ஒரு நாளின் பெரும்பகுதியை வேலைக்காகச் செலவழிக்கும் சூழலில், பணியிடங்கள் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பது அவசியமாகிறது. ஆனால் பெரும்பாலான பணியிடங்கள் அப்படி இருப்பதில்லை. பெண்களுக்கே பணிச்சூழல் ஆரோக்கியமானதாக இல்லாதபோது திருநர் சமூகத்தின் நிலை இன்னும் மோசமாகவே உள்ளது.

சமூகத்தில் நிலவிவரும் திருநர் வெறுப்பு மனநிலைக்கு மத்தியில், படித்து வேலைக்குச் சென்று தன் சமூகத்திற்கான அங்கீகாரத்திற்காக உழைக்கும் திருநங்கைகளுக்கு, பணியிடங்களும் கூடுதல் சுமையாகிப் போகின்றன. பணியிடங்களில் ஏற்படும் சவால்களை அறிய திருநங்கைகளிடம் பேசினோம்.

ரோஷினி பேகம்

திருநங்கை ரோஷினி பேகம், ஐடியில் பணிபுரிகிறார். இவர், “நான் வேலைக்குச் சென்ற ஆரம்பத்தில் ஆணாகவே வெளிப்படுத்திக் கொண்டேன். சில காலம் கடந்த பிறகு, என்னை திருநங்கையாக அறிமுகப்படுத்திக் கொண்டேன். பிறக்கும்போது வைத்த பெயரை, திருநங்கை என்று வெளிப்படையாக அறிவித்தபின் மாற்றிக்கொள்ளும் வழக்கம் உள்ளது. திருநங்கையான பின் என் இயற்பெயரை மாற்றிக் கொண்டேன். ஆனால் அலுவலகத்தில் பெரும்பாலானவர்கள் என்னுடைய பழைய பெயரை வைத்தே அழைத்தனர். இந்தச் செயல் என்னைக் காயப்படுத்தியது. என்னுடைய பாலினமாக பெண்மையை நான் தேர்ந்தெடுத்த பின்பும் வேறொரு பாலினத்தின் பெயரினால் என்னை அழைப்பது முறையில்லை.

அதேபோல் கழிவறை மிகப்பெரிய பிரச்னை. நான் பெண்ணாக உணர்ந்தாலும், சக ஊழியர்கள் என்னை பெண்ணாக ஏற்றுக் கொள்ளவில்லை. பெண்களுக்கான கழிவறைக்குள் செல்லும் போதெல்லாம் பெண்கள் என்னைக் கண்டு அஞ்சுகின்றனர். என்னை நான் பெண்ணாக உணரும்போது ஆண் கழிவறையையா பயன்படுத்த முடியும்?

என்னை பெண்ணாக ஏற்றுக்கொள்வதில் சக பெண்களுக்கு என்ன தயக்கம் என்பதுதான் புரியவில்லை. இப்பிரச்னை ஆரம்பத்தில் இருந்தது. நான் இப்போதெல்லாம் சக தோழிகளுடன் செல்வதால் மற்ற பெண்களின் அச்சத்தை தவிர்க்க முடிகிறது. பாலுறுப்பு அறுவை சிகிச்சைக்காக விடுமுறை எடுத்ததன் விளைவாக என்னுடைய பதவி உயர்வு மறுக்கப்பட்டது. இதெல்லாம் நான் பணிபுரிந்த பழைய இடத்தில் நடந்தவை” என்றார்.

பாவனா

பெருநிறுவனம் ஒன்றில் நிர்வாகியாகப் பணிபுரியும் பாவனா பேசுகையில் “சர்வதேச நிறுவனம் என்பதால் எல்.ஜி.பி.டி சமூகத்திற்கான அனைத்து உரிமைகளும் அலுவலக சட்டங்களாக வகுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை சட்டங்களாக மட்டுமே இருப்பதுதான் பிரச்னை. திருநங்கை என்ற காரணத்தால் பேசுவதற்கும் சந்தேகம் கேட்பதற்கும் என்னுடன் பயணிக்கும் சக பணியாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர். பேசுவதற்கே தயங்கியவர்கள், திருநங்கை பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு நடத்துவதில் என்ன பயன் இருக்கிறது? உரிமைகளை சட்டம் வலியுறுத்தினாலும் சமூகத்தின் மனநிலையில் மாற்றம் ஏற்படவில்லை” என்றார்.

நிறங்கள் அமைப்பின் துணை இயக்குநர் சிவக்குமார், “நிறுவனங்களும், கடைகளும் திருநர்களை வேலைக்கு அமர்த்துவதில் தயக்கம் காட்டுகின்றன. பெருநிறுவனங்கள் மட்டுமே சர்வதேச நிறுவனத்திற்கு வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளின் அடிப்படையில், திருநர் சமூகத்தை வேலைக்கு அமர்த்திக் கொள்கின்றன. பெயரளவுக்கு சில திருநங்கைகளை மட்டும் பணியமர்த்திவிட்டு பிறகு திருநர்கள் பணிக்குத் தகுதியற்றவர்கள் என்று பொய்யான காரணத்தை வைத்து பணி நீக்கம் செய்கின்றனர். பெருநிறுவனங்களில் வேலை செய்யும் திருநர்கள், மனம் விட்டுப் பேசுவதற்கான சூழல்கூட இல்லை.

சிவக்குமார்

திருநர்கள் பாலுறுப்பு அறுவை சிகிச்சைக்காக விடுமுறை எடுக்கும்பட்சத்தில் வேலை பறிபோகும் ஆபத்து உள்ளது. பாலுறுப்பு அறுவை சிகிச்சையை அழகுக்கான அறுவை சிகிச்சையாகவே நிறுவனங்கள் கருதுகின்றன.

அரசு மற்றும் தனியார் துறைகளில் திருநருக்கான வேலைவாய்ப்பை உறுதிசெய்வது அரசின் கடமை. சக ஊழியர்கள் திருநர்களுடன் இயல்பாகப் பழகுவதில்லை. அதை சீர்படுத்த விழிப்புணர்வு, கருத்தரங்கு போன்றவை அவசியம்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.