கும்பகோணம்: மாற்றுத்திறனாளி வெட்டிக் கொலை – கள்ளச்சாரயம் குறித்து தகவல் கொடுத்ததால் கொலையா?!

கும்பகோணத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த நபர் குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்த கொத்தனார் ஒருவர் மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டதாக சொல்லப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவரின் மனைவி மற்றும் உறவினர் குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

உறவினர்கள் போராட்டம்

கும்பகோணம், திருவிடைமருதூர் அருகே உள்ள நரசிங்கம்பேட்டை அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் தனபால்(32) மாற்றுத்திறனாளியான இவர் கொத்தனார் வேலை செய்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. அந்த குழந்தை வாய் பேசாத, காது கேட்காத மாற்றுத்திறனாளி. தனபால் நேற்று இரவு நரசிங்கம்பேட்டை கடைத்தெருவில் தனது நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, டூவீலரில் அங்கு வந்த மூன்று மர்ம நபர்கள் தனபாலை வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர்.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தனபாலை அருகில் இருந்தவர்கள் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே தனபால் உயிரிழந்து விட்டார். அவரது உடல் உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது.

கும்பகோணத்தில் போராட்டம் நடத்திய உறவினர்கள்

இது குறித்து திருநீலக்குடி போலீஸார் வழக்கு பதிவு செய்து தனபாலை கொலை செய்து விட்டு தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்நிலையில் இன்று தனபாலின் மனைவி மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட பலர் அரசு மருத்துவமனை முன்பு திரண்டனர். கள்ளச்சாராயம் விற்பனை செய்வது தொடர்பாக, போலீஸாருக்கு தகவல் கொடுத்ததாலேயே தனபால் கொலை செய்யப்பட்டுள்ளார். எனவே அந்த சாராய வியாபாரியான குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என கூறி உடலை வாங்க மறுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என கோஷமிட்டனர். தனபாலின் மனைவி, வாய்பேசாத பெண் குழந்தையை வைத்து கொண்டு இனி நான் என்ன செய்யப் போகிறேன் என கதறியது சோகத்தை ஏற்படுத்தியது. இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து வந்த கும்பகோணம் டி.எஸ்.பி., மகேஷ் குமார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, குற்றவாளிகளை விரைவில் கைது செய்வதாக உறுதியளித்தார். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

சாலை மறியல்

இது குறித்து தனபால் குடும்பத்தினர் கூறுகையில், “எங்க பகுதியில் ஒருவர் கள்ளச்சாரயம் விற்பனை செய்து வந்தார். தனபாலின் உறவினர் ஒருவர் இது தொடர்பாக எதிர்த்து கேட்டதால் சில மாதங்களுக்கு முன்பு கள்ளச்சாராயம் விற்பனை செய்கின்ற அந்த நபர் அவரை வெட்டினார். இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. அதன் பின்னரும் அவர் கள்ளச்சாராயம் விற்பதை நிறுத்தவில்லை.

இதனை தனபால், திருநீலக்குடி போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். இது எப்படியோ கள்ளச்சாராயம் விற்பனை செய்கின்ற நபருக்கு தெரிய அந்த ஆத்திரத்தில் தனபாலை வெட்டி கொலை செய்திருக்கிறார். ஆனால் போலீஸ் இதனை திசைதிருப்பும் நோக்கத்தில் கள்ளச்சாராய விவகாரத்தை சேர்க்காமல் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்” எனத் தெரிவித்தனர். போலீஸ் தரப்பிலோ, முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாக தெரிவிக்கிறார்கள். முழுமையான விசாரணையின் முடிவில் தான் உண்மை தெரியவரும்!