விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில்  பட்டியலின இளைஞர் ஒருவர், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள  கோயிலுள்ளே சென்றதற்காக ஆதிக்க சமூகத்தினர் சிலரால் திட்டி, தாக்கப்பட்ட சம்பவம் கடந்த ஏப்ரல் மாதம் பரபரப்பை ஏற்படுத்தியது. மாவட்ட நிர்வாகம் பல கட்டமாக நடத்திய இரு தரப்பு சமாதான பேச்சுவார்த்தையில், ஆதிக்க சமூகத்தினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால் கோயிலுள்ளே செல்ல முடியாமல் 50 நாள்களுக்கும் மேலாக காத்துக் கிடக்கின்றனர் பட்டியலின மக்கள். இந்த நிலையில், நேற்று மாலை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனியை சந்தித்து பேசினர் விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் மற்றும் காட்டுமன்னார்கோயில் எம்.எல்.ஏ சிந்தனைச்செல்வன் ஆகியோர்.

விழுப்புரம் எம்.பி ரவிக்குமார், எம்.எல்.ஏ சிந்தனைச்செல்வன்.

அதனைத் தொடர்ந்து அவர்கள் செய்தியார்களை சந்தித்தனர். அப்போது பேசிய எம்.பி ரவிக்குமார், “மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில், இந்து சமய அறநிலைத்துறையின் பட்டியலிடப்படாத கோயிலாகும். அதற்கென பதிவு எண் இருக்கிறது. ‘அதற்கு மாறான ஆவணங்கள் மாற்று சமூக தரப்பிடம் இருந்தால், அதனை வாங்கி பரிசீலியுங்கள்’ என்று இந்து சமய அறநிலைத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, மேல்பாதி கிராமத்தின் எதிர் தரப்பு மனுதாரரை இன்று (01.06.2023) நேரில் ஆஜராகி, தங்களிடம் உள்ள ஆவணத்தை காட்டும்படி இந்து சமய அறநிலைத்துறை அவர்களுக்கு நோட்டீஸ் அளித்திருந்தது. ஆனால் அவர்கள் இன்றைய தினம் வரவில்லை.

இந்து சமய அறநிலையத்துறைக்கு கடமை இருக்கிறது. எனவே, அங்கு வழிபட வரும் மனிதர்களிடையே பாகுபாடு காட்டக்கூடாது. இந்து சமய அறநிலைத்துறை சார்பில் அந்த கோயிலுக்கென தற்கார் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் பொறுப்பெடுத்து, அனைத்து சமூக மக்களும் எந்த பேதமுமின்றி அந்த கோயிலில் வழிபடுவதை உறுதி செய்ய வேண்டும். இதேபோல், இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட மரக்காணத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலிலே… பட்டியல் சமூக மக்களை உபயோதாரர்களாக சேர்க்க வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த நாகராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, ஆணையும் பெற்றிருக்கிறார். ஆனால், ‘தற்போது திருவிழா நடப்பதால் அடுத்த ஆண்டு இதனை பரிசீலிக்கலாம். தீபாரதனை மட்டும் கொடுக்கலாம், தீமிதி திருவிழாவிற்கு விறகு உபயங்கள் வழங்கலாம். மற்ற விஷயங்கள் பற்றி அடுத்து பரிசீலிக்கலாம்’ என்று அதிகாரிகள் சொல்லியிருக்கிறார்கள். இதுவும் முறையானதல்ல. 

எதிர்ப்பு தெரிவித்த மாற்று சமூகத்தினர் – மேல்பாதி

சென்னை உயர்நீதிமன்றம் தெளிவாக ஆணையிட்ட பின்னரும் அதை மதிக்காதது சரியல்ல. டாக்டர் கலைஞர் அவர்கள், 40 ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்து சமய அறநிலைத்துறை சட்டத்தை திருத்தி, அதன் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் ஆதிதிராவிட சமூகப் பெண் ஒருவர் அறங்காவலராக நியமிக்கப்பட வேண்டும் என்று கொண்டு வந்தார். அது காலம் காலமாக நடைமுறையில் இருக்கிறது. ஆனால், விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் இங்குள்ள கோயில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்படாத நிலை இருக்கிறது. அதைப் பற்றி விசாரிக்கும் போது, ஆதிதிராவிடரை அறங்காவலர்களாக நியமிக்க வேண்டும் என்பதற்காகவே யாரையும் நியமிக்காமல் வைத்திருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது. இந்து சமய அறநிலைத்துறை ஆதிதிராவிட சமூகத்தினரை இந்துக்களாக கருதுகிறதா இல்லையா? என்கிற கேள்வி எழுகிறது. இது சரியானதல்ல. எனவே, இந்து சமய அறநிலையத்துறை தனது போக்கை திருத்திக்கொண்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார் காட்டமாக.

மேலும், காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் பேசுகையில், “விழுப்புரம் மாவட்டம், நல்லிணக்கத்திற்கு அடையாளமாக திகழக்கூடிய பகுதி. வன்னிய சமூக பெருமக்களும், ஆதிதிராவிட மக்களும் இணக்கமாக வாழக்கூடிய பகுதியாக இருக்கும் விழுப்புரத்தில், சமீப காலமாக சில சமூக விரோதிகள் மேல்பாதி கிராமத்தில் சாதி மோதலை உருவாக்கும் வகையில் செயலாற்றி வருகிறார்கள். ஏற்கனவே நடைபெற்ற திருவிழாக்களில் அனைத்து சமூக மக்களும் அந்த கோவில் உள்ளே சென்று அம்மனை வழிபடக்கூடிய நிலை இருந்திருக்கிறது. அதேபோல், திருவிழாவின் போது ஆதிதிராவிட சமூக மக்களுக்கு ஒரு நாள் உபயம் என்ற சமூக நல்லிணக்க முறையும் இருந்திருக்கிறது. 

சிந்தனை செல்வன்

இப்படிப்பட்ட இடத்தில் சில சமூக விரோத சக்திகள் உள்ளே புகுந்து, ‘ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள் கோயில் உள்ளே வரக்கூடாது’ என்ற புதிய கதையை கிளப்பி விட்டிருக்கிறார்கள். இந்த நிலையிலே, இந்த கோயில் தனியாருக்கு சொந்தமா… இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமா.. என்று நீதிமன்றத்தை நோக்கி திசை திருப்பும் முயற்சியும் தொடங்கியிருக்கிறார்கள். இதனால் ஏற்பட்டுள்ள சமூக பதற்றத்தை தணிக்க வேண்டிய பொறுப்புள்ள அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அவர்கள், “கோயில் உள்ளே ஆதிதிராவிடர் சமூக மக்கள் நுழைந்தால், சாதி கலவரம் வெடிக்கும்” என்று ஒரு சாதிய தலைவரைப் போல பேசியிருப்பது கண்டனத்திற்கு உரியது, அருவருப்பானது. மேல்பாதி விவகாரம் தொடர்பாக இன்று நாங்கள் மாவட்ட ஆட்சியரிடம் பேசியபோது, நாளைய தினம் இறுதியான, சட்டபூர்வமாக ஒரு முடிவை அறிவிப்பதாக சொல்லியிருக்கிறார்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.