விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலில் பட்டியல் சமூக மக்கள் சாமி தரிசனம் செய்வதற்கு மாற்றுச் சமூக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து, கடந்த 1-ம் தேதி மாலை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனியைச் சந்தித்து பேசியிருந்தனர் விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் மற்றும் காட்டுமன்னார்கோயில் எம்.எல்.ஏ சிந்தனைச்செல்வன். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிந்தனைச்செல்வன், “பொறுப்புள்ள அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அவர்கள், `கோயில் உள்ளே ஆதிதிராவிடர் சமூக மக்கள் நுழைந்தால், சாதிக் கலவரம் வெடிக்கும்’ என்று ஒரு சாதிய தலைவரைப் போல பேசியிருப்பது கண்டனத்திற்கு உரியது, அருவருப்பானது” என்று தெரிவித்திருந்தார். 

சிந்தனைச்செல்வன்

இந்த நிலையில், 4-ம் தேதி விழுப்புரம் அ.தி.மு.க கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம். அப்போது பேசிய அவர், “ `இந்த தி.மு.க ஆட்சியில், கள்ளச்சாராயம் விற்கப்படுவது மட்டுமின்றி, அரசு டாஸ்மார்க் கடைகளிலும் கலர் கலந்த கள்ளச்சாராயம் விற்கப்படுகிறது. அரசு விழித்துக்கொள்ள வேண்டும். எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதனால் உயிரிழப்புகள் ஏற்படும்’ என்று நான் பேசியிருந்தேன். 

நான் சொன்ன இரண்டு நாள்களிலேயே தஞ்சாவூர் பகுதியில் டாஸ்மாக்கில் மது அருந்திய 2 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். ஆனால், 24 மணி நேரத்துக்குள்ளாகவே காவல்துறை ஓர் அறிக்கை வெளியிடுகிறது. அதில், ‘இந்த மதுபானத்தில் சயனைடு கலந்து குடித்திருக்கிறார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதிலே சயனைடு யார் கலந்தார்கள் என்பதற்கு இதுவரை பதிலில்லை. அதேபோல், மதுரை மாவட்டம், மேலூர் அருகே பிடாரிப்பட்டி டாஸ்மாக்கில் மது அருந்திய கோவில் பூசாரி, அவருடைய நண்பர் மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, பூசாரி இறந்திருக்கிறார். மீதி இரண்டு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உடனே போலீஸ் சொல்கிறது, `பெயின்ட் தண்ணீரை கலந்து குடித்திருப்பார்கள்’ என்று. அரசு, காவல்துறையின் கையைக் கட்டி போட்டிருக்கிறதா… அல்லது தங்களின் தவற்றை மறைக்க இந்தக் காவல்துறை அரசுக்கு தவறான தகவல்களை தருகிறதா..? 

சி.வி.சண்முகம்

இந்த அரசு நடத்துகின்ற டாஸ்மாக் கடைகளில், அரசுக்கு தெரிந்தே போலி கலர் சாராயங்கள் விற்கப்படுகின்றன. இதனால் அதை அருந்துகின்ற மக்களுக்கு உடல் உபாதைகள், உயிரிழப்புகள் ஏற்படுகிறது. குறிப்பாக கோடிக்கணக்கான வரி ஏய்ப்பு நடத்தப்படுகிறது. ஆகவே, டாஸ்மாக்கில் மது அருந்துவதால் மிகப்பெரிய விபத்து ஏற்படுவதற்கு முன்பாக, மீண்டும் ஓர் எக்கியார் குப்பம் சம்பவம் நடப்பதற்கு முன்பாக, இந்த அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டு நாள்களுக்கு முன்பாக, வி.சி.க-வின் எம்.எல்.ஏ சிந்தனைச்செல்வன் அவர்கள் விழுப்புரத்தில் பேட்டி அளித்திருக்கிறார். அவர், நான் அளித்தப் பேட்டியை முழுவதுமாக பார்த்தாரா என்று தெரியவில்லை. பார்த்திருந்தால் அப்படி பேசி இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அவரைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். 

நான் முன்பு பேசியதை இப்போது மீண்டும் கூறுகிறேன். `மேல்பாதி கோயில் விவகாரம் இரண்டு மாதகாலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பொன்முடியின் நிலம் மேல்பாதி அருகே இருக்கிறது. அவருக்கு இந்தப் பிரச்னை தெரியாதா… அமைச்சரான அவர், இந்தப் பிரச்னையைத் தீர்க்க வேண்டும். ஆனால், அதனை செய்யாமல் இன்றைக்கு எக்கியார்குப்பம் கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்தை திசை திருப்புவதற்காகவும், தன்மீதான விமர்சனங்களை திசை திருப்புவதற்காகவும் இன்றைக்கு சாதி கலவரத்தை உருவாக்கப் பார்க்கிறார்’ என்றுதான் நான் அன்று சொன்னேன். 

சி.வி.சண்முகம், பொன்முடி

இதிலே நான் எந்த இடத்தில் அவர் (சிந்தனைச்செல்வன்), சொன்னதைப் போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கிறேன் என்பதனை அவர் தெளிவுபடுத்த வேண்டும். தெரியாமல் சொல்லியிருந்தால் பிரச்னை இல்லை. இல்லை… தி.மு.க அரசுக்கு முட்டுக் கொடுப்பதற்காக இப்படிப்பட்ட பேட்டியை அவர் கொடுத்திருக்கிறாரா என்ற சந்தேகமும் எழுந்திருக்கிறது. வேங்கைவயல் சம்பவத்தில் இந்த ஆட்சியில் இதுவரை நடவடிக்கை இல்லை. நீதிமன்றம் தலையிட்டு ஒரு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டிருக்கிறது. இதுதான் இன்றைய அரசு.

திரௌபதி அம்மன் ஆலயம் – மேல்பாதி

ஆகவே, இங்கிருக்கின்ற தி.மு.க-வைச் சேர்ந்த அமைச்சர்களின் தவறுகளையும், அவதூறுகளையும் மறைப்பதற்காக… இன்றைக்குத் தவறான தகவல்களை அவர்களுக்காக நீங்கள் முட்டுக் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். உண்மை என்ன என்பதை சிந்தனைச்செல்வன் தெரிந்து கொண்டு பேச வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். சட்டம் என்பது அனைவருக்கும் சமம். கோயில் என்பது அனைவருக்கும் பொதுவானது, அதில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது. எல்லோரும் கோயில் உள்ளே செல்வதற்கு முழு உரிமை உண்டு. இதுதான் எங்களின் நிலைப்பாடு” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.