நம்மில் பெரும்பாலோர் வீட்டுக் கடன் மூலம்தான் வீடு, அடுக்குமாடி குடியிருப்பை வாங்குகிறோம். சொந்தமாக இடம் இருந்தாலும் அதில் வீடு கட்ட வீட்டுக் கடன் வாங்குகிறோம். வீடு வாங்கும் போது வங்கி அல்லது வீட்டு வசதி நிறுவனம் அல்லது நிதி நிறுவனம் வீட்டின் மதிப்பில் சுமார் 80 சதவிகித தொகையை கடனாக வழங்கும். இது வீடு வாங்குபவரின் கடனை திரும்பச் செலுத்தும் திறன் அடிப்படையில் முடிவு செய்யப்படும்.

வீட்டுக் கடன்

உதாரணத்துக்கு வீட்டின் மதிப்பு ரூ.50 லட்சம் என வைத்துக் கொள்வோம். இதில் 20% என்பது ரூ.10 லட்சம் ஆகும். இந்தத் தொகையை வீடு வாங்குபவர் கையிலிருந்து கொடுக்க வேண்டும். மீதித் தொகை ரூ.40 லட்சம் வீட்டுக் கடனாக கிடைக்கும். தற்போது வீட்டுக் கடனுக்கான வட்டி 9.55% ஆக உள்ளது. கடனை 10 ஆண்டுகளில் திரும்பக் கட்டுவதாக இருந்தால் மாதத் தவணை ரூ. 51,870 ஆக இருக்கும். இதுவே கடனை 15 ஆண்டுகளில் திரும்பக் கட்டுவதாக இருந்தால் மாதத் தவணை ரூ.41,890 ஆக இருக்கும். 

இதுவே கடனை 20 ஆண்டுகளில் திரும்பக் கட்டுவதாக இருந்தால் மாதத் தவணை ரூ.37,415 ஆக குறையும். இதுவே கடனை 25 ஆண்டுகளில் திரும்பக் கட்டுவதாக இருந்தால் மாதத் தவணை ரூ.35,090 ஆக இருக்கும். இதுவே கடனை 30 ஆண்டுகளில் திரும்பக் கட்டுவதாக இருந்தால் மாதத் தவணை ரூ.33,780 ஆக குறையும்.

வீட்டுக் கடன்

சம்பளத்தில் 40% வீட்டுக் கடன் தவணை..!

இந்த மாதத் தவணை தொகை என்பது ஒருவரின் மாத ஊதியத்தில் 40 சதவிகிதத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும். ஒருவரின் மாதச் சம்பளம் ரூ. 1 லட்சம் என வைத்துக் கொள்வோம். இதில் 40% என்பதும் ரூ.40,000 ஆகும். இவர் ரூ.40 லட்சம் வீட்டுக் கடன் வாங்கும்பட்சத்தில் இவரை 15 ஆண்டுகளில் கடனை கட்ட வங்கி அனுமதிக்கும் பட்சத்தில் அவருக்கான மாதத் தவணை ரூ. ரூ.41,890 ஆக இருக்கும். இந்த அளவுக்கு மாதத் தவணை கட்டுவது கடினமாக இருக்கும் என்றால் கடனை 20 ஆண்டுகளில் திரும்பக் கட்டுவதாக திட்டமிட்டால் மாதத் தவணை ரூ.37,415 ஆக இருக்கும். இல்லை இதை விட குறைவாக மாதத் தவணை இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தால் அவருக்கு இன்னும் பணிக் காலம் 25 அல்லது 30 ஆண்டுகள் இருக்கும்பட்சத்தில் முறையே ரூ.35,090 அல்லது ரூ.33,780- ஐ மாதத் தவணையை தேர்வு செய்து கொள்ளலாம்.

அளவுக்கு அதிகமாக கடன் தவணை இருந்தால் சொந்த வீட்டில் சுகமாக வாழ முடியாது. பிள்ளைகளின் உயர்கல்வி, கல்யாணம், பணி ஓய்வுக் காலம் ஆகிய முக்கியமான இதர நிதி இலக்குகளுக்கு போதிய முதலீடுகளை மேற்கொள்ள முடியாது.

வீட்டுக் கடன்

 ஸ்டெப்-அப் இ.எம்.ஐ…!

கணவன்- மனைவி இருவரும் வேலை பார்க்கும் பட்சத்தில் வீட்டுக் கடனுக்கான மாதத் தவணை இருவரின் சம்பளத்தில் சேர்ந்த தொகையில் 50-55 சதவிகிதம் வரைக்கும் கூட இருக்கலாம். உதாரணத்துக்கு கணவரின் மாதச் சம்பளம் ரூ.1 லட்சம். மனைவியின் மாதச் சம்பளம் ரூ. 60,000 என்றால் குடும்பத்தின் மொத்த மாதச் சம்பளம் ரு. 1.60 லட்சம் ஆகும். இதில் 50-55% என்பது ரூ.80,000 -88,000 ஆக வீட்டுக் கடன் மாதத் தவணை இருக்கலாம். அதேநேரத்தில், கார் கடன், தனிநபர் கடன்கள் இருந்தால் அதற்கான இ.எம்.ஐ. தொகையை கழித்து கொண்டு, வீட்டுக் கடன் மாதத் தவணையை முடிவு செய்வது நல்லது. இதர கடன்கள் சில ஆண்டுகளில் முடிந்துவிடும் என்கிறபட்சத்தில் வீட்டுக் கடன் தவணையை ஆரம்ப ஆண்டுகளில் குறைவாக வைத்துக்கொண்டு, சிறிது காலம் கழித்து அதிகரித்து கொள்ளலாம். பல வங்கிகள், வீட்டு வசதி நிறுவனங்கள் இதனை ஸ்டெப்-அப் இ.எம்.ஐ என்கிற பெயரில் அளித்து வருகின்றன.

இதர நிதி இலக்குகள்..!

ஆரம்பத்தில் வீட்டுக் கடன் தவணையை கைக்கு அடக்கமாக குறைவாக வைத்துக் கொள்வது நல்லது. பின்னர் சம்பளம் அதிகரிக்கும் போது ஆண்டுக்கு சில இ.எம்.ஐகளை அதிகரித்து கட்டுவது மூலம் கடனை, திட்டமிட்ட ஆண்டுகளை விட குறைவான காலத்தில் கட்டி முடிக்க முடியும். இந்தியாவை பொறுத்த வரையில் பொதுவாக 15, 20 ஆண்டுகளுக்கு வீட்டுக் கடன் கட்டுவது போல் வாங்குகிறார்கள்.

ஆர். வெங்கடேஷ், நிறுவனர்
www.gururamfinancialservices.com

ஆனால், கடனை 7-8 ஆண்டுகளில் அடைத்துவிடுகிறார்கள், காரணம், நம்மவர்கள் கடன் இல்லாத வாழ்க்கையை எப்போதும் பெரிதும் விரும்புகிறார்கள்.

இப்படி செய்வதன் மூலம் அடுத்த நிதி இலக்குகளுக்கு முதலீடு செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். மேலும், இரண்டாவது மூன்றாவது வீடுகளை கூட வாங்கி விடுகிறார்கள். வீட்டுக்கு எடுத்து வரும் சம்பளத்தில் வீட்டுக் கடன் மாதத் தவணை 30% அளவுக்கு இருந்தால், எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் குடும்பச் செலவுகள் மற்றும் இதர நிதித் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும். 

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.