திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகேயுள்ள கிளிக்கூடு பகுதியைச் சேர்ந்தவர் கனி (50). இவர் 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 27-ம் தேதி முதல் 2022 ஆகஸ்ட் 2-ம் தேதி வரை திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் கணக்காளராக வேலைப் பார்த்தார். இந்த காலக்கட்டத்தில் அரசு திட்ட நிதிகள், தற்செயல் நிதிகள், வரிக்குரிய தொகைகள் என 1,00,57,601 ரூபாயை சம்பந்தப்பட்டவர்களுக்குச் செலுத்தாமல் இருந்திருக்கிறார். மேலும், கையாடல் செய்த இந்தப் பணத்தையெல்லாம் அவரது வாரிசுகள் மற்றும் குடும்பத்தாரின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பிவந்திருக்கிறார். நிதியாண்டு தணிக்கையின்போது இந்த விவகாரம் அம்பலமாக, அப்போதே திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேலைப் பார்த்து வந்த கனியை, மணிகண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்குப் பணியிட மாற்றம் செய்தனர்.

கைதுசெய்யப்பட்ட கனி

கையாடல் செய்த பணத்தில் கோடிக்கணக்கான ரூபாயைப் போட்டு, வேங்கூர் பகுதியில் கனி சொந்தமாக பிரமாண்டமான பங்களா வீட்டைக் கட்டி வருவதும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

மேலும், இந்த விவகாரம் சம்பந்தமாக திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் மேற்பார்வையில் விசாரணையும் நடத்தப்பட்டு வந்தது. இதற்கிடையே, பணியிட மாற்றத்தால் மணிகண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வந்தபிறகும் கனியின் கையாடல் சம்பவம் அரங்கேற ஆரம்பித்தது. பணி மாறுதலில் மணிகண்டத்துக்கு வந்த சில நாள்களிலேயே 1,36,67,438 ரூபாய் அரசு நிதியை கனி கையாடல் செய்திருப்பது ஆய்வில் தெரியவந்தது.

இதனையடுத்து அரசுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாக மணிகண்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் பாரதி மற்றும் திருவெறும்பூர் முன்னாள் வட்டார வளர்ச்சி அலுவலர் லலிதா ஆகியோர் கனி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருச்சி மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் கொடுத்தனர். அதனடிப்படையில் இரண்டு ஊராட்சி ஒன்றியங்களிலும் 2,37,25,039 ரூபாய் அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறி வழக்கு பதிவுசெய்த போலீஸார், கனியைக் கைதுசெய்தனர்.

கைது

இது குறித்து விஷயமறிந்த அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். “தன்னுடைய பணிக்காலத்தில் கணக்காளர் கனி, நிதி கையாடல் செய்திருப்பது தெரியவந்ததன் அடிப்படையில், திருச்சி மாவட்ட ஆட்சியர் கனியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இதற்கிடையே அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில், கனியின் வீட்டில் குற்றப்பிரிவு போலீஸார் சோதனை நடத்தினர். அந்தச் சோதனையில் கையாடல் செய்ததற்கான சில ஆவணங்கள் சிக்கியிருக்கின்றன. மேலும், கையாடல் செய்த பணத்தில் கோடிக்கணக்கான ரூபாயைப் போட்டு, வேங்கூர் பகுதியில் கனி சொந்தமாக பிரமாண்டமான பங்களா வீட்டைக் கட்டி வருவதும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. கிடைத்த ஆவணங்களை வைத்து விசாரணை செய்து வருகிறோம். இதற்கு உடந்தையாக வேறு யாரெல்லாம் இருந்தார்களோ அவர்கள்மீதும் நிச்சயமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.