திருவண்ணாமலையில் சாதிச் சான்றிதழ் வழங்க வருவாய்த்துறை அதிகாரிகள் மறுத்ததால், கல்லூரியில் சேர முடியவில்லை என்ற விரக்தியில் பட்டியலின மாணவி தற்கொலை செய்துகொண்டதற்கு, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம் தெரிவித்திருக்கிறது.

திருவண்ணாமலை

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் இது தொடர்பாக விடுத்திருக்கும் அறிக்கையில், “திருவண்ணாமலை மாவட்டம், எடப்பாளையம், எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த முருகன்-சரோஜா தம்பதியின் மகள் ராஜேஸ்வரி. முருகன் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

பன்னிரண்டாம் வகுப்பில் 375 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்த பட்டியலின பன்னியாண்டி சமூகத்தைச் சேர்ந்த மாணவி ராஜேஸ்வரி, கல்லூரியில் சேர சாதிச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்திருக்கிறார்.

விஷம் குடித்துத் தற்கொலை

`திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்தச் சமூக சாதிச் சான்றிதழ் வழங்கப்படுவதில்லை, அதனால் ராஜேஸ்வரிக்கு சாதிச் சான்றிதழ் வழங்க இயலாது’ என வருவாய்த்துறை அதிகாரிகள் பதிலளித்திருக்கின்றனர்.

தன்னால் கல்லூரியில் சேர்ந்து படிக்க முடியவில்லையே என மனமுடைந்த ராஜேஸ்வரி, கடந்த 17-ம் தேதி விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.

அதையடுத்து, திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அவர் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் 22-ம் தேதி (நேற்று) அதிகாலை மரணமடைந்துவிட்டார்.

சாமுவேல்ராஜ்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இந்தச் சமூக மக்கள் பரவலாக வசித்து வருகின்றனர். இவர்கள் திருவண்ணாமலையில் வாழ்ந்து வரும் பன்னியாண்டி சமூக மக்களின் ரத்த உறவுகள்தான் என்றாலும், திருவண்ணாமலையில் சாதிச் சான்று மறுக்கப்படுவது சரியானதல்ல. இந்தத் தடைதான் மாணவி ராஜேஸ்வரியின் மரணத்துக்குக் காரணமாகியிருக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டத்திலும் பண்ணியாண்டி இன மக்களுக்குப் பட்டியலின சாதிச் சான்று, திருத்தப்பட்ட சட்டம் 1976 வரிசை எண் 55-ன்படி வழங்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்துவதோடு, மாணவி ராஜேஸ்வரியின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடுகள் வழங்கிட வேண்டும்” என்று தெரிவித்திருக்கின்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.