தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீரரான செல்வபிரபு திருமாறனை 20 வயதுக்குட்பட்ட சிறந்த தடகள வீரராக ஆசிய தடகள கூட்டமைப்பு தேர்வு செய்திருக்கிறது. அந்த விருதை வாங்குவதற்காக வருகிற 10 ஆம் தேதி தாய்லாந்துக்கு பறக்கவிருக்கிறார் செல்வபிரபு.

முதல்வர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை உச்சி முகர்ந்து பாரட்டிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் செல்வபிரபுவை தொடர்புகொண்டு பேசினோம்.

Selva Prabu

‘சின்ன வயசுல இருந்தே எனக்கு ஸ்போர்ட்ஸ் மேல பெரிய ஆர்வம் உண்டுங்க அண்ணா…’ என ஆர்வமாக பேசத் தொடங்கிய செல்வபிரபு, ‘ஸ்கூல் படிக்கிறப்பவே ஓடுறது ஆடுறதுனு ரொம்பவே ஆர்வமா இருப்பேன். அப்பவே லாங் ஜம்ப் நல்லா பண்ணுவேன். ஆறாவது படிக்கும் போது மாவட்ட அளவுல ஒரு போட்டி நடத்துனாங்க அதுல நல்லாவே தாண்டியிருந்தேன். உடனே, அதை பார்த்துட்டு ‘SDAT’ ஹாஸ்டலுக்கு ஸ்டூடண்ட்ஸ் செலக்ட் பண்றாங்க, நீ அதுல கலந்துக்கோன்னு நிறைய பேர் சொன்னாங்க. நானும் கலந்துக்கிட்டேன். தமிழ்நாடு முழுக்கவும் இருந்து நிறைய பசங்க அந்த போட்டில கலந்துக்கிட்டாங்க. அதுலயும் நல்லா பண்ணேன். அப்பதான் திருச்சியில SDAT ஹாஸ்டல்லயே தங்கி படிக்கிற வாய்ப்பு கிடைச்சுச்சு. நானும் மதுரைல இருந்து திருச்சிக்கு வந்துட்டேன். பத்தாவது படிக்கிறப்ப இருந்து நேஷனல் லெவல் போட்டிக்கு போக ஆரம்பிச்சிட்டேன். ஸ்கூல் ல ஆரிஃப், ஸ்ரீனிவாசன்னு ரெண்டு கோச் எனக்கு பெரிய அளவுல ஹெல்ப் பண்ணிருக்காங்க. அவங்களுக்கு நன்றி சொல்லிக்குறேன்.’ என்றவரிடன் செல்வபிரபுவின் குடும்பப் பின்னணி பற்றியும் அவரின் ஆசையைப் பற்றியும் கேட்டேன்.

‘மதுரைல குடிமங்கலம்தான் எங்க ஊரு. அப்பா அம்மா ரெண்டு பேருமே விவசாயம்தான் பார்க்குறாங்க. ஆனா, என்னோட ஆசைக்கு தடை சொல்லாம அவங்களால எவ்வளவு முடியுமோ அவ்வளவு சப்போர்ட் பண்றாங்க.

அண்ணுக்கும் விளையாட்டுலதான் தீவிர ஆசை. அவன் ஒரு ஃபுட்பால் ப்ளேயர். மதுரைல காலேஜ் படிக்குறான். ஆசிய அளவுல இப்படி ஒரு அவார்ட் கொடுக்குறாங்கனு நியூஸ் வந்தவுடனேயே அப்பா, அம்மா ப்ரண்ட்ஸ்னு எல்லாருமே செம ஹேப்பி. முதலமைச்சர், உதயநிதி ஸ்டாலின், கனிமொழின்னு நிறைய பெரிய ஆளுங்க வாழ்த்து சொல்லிருக்காங்கன்னு நியூஸ்ல பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன். ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. கொலம்பியால ஒரு U20 தொடர்ல வெள்ளி ஜெயிச்சேன். இந்த அவார்ட் கிடைக்குறதுக்கு முக்கிய காரணமே அதுதான். ஆனா, எனக்கும் இன்னும் பெருசா சாதிக்கனும்னு ஆசையா இருக்கு.

Selva Prabu

டோக்கியோ ஒலிம்பிக்ஸ நான் டிவில தான் பார்த்தேன். அடுத்து பாரிஸ் ஒலிம்பிக்ஸ் வரப்போகுது. அதுக்கு எப்படியாச்சு குவாலிஃபை ஆகி நல்லா பண்ணிடனும். அதுதான் என்னோட லட்சியம்.

அமெரிக்கால இருக்குற கிறிஸ்டின் டெய்லர்தான் என்னோட இன்ஸ்பிரேஷன். அவர் ஆடுற விதங்கள பார்த்துதான் நிறைய கத்துக்குறேன். அவர மாதிரியே நிறைய சாதிக்கணும்.’ என தனது கனவு பற்றியும் கனவு நாயகன் பற்றியும் பேசி முடித்தார் செல்வபிரபு.

வாழ்த்துகள் செல்வபிரபு!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.