ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு செய்தி சேகரிக்க சென்றோம். அப்போது, கூட்ட அரங்கின் வெளியே இரு மாற்றத்திறனாளி இளைஞர்கள் மனுவுடன் காத்திருந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது, `நாங்கள் இருவரும் சகோதரர்கள், வேலை கேட்டு மனு கொடுக்க வந்துள்ளதாக’ கூறினர்.தொடர்ந்து விரிவாக அவர்களிடம் பேசத் தொடங்கினோம்,

ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்த மாற்றுத்திறனாளி சகோதரர்கள்

“ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா சாம்பகுளம் கிராமம்தான் எங்களது ஊர். எனது பெயர் கிரண், இது என்னுடைய தம்பி ரஞ்சித்குமார். எங்களால் நடக்க முடியாது. பிறவியிலேயே எங்களுக்கு கால்கள் ஊனம் கிடையாது. 10 வயது வரை மற்ற பிள்ளைகளைப் போல் நன்றாகத்தான் ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்தோம். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக எங்கள் இருவராலும் நடக்க முடியாமல் கால்கள் இரண்டும் முடங்கிப் போய்விட்டது.

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் நாங்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோம். அப்போது எங்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மரபணு கோளாறால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனை சரி செய்ய இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என கூறி கைவிரித்து விட்டனர். அதன் பிறகு எங்க அப்பா, அம்மா கூலி வேலை செஞ்சு எங்க ரெண்டு பேரையும் பாதுகாத்து, பி.இ வரைக்கும் படிக்க வச்சாங்க. அம்மா சமீபத்தில் உடல் நலக்குறைவு காரணமாக இறந்து போய்ட்டாங்க. இப்ப எங்க அப்பா சிங்காரம் தான் எங்களை கவனிச்சுகிறாங்க. கட்டட வேலை செஞ்சு எங்களை காப்பாற்றி வருகிறார்.வயது மூப்பு காரணமாக முன்பு போல் அப்பாவால் வேலை செய்ய முடியவில்லை. எங்களை காப்பாற்ற‌ வேண்டும் என்பதற்காக அவர் கஷ்டப்பட்டு உழைத்து வருகிறார். அவரு படுகிற கஷ்டத்தை பார்க்கும்போது, ரொம்ப வேதனையா இருக்கு. எங்களாலும் ஓடி ஆடி வேலை செய்ய முடியாது.

மனு கொடுக்க தவழ்ந்து சென்ற மாற்றுத்திறனாளி சகோதரர்கள்

நாங்க படிச்சிருக்க படிப்ப வச்சு ஓரே இடத்துல அமர்ந்து வேலை செய்யிகிற மாதிரி ஏதாவது அரசு வேலை ஏற்பாடு செய்து கொடுங்கனு மூனு வருசமா கேட்டு அலைஞ்சுகிட்டு வருகிறோம். ஆனா நாங்க கொடுத்த மனுவை பரீசிலனை கூட செய்ய அவர்கள் முன்வரவில்லை சார்” என அழத்தொடங்கினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய அவருடைய தம்பி ரஞ்சித்குமார், “ஆம்பள புள்ளையா பொறந்தும், பெத்தவங்க கஷ்டத்தை தீர்க்க முடியலங்கிற எங்களோட வேதனை இவங்களுக்கு புரியல சார். சாமானிய மனிதர்களைப் போல யார் துணையும் இல்லாம எங்களால எந்த வேலையும் செய்ய முடியாது. கழிவறைக்கு போகிறதா இருந்தாலும், வாகனங்களில் பயணம் செய்றதா இருந்தாலும் எங்களுக்கு யாராவது உதவி செஞ்சா தான் முடியும். இத நெனச்சு நானும் எங்க அண்ணனும் ஒவ்வொரு நாளும் அழுகாத நாளே கிடையாது. எங்க அப்பா இருக்க வரைக்கும் எங்கள சோறு போட்டு காப்பாத்தி கிட்டு வராரு. அதுக்கப்புறம் நாங்க என்ன செய்யறதுன்னு யோசிச்சாலே பயமா இருக்கு. எதுக்குடா பொறந்தோம்னு தோணுது. கொஞ்சமாவது எங்க அப்பாவோட கஷ்டத்தை போக்கணும், எங்களுடைய எதிர்கால வாழ்க்கையை கட்டமைச்சுக்கணும்னு போராடிக்கிட்டு வர்றோம். 2021ல கல்லூரி படிப்பை முடிச்சோம்.

அப்போ இருந்த ஆட்சியர் சந்திரகலாவிடம் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கும் அரசு வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருமாறு மனு கொடுத்தோம். அது கிடப்பில் போடப்பட்டது. அதன் பிறகு ஆட்சியர்களாக வந்த ஆட்சியர்களும் எங்கள் மனுக்களை வாங்கி வைத்துக் கொண்டார்களே தவிர அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒவ்வொரு முறையும் மனு கொடுக்க முதுகுளத்தூரில் இருந்து இங்கு வர நாங்கள் படும் கஷ்டம் சொல்லி மாளாது.

மாற்றுத்திறனாளி சகோதரர்களான கிரண், ரஞ்சித்குமார்

எங்க அப்பாவிடம் செலவிற்கு 100 ரூபாய் வாங்கிக்கொண்டு ஒருவேளை மட்டும் அரைகுறையாக சாப்பிட்டு விட்டு, பல மணி நேரம் காத்திருந்து மனுவை கொடுத்து விட்டு செல்கிறோம். ஆனால் எதுவுமே நடக்காது. அது வேதனையாக உள்ளது. அரசு சார்பில் மாத உதவித்தொகை, நான்கு சக்கர மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் நிரந்தர வேலை என்பதே எங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும். தயவு செய்து எங்கள் ‘வலி’யை புரிந்து கொண்டு வாழ வழி காட்டுங்கள்” என குரல் தழுதழுக்க பேசி முடித்தார். இதையடுத்து ஆட்சியர் விஷ்ணு சந்திரனிடம் மனு கொடுத்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் நிச்சயம் உதவி செய்வதாக கூறி இருவரையும் அனுப்பிவைத்தார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.