தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் வசித்துவந்த கணவன்- மனைவிக்கு கடந்த மாதம் இரண்டாவது குழந்தை பிறந்திருக்கிறது. இந்த நிலையில், குழந்தைப் பிறந்து ஒரு மாதம் கூட கடக்காத நிலையில், கடந்த மே 20-ம் தேதி கணவன் அவரின் மனைவியை உடலுறவுக்கு அழைத்திருக்கிறார். அதற்கு மனைவி மறுப்பு தெரிவித்திருக்கிறார். இதையடுத்து, இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த கணவன், மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலைசெய்திருக்கிறார். அதன் பிறகு தன்னுடைய தவற்றை உணர்ந்த அவர், தனது உறவினர்களிடம் நடந்தவற்றைத் தெரிவித்திருக்கிறார். உடனே, அவரின் உறவினர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றிருக்கிறார்கள். அந்தப் பெண்ணைப் பரிசோதித்த மருத்துவர்கள், அந்தப் பெண் இறந்துவிட்டதாகத் தெரிவித்திருக்கின்றனர்.
இதற்கிடையே, பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை இது குறித்து காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார். இந்தக் கொலை வழக்கு தொடர்பான விசாரணையில், இத்தனை நாள்களாக குற்றத்தை மறுத்துவந்த குற்றவாளி, தற்போது ‘உடலுறவுக்கு மறுத்ததால் என் மனைவியைக் கொலைசெய்தேன்’ எனத் தன்னுடையக் குற்றத்தை ஒப்புக்கொண்டிருக்கிறார்.
மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலை காவல்துறை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியது. அதில், இறந்தவரின் கழுத்தில் நகக்கீறல்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, குற்றம்சாட்டப்பட்டவர்மீது கொலை வழக்கு பதிவுசெய்து விசாரித்துவருகிறது ஹைதராபாத் காவல்துறை.