியன் கிளஸ்டர் குண்டுகளில், 80 மில்லியன் குண்டுகள் வெடிக்கத் தவறிவிட்டன.

1978-ம் ஆண்டில், இஸ்ரேல் – லெபனான் இடையே நடைபெற்ற போரில், இஸ்ரேல் ராணுவத்துக்கு அமெரிக்கா கிளஸ்டர் குண்டுகளை வழங்கியது. மேற்கு சஹாரா பகுதியில் 1975 முதல் 1991-ம் ஆண்டு வரை நடைபெற்ற போரில், ராயல் மொராக்கோ ராணுவம் (RMA) கிளஸ்டர் குண்டுகளை வீசியது. 1979 முதல் 1989-ம் ஆண்டு வரை, ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியன் படைகளுக்கும், முஜாஹிதீன் படைகளுக்கும் இடையே போர் நடைபெற்று வந்தது. இதில், சோவியத் படைகள் கிளஸ்டர் வெடிகுண்டுகளைப் பயன்படுத்தின. இதில் முஜாஹிதீன் படைகளுக்கு அடைக்கலம் அளித்ததாக, பல ஆப்கன் கிராமங்களில் இந்த குண்டுகள் வீசி அழிக்கப்பட்டன.

மாதிரிப் படம்

1991-ம் ஆண்டில் நடைபெற்ற ஈராக் போரில் அமெரிக்கா, இங்கிலாந்து படைகள் இணைந்து கிளஸ்டர் குண்டுகளைப் பயன்படுத்தின. 2001,2002-ம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற போரின்போது அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் கிளஸ்டர் குண்டுகளை வீசின.

2003-2006-ம் ஆண்டு வரை, மீண்டும் ஈராக்கில் நடைபெற்ற போரிலும் அமெரிக்க ராணுவம் கிளஸ்டர் குண்டுகளை வீசியது. இதற்கடுத்து சிரியா, லெபனான், லிபியா நாடுகளில் நடைபெற்ற போர்களிலும் அமெரிக்க ராணுவம் கிளஸ்டர் வெடிகுண்டுகளைப் பயன்படுத்தியது.

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிரான உள்நாட்டுப் போரில், இலங்கை ராணுவம் கிளஸ்டர் வெடிகுண்டுகளைப் பயன்படுத்தியது. இதன் மூலம், விடுதலைப் புலிகளின் பல முகாம்கள் அழிக்கப்பட்டன. எண்ணற்ற மக்களும் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா பயன்படுத்தக்கூடிய கிளஸ்டர் வெடிகுண்டுகளின் “டட் ரேட்” – 40 சதவிகிதம் வரை இருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது, ரஷ்யாவின் கிளஸ்டர் வெடிகுண்டுகள் செயல்படாமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால், அமெரிக்காவின் கிளஸ்டர் குண்டுகள் அப்படியல்ல. அமெரிக்கா, உக்ரைனுக்கு அனுப்பவிருக்கும் கிளஸ்டர் ஆயுதங்களின் “டட் ரேட்” – 2.35% சதவிகிதத்துக்கும் குறைவாகவே உள்ளது. இது செயல்படாமல் போவதற்கான வாய்ப்பும் குறைவு. ஆனால், அமெரிக்க சட்டத்தின்படி, “டட் ரேட்” 1 சதவிகிதத்துக்கு மேல் இருந்தால் கிளஸ்டர் வெடிகுண்டுகளை அனுப்ப முடியாது. இது மட்டுமல்லாமல், பல மனித உரிமை அமைப்புகள் இதனை எதிர்த்து வருகின்றன. இதனால், உக்ரைனுக்கு கிளஸ்டர் வெடிகுண்டுகளை அனுப்புவதில் பல சிக்கல்களும் எழலாம். இதனால், கால தாமதமும் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.