திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவிலிலுள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் வெள்ளகோவில் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலராக முத்துராமலட்சுமி பணியாற்றி வருகிறார், இவர் கணவர் விக்னேஷ், ராணுவத்தில் அதிகாரியாகப் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அங்கன்வாடியில் குழந்தைகள் குறைவாக இருப்பதைக் கணக்கிட்டு ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் இருக்கும் இரண்டு அங்கன்வாடிகளை ஒரே இடத்தில் இணைக்க வேண்டும் என்பதன் அடிப்படையில், குள்ளசெல்லிபாளையம் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் குறைவாக இருப்பதால், அருகருகே இருந்த அங்கன்வாடி மையங்களை ஒன்றாக இணைக்க மாவட்ட நிர்வாகத்துக்கு முத்துராமலட்சுமி பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், தனக்குத் தெரியாமல் முத்துராமலட்சுமி இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகக் கூறி, வெள்ளகோவில் நகர்மன்றத் தலைவர் கனியரசியின் கணவரும், தி.மு.க முன்னாள் செயலாளருமான முத்துக்குமார், முத்துராமலட்சுமியிடம் `பத்து நிமிடங்களில் குழந்தைகளின் வருகைப் பதிவேட்டை எடுத்துக் கொண்டு நகராட்சி அலுவலகத்துக்கு வரவேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார். மேலும், `அப்படி இல்லையெனில், நாங்கள் அங்கு வருவோம்’ என்றும் தெரிவித்து போனில் மிரட்டல்விடும் தொனியில் பேசியுள்ளார்.

முத்துக்குமார்

இதைத் தொடர்ந்து, குழந்தைகள் திட்ட அலுவலகத்துக்குச் சென்ற முத்துகுமார் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட தி.மு.க-வினர், முத்துராமலட்சுமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, முத்துராமலட்சுமியின் மாமனார் முத்து (70) என்பவர் அலுவலக வாயிலில் வெளிப்புறத்தில் நின்றுகொண்டு, `என் மருமகளிடம் என்னப் பிரச்னை?’ என கேட்டபோது, தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள், முத்துவை சரமாரியாகத் தலையில் தாக்கியுள்ளனர். இதனை தடுக்கச் சென்ற முத்துராமலட்சுமியையும் தாக்கியதில் அவரது முதுகு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதில், காயமடைந்த இருவரும் வெளியே வந்துவிடக் கூடாது என கருதி, அவர்களை அலுவலகத்துள்ளே தள்ளி, பூட்டியுள்ளனர். இதைத் தொடர்ந்து, முத்துராமலட்சுமி புகார் தெரிவிக்க வெள்ளகோவில் காவல் நிலையத்துக்குச் சென்றபோது, அங்கு புகாரைப் பெற்றுக் கொள்ளவில்லை எனவும், மூன்று மணி நேரத்துக்கு மேலாக யாரும் உதவ வரவில்லை எனவும் கூறப்படுகிறது. உறவினர்களை போனில் அழைத்து, மூன்று மணி நேரத்துக்குப் பிறகு காங்கேயம் அரசு மருத்துவமனையில் இருவரும் சேர்க்கப்பட்டு, உயர் சிகிச்சைக்காக திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து முத்துராமலட்சுமி, “குள்ளசெல்லிபாளையம் அங்கன்வாடி மையத்தை மூடியதால் ஆத்திரமடைந்த தி.மு.க-வைச் சேர்ந்த வெள்ளகோவில் நகர்மன்றத் தலைவரின் கணவர் முத்துக்குமார் போனில், `வருகைப்பதிவேட்டை 10 நிமிடத்துக்குள் தர வேண்டும், இல்லையெனில் அலுவலகத்துக்கு வருவோம்’ என்று தெரிவித்தார். நான் அங்கு செல்லவில்லை. இதையடுத்து அலுவலகத்துக்கு வந்த முத்துக்குமார் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட தி.மு.க-வினர், `அங்கன்வாடி மையத்தை ஏன் மூடினீர்கள்’ என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த மையத்தில் குழந்தைகள் குறைவாக இருப்பதால் மையத்தை மூடுவதற்கு பரிந்துரைத்துள்ளேன் எனத் தெரிவித்தபோது, `வருகைப்பதிவேடு காட்டுங்கள்’ என கோபத்துடன் தகாத வார்த்தைகளைப் பேசினர். என்னை அலுவலகத்துக்கு விடவந்த என் மாமனாரையும் தி.மு.க-வினர் மிகக் கடுமையாகத் தாக்கினர்.

தாக்குதல்

அங்கிருந்து வெளியே வர முயன்றபோது, எங்களை கீழே தள்ளிவிட்டு அராஜக செயலில் ஈடுபட்டனர். இது குறித்து வெள்ளகோவில் காவல் நிலையத்துக்குச் சென்று புகார் அளித்தும், சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என கூறியும், எங்களை போலீஸார் அனுமதிக்கவில்லை. அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுக்க வற்புறுத்தினார்கள். நாங்கள் இருவரும் அருகிலுள்ள வெள்ளகோவில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்குச் சென்றோம், எங்களை தாக்கிய தி.மு.க-வினர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

முத்துராமலட்சுமி அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர். அதேபோல, முத்துக்குமார் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின்பேரிலும் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.